
கேட்டை நட்சத்திரத்தின் நட்சத்திராதிபதி புத கிரகம் ஆவார். இதன் நட்சத்திர தேவதை தேவேந்திரன் ஆவார். அதாவது, இந்திரன் கேட்டை நட்சத்திரத்தில் தான் அவதரித்ததாக சொல்வார்கள். குண்டல வடிவத்தில் இருக்கும் மூன்று நட்சத்திரங்களின் ஒன்று சேர்ந்த தொகுப்பே கேட்டை நட்சத்திரம் ஆகும். அதாவது கேட்டை என்பது தனி ஒரு நட்சத்திரம் கிடையாது.
நாடாள்பவருக்கு
நட்சத்திர மாலா என்ற நூல், கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களை, "வருங்காலத்தை உணர்பவராகவும் தான தருமம் செய்பவராகவும் நட்பு வட்டம் அதிகமுள்ளவராகவும் விளங்குவார்கள்." என்று கூறுகிறது. ஜாதக அலங்காரம் என்னும் நூல், கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களைப் பற்றிக் கூறும் போது, "தந்திரம், சத்தியம், கடவுள் வழிபாடு, அறிவு, நீண்ட உடல்வாகு, அவநம்பிக்கை, ஆகியவை உள்ளவராக இருப்பார்கள்." என்று கூறுகிறது. பிருகத் ஜாதகம், கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களைப் பற்றிக் கூறும் போது, நாடாள்பவருக்கு நண்பராகவும், கண்டிப்பு காட்டுபவராகவும் இருப்பார்கள். அது போல, அதிக நண்பர்கள் அற்றவர், கிடைத்ததைக் கொண்டு திருப்தியடைபவர், பரோபகாரி" என்றும் கூறுகிறது.
திறமைசாலிகள்
மொத்தத்தில் கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், குரு இல்லாமலேயே வில்வித்தையைக் கற்றுக் கொண்ட ஏகலைவனைப் போல யாருடைய உதவியும் இல்லாமல் சுய முயற்சியால் எதிலும் முன்னேறுவார்கள். சிறு வயதிலேயே சொந்த பந்தங்களால் வஞ்சிக்கப்படுவார்கள். ஆரம்பத்தில் வெகுளியாக இருந்து, பின்னர் விவேகியாக மாறுவார்கள். செய்நன்றி மறவாதவர். சண்டை சச்சரவுகளை விரும்பாதவர். சமாதானத்துக்காகக் கடைசி வரை பாடுபடுவார்கள். இவற்றுடன், நுண்ணறிவும், கல்வியும், பேச்சுத்திறனும் பெற்றிருப்பார்கள். மற்றவர்களின் மனநிலையை அறிந்து பேசும் திறமைசாலிகள். எந்தச் செயலை செய்தாலும், வேகமாகச் செய்து முடிக்க வேண்டும் என்று எண்ணுவார்கள். புத்தகங்களைப் படித்துப் பொது அறிவை வளர்த்துக் கொள்வார்கள். இவர்கள் கோட்டையை ஆளமாட்டார்கள். ஆனால், கோட்டையை ஆள்பவர்களுக்கு துணையாக, ஆலோசகர்களாக இருப்பார்கள்.
உங்களுக்கு தெரிந்த கேட்டை நட்சத்திரத்தில் பிறந்த நண்பர்கள், உறவினர்கள் இருந்தால் அவர்களுக்கு இந்த தகவலை தெரிவிக்கலாமே (ஷேர் செய்யுங்கள்).