குளிகனின் நேரமே குளிகை எனப்படும். யார் அந்தக் குளிகன்? குளிகன் என்றால் மாந்தன் அல்லது மாந்தி என்றும், சனீஸ்வரன் புதல்வன் என்றும் புராணங்கள் கூறுகிறது. இராகுகாலம், எமகண்டத்தில் எப்படி ஒரு நல்ல செயலை செய்ய மாட்டார்களோ, அதேபோல குளிகை நேரத்தில் செய்யப்படும் எந்தக் காரியமும் திரும்பத் திரும்ப நடக்கும் என்ற நம்பிக்கை வெகு காலமாக இருந்து வருகிறது. இதனால் நல்ல காரியங்களுக்கு குளிகை நேரம் உகந்ததாகவும், ஈமச்சடங்கு போன்ற கெட்ட காரியங்களுக்கு இது பொருத்தம் இல்லாததாகவும் கருதப்படுகிறது.
என்ன செய்யலாம்? செய்யக்கூடாது
குளிகை நேரத்தில் ஒரு காரியத்தைத் தொடங்கினால், அது வளர்ந்து கொண்டே இருக்கும்.
இதனால் அடகுவைப்பது, கடன் வாங்குவது, வீட்டைக் காலி செய்வது, இறந்தவர் உடலைக் கொண்டு செல்வது போன்ற விஷயங்களை குளிகை நேரத்தில் செய்யக் கூடாது.
அதேபோல, குளிகை என்ற நல்ல வேளையில் சொத்து வாங்குவது, சுப நிகழ்வுகள் நடத்தலாம். (அதற்காக திருமணம் செய்து விடாதீர்கள். திரும்ப, திரும்ப திருமணம் நடந்து கொண்டே இருக்கும்).
கடனைத் திருப்பிக் கொடுப்பது, பிறந்தநாள் கொண்டாடுவது போன்றவற்றைச் செய்வதால், அவை எந்தத் தடையும் இல்லாமல் நடப்பது மட்டுமின்றி, இது போன்ற நல்ல நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும்.