
நாம் குடியிருக்கும் வீடு சரியான முறையில் இருக்க வேண்டும் என்பதற்காக வாஸ்து முறைப்படி அமைப்பதுபோல், கோயில்களும் சரியான முறையில் அமைந்திருக்கும்போது அதன் சக்தி என்றும் மிக அதிகமாகவே இருக்கும். அதற்காகத்தான், கோயில்கள் ஆகம விதிப்படியே கட்டப்படுகின்றன. அவற்றில் கோயில் கொடிமரத்திற்கு மிக முக்கியமான பங்கிருப்பதையடுத்து அதன் சிறப்புகளை அறிந்திடலாம்.
துவஜஸ்தம்பம்
ஒவ்வொரு கோயிலிலும் பிரதான கோபுரத்தை கடந்து கோயிலுக்குள் செல்லும்போது, கோயில் கருவறைக்கு நேர் எதிரே பலிபீடத்திற்கு அருகில் கொடிமரம் அமைக்கப்பட்டிருக்கும்.
கொடிமரத்தின் உச்சியில் அந்த கோயிலில் உள்ள பிரதான கடவுளின் வாகனம் இருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், கோயில் திருவிழாவின்போது இந்த கொடிமரத்தில்தான் அதன் கொடியேற்றம் நடைபெறும்.
கொடிமரத்தை சம்ஸ்க்ருதத்தில் ‘துவஜஸ்தம்பம்’ என்று அழைப்பர்.
கொடிமரத்தில் எண்ணற்ற தத்துவங்கள் உள்ளன, மனித உடலுக்கு முதுகெலும்பு முக்கிய ஆதாரமாக இருப்பதுபோல், இந்த கொடிமரமும் கோயிலின் ஆதாரமாக கருதப்படுகிறது.
அதனால்தான், முதுகுத் தண்டுவடத்தில் 32 எலும்பு வளையங்கள் போன்றே, 32 வளையங்களுடன் கோயில் கொடிமரம் காணப்படுகிறது.
முதுகுத்தண்டில் மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணி பூரகம், அனாகதம், விசுக்தி, ஆக்ஞை எனப்படும் ஆறு ஆதாரங்களும், இடகலை, பிங்கலை, சுழுமுனை என்ற மூன்று நாடிகளும் அமைந்துள்ளன.
பொதுவாக இடகலை, பிங்கலை வழியாக செல்லும் பிராண வாயுவை, சுழுமுனை எனும் நடுநாடியில் நிறுத்தி இறைவனை தியானிக்க, மனம் ஒரு நிலைப்படும்.
அந்த அடிப்படையில்தான் கொடி மரம் அமைக்கப்படுகிறது.
மும்மூர்த்திகள்
கொடிமரத்தின் அடிப்பகுதி படைப்பு தொழிலுக்கு உரியவரான பிரம்மாவையும், அதற்கு மேல் உள்ள எண்கோண பகுதி காத்தல் தொழிலுக்கு உரியவரான விஷ்ணுவையும், அதற்கு மேல் உள்ள நீண்ட ருத்ர பாகம், சம்ஹாரத் தொழிலை செய்யும் சிவபெருமானையும் குறிக்கும்.
இதன்மூலம் கொடிமரம், மும்மூர்த்திகளையும், அவர்களின் 3 தொழில்களையும் குறிப்பிடுகின்ற அடையாளமாக உள்ளது.
கோயிலில் அமைக்கப்படும் கொடிமரம் கருவறை விமானத்துக்கு நிகரான உயரத்தில் மட்டுமே இருக்கும்.
அதேபோன்று கருவறையில் இருந்தும், ராஜகோபுரத்தில் இருந்தும் எவ்வளவு தொலைவு இருக்க வேண்டும் என்பதற்கு விதிமுறைகள் உள்ளன.
இத்தகைய கொடிமரம் சந்தனம், தேவதாரு, செண்பகம், வில்வம், மகிழம் போன்ற மரங்களில் இருந்து பெறப்பட்டதாகவே இருக்கும்.
மேலும், கோயிலில் கொடிமரத்தின் அருகில் மட்டுமே தரையில் விழுந்து வணங்க வேண்டும்.
அவ்வாறு வணங்கும்போது, ஆண்கள் அஷ்டாங்க நமஸ்காரமும், பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரமும் செய்ய வேண்டும் என்பது மரபாகும்.
மும்மூர்த்திகளையும், அவர்களது 3 தொழில்களையும் அடையாளமாக கோயில் கொடிமரம் கொண்டுள்ளது என்பதை உங்கள் உறவினர்களும், நண்பர்களும் அறிந்திட செய்யுங்கள் (ஷேர் செய்யுங்கள்).