
கர்நாடக மாநிலம், உடுப்பி மாவட்டத்தில் உள்ள கொல்லூர் மூகாம்பிகை அம்மன், கலைகளுக்கு எல்லாம் அதிதேவதையாக கருதப்படுவதால், நாட்டில் இருக்கும் அனைத்து அம்மன் கோயில்களிலும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகின்றது. அதையடுத்து, மூகாம்பிகை அம்மனின் சிறப்புகள் பற்றியும், இக்கோயிலில் உள்ள அதிசயம் வாய்ந்த ஜோதிர்லிங்கம் பற்றியும் அறிந்திடலாம்.
அதிசய ஜோதிர்லிங்கம்
உடுப்பியில் இருந்து சுமார் 80 கி.மீ. தொலைவில் உள்ள கொல்லூர் மூகாம்பிகை சிவசக்தி சொரூபமாக காட்சியளிக்கின்றாள்.
மகிசாசூரனை வதம் செய்த மூகாம்பிகை அம்மன் எழுந்தருளியுள்ள இந்த கோயில், மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் சௌபர்னிகா ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.
மூகாம்பிகை அம்மன் கோயிலில் இருக்கும் ஜோதிர்லிங்கத்தின் மத்தியில் எங்குமில்லாதபடி, அதிசயிக்கத்தக்க தங்க நிறக்கோடு ஒன்றுள்ளது.
இந்தக்கோடு லிங்கத்தை சரிபாதியாக பிரிப்பதுடன், லிங்கத்தின் மீது சூரிய ஒளி படும்போது மட்டும் ஒளிரும். அந்த லிங்கத்தின் வலது பாதி பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரையும், இடது பாதி பார்வதி, லட்சுமி, சரஸ்வதி ஆகியோரையும் சுட்டிக்காட்டுகிறது.
பஞ்சலோக சிலை
நாடு முழுவதும் தீர்த்த யாத்திரையாக சென்ற ஆதிசங்கரர், கொல்லூருக்கு வருகை புரிந்தபோது, கோல முனிவர் வழிபட்ட சுயம்பு லிங்கத் திருமேனியைத் தரிசித்தார்.
லிங்கத்தில் அம்பிகை அரூபமாக இருப்பதைக் கண்டு தவத்தில் ஈடுபட்டு, மனதில் தேவியின் திவ்யதரிசனம் கண்டு மகிழ்ந்தார்.
அதையடுத்து, ஆதி சங்கரர் தன் மனக்கண்ணில் தோன்றிய அம்மன் பற்றி சிற்பிகளிடம் தெரிவித்து, பத்மாசனத்தில் அமர்ந்திருக்கும் கோலத்தில் ஒரு பஞ்சலோக சிலையை அமைத்து ஸ்ரீசக்கரத்தையும் நிறுவினார்.
அந்த ஐம்பொன் விக்கிரகமே இன்றும் கோயிலில் அலங்கார தேவதையாக உள்ளது.
பொதுவாக கோயில்களில் இருக்கும் மூலவர் சிலை, கற்சிலையாகத்தான் இருக்கும்.
ஆனால், மூகாம்பிகை அம்மன் கோயிலில் மட்டும் மூல விக்கிரகம் பஞ்சலோகத்தால் உள்ளது.
இந்த அன்னைக்கு தினமும் மூன்று விதமாக அலங்காரம் செய்யப்படுகிறது.
அதன்படி காலையில் காளியின் அம்சமாகவும், உச்சிப்பொழுதில் லட்சுமி தேவியின் அம்சமாகவும், இரவில் சரஸ்வதி தேவியின் அம்சமாகவும் கருதப்படுகிறாள்.
தங்க ரேகை
கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் செய்யப்படும் அபிஷேக ஆராதனைகள் அனைத்தும் சுயம்பு லிங்கத்திற்கே செய்யப்படுகிறது.
அந்த அபிஷேக நேரத்தில்தான், சிவலிங்கத்தின் மீது கீற்று போல காணப்படும் தங்க ரேகையை தரிசிக்க முடியும்.
சுயம்பு லிங்கத்திற்கு அபிஷேகம் செய்வதன் காரணமாக, மூகாம்பிகைக்கு அபிஷேகம் கிடையாது.
அலங்காரம், புஷ்பாஞ்சலி செய்து தொடர்ந்து பூஜைகள் நடைபெறும்.
கொல்லூரில் மூகாம்பிகை இருப்பது போலவே, தமிழகத்தில் திருவிடைமருதூரிலும் மூகாம்பிகை இருக்கின்றாள்.
கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் தங்க ரேகையுடன் உள்ள அதிசய சிவலிங்கம் பற்றி உங்கள் உறவினர்களும், நண்பர்களும் அறிந்திட ஷேர் செய்யுங்கள்.