download_indicator

திருமணத்தை நிர்ணயிக்கும் கிரக அமைப்பு

திருமணம் சிலருக்கு சீக்கிரத்தில் நடந்து முடிந்து விடுகிறது. சிலருக்கு மிகவும் தாமதம் ஆகிறது. இன்னும் சிலருக்கோ திருமணம் கைகூடாமல் போய் விடுகிறது. அதற்கு ஜோதிடமும், கிரகங்களும், ஜாதக கட்டமுமே காரணமாக அமைகிறது. திருமண அமைப்பில் ஜாதக பலம் மிக முக்கிய அங்கம் வகிக்கிறது. இதில் திருமண விஷயமாக 2, 4, 5, 7, 8 ஆகிய வீடுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. கல்யாண யோகமும், தோஷமும் இந்த வீடுகளில் இருந்துதான் அறியப்படுகிறது. இவை தவிர குரு மற்றும் சுக்கிரன் ஆகிய இரு கிரகங்களும் கூட திருமண யோகம் நன்கு அமைய முக்கியப் பங்கை வகிக்கிறது. குரு பகவான் லக்னத்திற்கு 2, 5, 7, 12 போன்ற இடங்களில் பிற கிரகங்களுடன் சேராமல் தனித்து இருப்பது பல்வேறு பாதிப்புகள் இருக்கும். ஆகையால், திருமண விஷயத்தில் குருவினுடைய அமைப்பை முக்கியமாக பார்ப்பது மிகவும் அவசியமாகும்.

சுக்கிரன்

ஜாதகப் பொருத்தம் பார்க்கும்போது மிக முக்கியமாக நாம் சுக்கிரனின் நிலையைப் பார்க்க வேண்டும். இவர் நீச்சம் அடையாமல் இருப்பது சிறப்பு. சுக்கிரன் களத்திரகாரகன் என்பதால் இவர் ஏழாம் வீட்டில் இருப்பது களத்திர தோஷமாகும். மேலும், இவர் 6, 8, 12 போன்ற ஸ்தானாதிபதிகளுடன் இணையாமல் இருப்பது நன்மையைத் தரும். இவை தவிர திருமணத்தை நிர்ணயிக்க சில தோஷங்களும் முக்கியப் பங்கு வகிக்கிறது. அது பற்றியும் இங்கு காண்போம் வாருங்கள்.

செவ்வாய் தோஷம்

செவ்வாய் நம் ஜாதகத்தில் லக்னத்திற்கு 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் இருந்தால் செவ்வாய் தோஷம் என்கிறோம். இதற்கேற்ப 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருக்கும் ஜாதகங்கள் இரண்டைச் சேர்ப்பதன் மூலம் தோஷம் சமன் அடைகிறது. பெரும்பாலான ஜாதகங்களில் அதாவது 90% சதவீதத்திற்கு மேல் செவ்வாய் தோஷம் நிவர்த்தியாகி இருக்கும். தோஷம் நிவர்த்தியாகி விட்டது என்பதற்காக, செவ்வாய் தோஷம் அறவே இல்லாத ஜாதகங்களை சேர்க்க கூடாது. அதாவது 1, 3, 5, 6, 9, 11-ல் செவ்வாய் உள்ள ஜாதகத்துடன் சேர்க்கக் கூடாது.

ராகு, கேது தோஷம்

1, 2, 7, 8 ஆகிய இடங்களில் ராகு அல்லது கேது இருப்பது சர்ப்ப தோஷம் என்று சொல்லப்படுகிறது. இந்த தோஷ அமைப்புள்ள ஜாதகங்களை அதே சம தோஷமுள்ள ஜாதகத்துடன் சேர்ப்பது தோஷ சமன் ஆகும்.

மாங்கல்ய தோஷம்

பெண்கள் ஜாதகத்தில் லக்னத்திற்கு எட்டாம் இடத்தில் ராகு, கேது, சனி, சூரியன் போன்ற கிரகங்கள் இருப்பது மாங்கல்ய தோஷம் ஆகும். அந்த எட்டாம் வீட்டை குரு மற்றும் சுப கிரகங்கள் பார்த்தால் தோஷ நிவர்த்தி உண்டு.

கோச்சாரம்

கோச்சாரம் என்றால் தற்காலம் ஏற்படும் கிரக மாறுதல்களை குறிப்பதாகும். அதாவது சனிப் பெயர்ச்சி, குரு பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி போன்றவையாகும். இதனால் ஒரு சிலருக்கு மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும். ஒரு சிலருக்கு சரியாகப் பலன் கிடைக்காது. கோச்சாரத்தில் குரு பலன் பற்றி எல்லோரும் அறிவார்கள். குரு பலன் வந்துவிட்டதா என்று கேட்பார்கள். எனினும் இந்த குரு மாறுவதால் எல்லா மாற்றங்களும் நிகழ்வதில்லை. குருபலன் இல்லாத போதும் திருமணம் கூடி வரும். ஏனென்றால் ஜாதக அமைப்பின்படி உள்ள தசாபுக்தி அந்தர யோக நேரமே நமக்கு சுப நிகழ்ச்சிகளை ஏற்படுத்தி தருகின்றன.

ஆகையால், குரு பலன் இல்லையே என்ற கவலை வேண்டாம். எட்டாமிடத்தில் கோச்சாரத்தில் குரு இருந்தாலும் குருவின் பார்வை குடும்ப ஸ்தானமான இரண்டாம் இடத்தில் படுவதால் சுபகாரியங்கள் தங்கு தடையின்றி நடக்கும். ஜென்ம குருவாக இருந்தாலும் குரு பார்வை களத்திர ஸ்தானமான ஏழாம் இடத்தில் படுவதால் திருமண யோகத்தை கொடுப்பார். ஒரு குடும்பத்தில் தாய், தந்தை, திருமண வயதில் உள்ள ஆண், பெண் இருபாலருக்கும் ஏழரைச் சனி நடந்தால் சுபயோக சுப பாக்கியம் கிடைக்கும். பெரியவர்களுக்கு விரய சனி நடக்கும் போது குடும்பத்தில் சுபச் செலவுகளை சனீஸ்வரர் ஏற்படுத்தி வைப்பார்.

தன குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டில் பொங்கு சனியாக வரும் போது திருமண பிராப்தத்தை தருவார். கோச்சார அமைப்பில் ராகு கேது இருக்கும் ராசியை குரு, சுக்கிரன், புதன் ஆகிய கிரகங்கள் வந்து சேரும்போதும் அல்லது கடந்து செல்லும் போதும் அல்லது பார்க்கும் போதும் சுப விசேஷங்கள் கூடிவரும். ராகு கேது ஒருவரின் ராசிக்கு 2, 3, 5, 6, 9, 11 ஆகிய இடங்களில் வரும்போது கல்யாண யோகம் உண்டு. ஆகையால் எதற்குமே நேரம், காலம் மிக முக்கியமாகும்.

திருமண அமைப்பில் ஜாதக பலம் மிக முக்கிய அங்கம் வகிப்பதை அடுத்து உங்கள் ஜாதகத்தில் செவ்வாய் தோஷம், ராகு, கேது தோஷம், மாங்கல்ய தோஷம் அதற்குரிய பரிகாரம் போன்றவற்றை அறிந்திட இங்கே அழுத்தவும்.



Follow Us on