
இளைத்தவனுக்கு எள்ளு, கொழுத்தவனுக்கு கொள்ளு என்பது பழமொழி. எள்ளின் இலை, பூ, காய், விதை என அனைத்து பகுதிகளும் மருத்துவ குணம் கொண்டுள்ளது. எள்ளில் வெள்ளை எள், கருப்பு எள், சிவப்பு எள், பழுப்பு அல்லது மஞ்சள் நிற எள் என நான்கு வகைகள் உள்ளன. எள்ளில் பல வகை இருந்தாலும் கருப்பு எள் பயன்பாட்டில் அதிகமாய் இருக்கிறது. கருப்பு எள்ளில் அதிக அளவு ஊட்டச்சத்துகளை கொண்டுள்ளது. அவை வைட்டமின்கள் பி, ஈ மற்றும் தியாமின் நிறைந்துள்ளன. மேலும் தாமிரம், மாங்கனீசு, செலினியம், மாலிப்டினம், துத்தநாகம், இரும்பு, பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்களும், டிரிப்டோபான், அமினோ அமிலமும் இதில் உள்ளன. ஆராய்ச்சி ஒன்றில் எள் மற்றும் எள்ளிலிருந்து கிடைக்கும் நல்லெண்ணெய் சர்க்கரை நோயை தடுப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. எனவே கருப்பு எள்ளினால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
நன்மைகள்
கருப்பு எள்ளில் உள்ள கால்சியம் எலும்புகளை வலுவாக வைத்திருக்க உதவுகிறது. இதிலுள்ள துத்தநாகம் எலும்புகளை வலுப்படுத்தவும், எலும்பின் அடர்த்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.
கால் டம்ளர் தண்ணீரில் சிறிதளவு கறுப்பு எள்ளை இரவு ஊறவைத்து, அதை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் எலும்பு பலப்படும். இதனால் மூட்டுவலி வருவதற்கான வாய்ப்பு குறைவு.
இதனை வயதான ஆண்கள் மற்றும் மாதவிடாய் நின்ற பெண்களுக்கு அதிகம் பரிந்துரைக்கப்படுகிறது.
எள்ளுடன் பனை வெல்லம், கருஞ்சீரகம் சேர்த்து சாப்பிட்டு வர பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனைகள் தீரும்.
பாலூட்டும் தாய்மார்களுக்கு கருப்பு எள் பெரும் உதவியாக இருக்கிறது. அவை தாய்ப்பால் சுரத்தலை அதிகரிக்கின்றன.
எள்ளை லேசாக வறுத்து பொடி செய்து நெய்யுடன் சேர்த்து சாப்பிட்டு வர மூலநோய் குணமாக வாய்ப்புள்ளது.
கருப்பு எள்ளில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் (ஃபைபர் மற்றும் லிக்னான்கள்) மற்றும் பைட்டோகெமிக்கல்கள் (பைலோஸ்டெரால்) பெருங்குடல் புற்றுநோய் போன்ற சில புற்றுநோய்களுக்கு எதிராக பாதுகாப்பை வழங்குகிறது.
இது ஃப்ரீ ரேடிக்கல்களின் தீங்கு விளைவிக்கும் விளைவுகளிலிருந்து கல்லீரலைப் பாதுகாக்கிறது. இது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவதன் மூலம் ஃபைலோஸ்டிரால்கள் புற்றுநோயின் அபாயத்தை மேலும் குறைக்கின்றன.
எள்ளில் உள்ள மெக்னீசியம் மற்றும் கால்சியம் மன அழுத்தத்தைப் போக்குகிறது.
எள்ளில் உள்ள டிரிப்டோபான் மற்றும் தியாமின் போன்றவை மனித உடலில் செரோடோனின் உற்பத்திக்கு உதவுகின்றன. இது உடல் வலியைக் குறைக்கவும், மனநிலையை சமநிலைப்படுத்தவும், ஆழ்ந்த உறக்கத்தை ஏற்படுத்தவும் உதவுகிறது.
முளை விட்ட எள்ளு சாப்பிட்டால், ஒல்லியாக இருப்பவர்களுக்கு பருமன் கூடும். கண்பார்வை பலப்படும்.
எள்ளிலிருந்து தயாரிக்கப்படுகிற நல்லெண்ணெய்தான் பெரும்பாலான நாடுகளில் சமையலுக்கு பயன்படுத்தப்படுகிறது. இதில் அதிக அளவு வைட்டமின் ஈ, பி 6, மெக்னீசியம், கால்சியம், தாமிரம் மற்றும் இரும்புச்சத்து இருப்பதால் ஆரோக்கியத்திற்கு நல்லது.
வாரத்திற்கு ஒருமுறையாவது தலைக்கு நல்லெண்ணெய் தேய்த்து குளித்தால் உடல் சூடு குறையும். தலைமுடி வறட்சி, பொடுகு தொல்லை நீங்கக்கூடும்.
நல்லெண்ணெய் சரும வறட்சியை தடுக்க வல்லது. இதனை வாரம் ஒரு முறை பயன்படுத்தி சருமத்தில் தடவி ஊறவைத்துக் குளித்து வந்தால், சருமத்தின் இளமைத் தன்மை தக்க வைக்கப்பட்டு, சருமம் புத்துணர்ச்சியுடன் காணப்படும்.
நல்லெண்ணெய் சிறிது எடுத்து வாய் கொப்பளிப்பதன் மூலமாக பற்கள் பலம் பெற்று ஈறுகளும் வலிமை பெறுகின்றது, மேலும் முகம் பொலிவு பெரும்.
நல்லெண்ணெய் அடிப்படையில் ஒரு ஆண்டிபையாட்டிக். இதனை வெறும் வயிற்றில் குடித்து வர தோல் சம்மந்தமான பிரச்சனைகள் தீரவும், வயிற்றில் உள்ள கிருமிகள் அழியவும் உதவுகிறது.
எள்ளுப் பிண்ணாக்கை இடித்து தூள் செய்து கொண்டு சிறிது நாட்டுச் சர்க்கரை கலந்து காலை மாலை அரை ஸ்பூன் தூளை வெந்நீருடன் சாப்பிட்டால் சர்க்கரை அளவு குறையும்.
தோலில் ஏற்படும் சொறி, சிரங்கு, புண்களை போக்க எள்ளு விதையை அரைத்து பூசி வர படிப்படியாக குணமாக வாய்ப்புள்ளது.