download_indicator

கோயில் பிரசாதத்தை கீழே கொட்டலாமா?

கோயில்களில் பண்டிகைகளை முன்னிட்டு சர்க்கரை பொங்கல், சுண்டல் போன்ற பிரசாதங்கள் கொடுப்பது வழக்கம். குறிப்பாக பிரதோஷம், சஷ்டி, கிருத்திகை, வைகுண்ட ஏகாதசி, நவராத்திரி, சதுர்த்தி, சிவராத்திரி, ஆவணி திருவிழா போன்ற விசேஷங்களுக்கு பிரசாதம் வழங்குவர். சிவன் கோவிலில் வில்வமும், பெருமாள் கோவிலில் துளசி தீர்த்தமும் கொடுப்பதுண்டு.

போட்டி போட்டு

இந்நிலையில், சனி பிரதோஷம், கார்த்திகை மாத சோமவாரம், சிவராத்திரி, வைகுண்ட ஏகாதசி போன்ற நாட்களில் பக்தர்கள் பலர் போட்டி போட்டு பொங்கல், சாம்பார் சாதம், தயிர் சாதம், சைவ பிரியாணி, கிரேப் சூஸ், ரோஸ் மில்க் போன்றவை வழங்கும்போது பலர் அதை வாங்கி வீணாக்குவதை காணலாம். இதனை, திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலத்தின் போது, கிரிவல பாதைகளிலும், 63 நாயன்மார் திருவிழாவின் போது, சென்னை மயிலாப்பூரில் இவ்வாறு பிரசாதங்களை சாலைகளில் வீணாக்குவதை காணலாம்.

புண்ணியம்

இறைவனுக்கு படைக்கப்பட்ட பிரசாதத்தை வீண் செய்வதால் பெரும் பாவம் நம்மை பிடிக்கும். எனவே, தெரிந்திருந்து எதற்காக நாம் பாவத்தை சேர்க்க வேண்டும். வேண்டும் என்றால் மட்டும் வாங்க வேண்டும். போதும் என நினைத்தால் வாங்கி வீணாக்கக் கூடாது. அத்தகைய உணவு, ஒரு வேளை உணவு கூட சாப்பிட முடியாதவர்களுக்கு கொடுக்கும் போது, அவர்களிடம் காணும் மகிழ்ச்சியால் அல்லது வாழ்த்தால், தலைமுறைக்கும் நமக்கும் புண்ணியம் கிடைக்கும். எனவே, புண்ணியம் வேண்டுமா, பாவம் வேண்டுமா என சிந்தித்து அடுத்த முறை செயல்படுங்கள்.

இந்தியாவில்

இன்றைக்கு உலக மக்கள் தொகை சுமார் 760 கோடி பேரில், 12 சதவீதம் மக்கள் அதாவது கிட்டத்தட்ட 91 கோடி பேர் ஒருவேளை கூட உணவு இல்லாமல் தவிக்கின்றனர். நமது இந்தியாவில் சுமார் 40 லட்சம் பேர் ஒருவேளை உணவு கூட கிடைக்காமல் தவிக்கின்றனர். எனவே, எப்போது, எங்கு சாப்பிட்டாலும், அது வீடோ, ஹோட்டலோ, கேளிக்கை விடுதியோ எதுவாக இருந்தாலும் உணவை வீணாக்குவதை தவிர்ப்பது நல்லது.



Follow Us on