download_indicator

குபேரனின் தூதுவன் இராவணனுக்கு சொன்ன செய்தி

இராவணனால் அடித்து விரட்டப்பட்ட குபேரன், இலங்கை மாநகரை விட மிகப்பிரம்மாண்டமாக, சொர்க்கபுரியோ என்று நினைக்குமளவிற்கு ஒரு அற்புதமான அழகாபுரி என்ற நகரை உருவாக்கி, ஆட்சி செய்து வந்தபோது இராவணனுக்கு ஒரு தூதுவனை அனுப்பினான். அந்த தூதரை குபேரன் எதற்காக அனுப்பினான், என்ன தகவல் சொல்லி அனுப்பினான் என்று அறிந்திடலாம்.

சகோதர, சகோதரிக்கு

மயன் என்ற அசுர குல சிற்பியின் மகள் மண்டோதரியை, இராவணன் திருமணம் செய்து அரண்மனைக்கு அழைத்து வந்தபோது, சக்தி என்ற அளவிட முடியாத பெருமை வாய்ந்த ஆயுதத்தை மயன், இராவணனுக்கு கொடுத்தான்.

தனக்கு திருமணம் நடந்ததையடுத்து, தனது சகோதர, சகோதரிக்கும் திருமணம் செய்து வைக்க விரும்பிய இராவணன், விரோசனன் என்பவருடைய பேத்தி வஜ்ர ஜ்வாலா என்ற பெண்ணை, கும்பகர்ணனுக்கு திருமணம் செய்து வைத்தான்.

சைலூஷன் என்ற கந்தர்வனின் மகள் சரமா என்பவளை விபீஷணனுக்கு திருமணம் செய்து வைத்தான்.

அதேபோல் சகோதரி சூர்ப்பனகைக்கு காலக குலத்தில் பிறந்த வித்யுத்ஜிஹ்வன் என்பவனுடன் திருமணம் செய்து கொடுத்தான்.

திருமணம் முடிந்ததும் அனைவருக்கும் தனித்தனியாக அரண்மனை கட்டிக்கொடுத்து எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கும்படி இராவணன் செய்தான்.

இந்நிலையில், இராவணனுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. மேகம் இடிப்பதுபோல் உரத்த குரலில் அந்த குழந்தை அழுததால், அவனுக்கு மேகநாதன் என்று பெயரிட்டான்.

குபேரனின் தூதுவன்

சிவபெருமானிடமிருந்து எண்ணற்ற வரங்களை வாங்கியதால், இராவணனின் அநியாய அக்கிரம செயல்கள் அளவுக்கு மீறி சென்றன.

தேவர்கள் அனைவரையும் கொடுமைப்படுத்தினான், அழகான பெண்களையெல்லாம் கவர்ந்து வந்து தனது ஆசை நாயகிகளாக்கினான்.

தன் வசமாகாத பெண்களை சித்திரவதை செய்து தனது விருப்பத்திற்கு அடிபணிய வைத்தான்.

நவக்கிரக அதிபதிகளை தனது அரியணையின் படிகளாக்கி அவர்கள்மீது ஏறிச்சென்று அமர்ந்தான்.

முனிவர்கள், ரிஷிகள் செய்த யாகங்களை அசுரர்களை ஏவி அழிக்க செய்தான்.

இவ்வாறாக இராவணனின் அக்கிரமம் எல்லைமீறி சென்றபோது, அவனை திருத்துவதற்காக குபேரன் தனது தூதுவனை அனுப்பினான்.

தூதன் கூறியதென்ன?

குபேரன் அனுப்பிய தூதன் முதலில் விபீஷணனை சந்தித்து, அவன் மூலமாக இராவணனின் அவைக்கு சென்றான்.

குபேரன் தெரிவித்த வணக்கம், மரியாதைகளை முதலில் கூறிய தூதன், இராவணனின் நலத்தை விசாரித்ததாக கூறி, குபேரனின் ஆட்சி மற்றும் தவம் செய்வது பற்றி தெரிவித்தான்.

தேவர்களின் நந்தனவனத்தை அழிப்பது, ரிஷிகளையும், தேவர்களையும் வதைப்பது போன்ற செயல்கள் தர்மத்திற்குப் புறம்பான செயலாகும்.

புலஸ்தியர் முனிவரின் பரம்பரையில் வந்த நம்மைப்பற்றி வருங்காலம் இழிவாக பேசிவிடக் கூடாது என்பதால், நமது குலத்திற்கு தலை குனிவை ஏற்படுத்தும் செயல்களை உடனடியாக நிறுத்த வேண்டும்.

குலத்தின் பெருமையை கெடுக்கும் அதர்ம செயல்களைச் செய்வது நமது சந்ததியினரை பாதிக்கும்.

எனவே இதுபோல் அதர்ம செயல்களை வருங்காலத்தில் செய்திடாமல், குலத்தின் மாண்பை காத்திட வேண்டும் என்று குபேரன் கூறியதாக தூதன் கூறினான்.

குலத்தின் பெருமையை கெடுக்கும் அதர்ம செயல்களை செய்வது சந்ததியினரை பாதிக்கும் என்ற தகவலை இளைய சமுதாயம் அறிந்திட ஷேர் செய்யுங்கள்.



Follow Us on