கருங்காலி மரம் தல விருட்சமாக உள்ள கோயில்?
கோயில்கள் ஒவ்வொன்றிலும் ஸ்தல விருட்சம் வைப்பதன் நோக்கமே, மனிதகுலத்தை வாழவைக்கும் மருத்துவ குணம் கொண்ட மூலிகை மரங்களை பாதுகாத்து எதிர்கால தலைமுறையினர்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நல்லெண்ணமும், மரங்களையும் தெய்வமாக மதிக்கவேண்டும் என்பதற்காகவும் வேண்டியே நமது முன்னோர்கள், முனிவர்கள், மகான்கள் ஆகியோர் மரங்களை கோயில்களில் நட்டுவைத்து இறைவனோடு சேர்த்து வணங்க வைத்தனர். இந்நிலையில், மருத்துவ குணங்கள் அதிகம் கொண்ட கருங்காலி மரம் எங்கே ஸ்தல விருட்சமாக உள்ளது என்றும், அதன் சிறப்பு குறித்தும் பார்க்கலாம்.
ஸ்தல விருட்சம் எதற்காக
விருட்ச சாஸ்திரப்படி ஒவ்வொரு ராசி, நட்சத்திரம், நோய்கள் போன்றவற்றுக்கு தனித்தனியாக ஒவ்வொரு மரம் உள்ளது.
அத்தகைய மரங்களை கோயில்களில் ஸ்தல விருட்சமாக வைத்து வணங்கும்போது, அந்த மரத்தின் மருத்துவ குணத்தை சுமந்து அதன் காற்று பட்டாலே நோய்கள் நீங்கி ஆரோக்கியமாக இருக்கலாம் என்பதை முன்னோர்கள் அறிந்தனர்.
மருத்துவ குணங்களுக்காகவும், அழிந்து வரும் மரங்களை பாதுகாக்கும் விதமாகவும் அரிய மரங்களை ஸ்தல விருட்சங்களாக வளர்த்து வந்துள்ளனர்.
கருங்காலி மரம்
அனைத்து விதமான நோய்களையும் குணப்படுத்தும் ஆற்றலுடைய மரமாக திகழும் கருங்காலி மரத்தின் பட்டை, வேர், தண்டுப் பகுதி, பூக்கள், பிசின் என மரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய அனைத்துமே மருத்துவ மகத்துவம் மிகுந்தவையாகும்.
மரத்தின் பட்டையை தூள் செய்து சாப்பிட்டால் இரத்தம் தொடர்பான நோய்கள் குணமாகும்.
குஷ்டம், வெண் குஷ்டம், தோல் அரிப்பு ஆகிய நோய்களுக்கு கருங்காலி மரத் தூள் மருந்தாக உள்ளதாக கூறப்படுகின்றது.
மனநோய், கண்நோய், இரத்தம் தொடர்பான நோய்களுக்கு நல்ல மருந்தாக கூறப்படுகின்றது.
சிறுநீரகக் கோளாறு, இதய நோய், புற்றுநோய் போன்ற நோய்களுக்கும் தீர்வாக தெரிவிக்கப்படுகின்றது.
உடல் பலவீனமாக இருப்பவர்களும், உடலில் வலி, வீக்கம் இருப்பர்களும், காய்ச்சல், பேதியால் பாதிக்கப்பட்டவர்களும் கருங்காலி மரத்தின் பட்டையை தூளாக அரைத்து சாப்பிடுவது சிறப்பாகும்.
தோஷத்தை போக்கும் ஆற்றல்
செவ்வாய் கிரகத்தின் அம்சமாக கருங்காலி மரம் வணங்கப்படுகின்றது.
செவ்வாய் கிரகத்தின் கதிர்வீச்சுகளுக்கும், கருங்காலி மரத்துக்கும் நேரடி தொடர்பு இருப்பதால், மனிதர்களுக்கு செவ்வாய் கிரகத்தின் தோஷத்தை போக்கக்கூடிய ஆற்றல் உள்ளது.
வீடுகளில் சிறந்த வேலைப்பாடுள்ள கதவுகள், மரச்சிற்பங்கள், ஜன்னல்கள் தயாரிப்பதற்கு வலிமை வாய்ந்த கருங்காலி மரம் பயன்படுகின்றது.
கருங்காலி மரம் தமிழகத்தில் வறண்ட மலைப்பகுதிகளிலும், அடர்ந்த வனப்பகுதிகளிலும் அதிகம் வளர்கின்றன.
எங்கே
தமிழகத்தில் உள்ள சிவன் கோயில்களில் திருஅம்பர்மாகாளம் என்ற திருத்தலத்தில் மட்டும்தான் கருங்காலி மரம் ஸ்தல விருட்சமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
திருஅம்பர்மாகாளம் திருத்தலத்தில் ஸ்தல விருட்சமாக இருக்கின்ற கருங்காலி மரத்தை இறைவனோடு சேர்த்து இன்றைக்கும் பக்தர்களால் வணங்கப்படுகிறது.
திருவாரூரில் இருந்து பேரளம் செல்லும் சாலையில் அம்பர் என்னும் ஊருக்கு மிக அருகே திருஅம்பர்மாகாளம் திருத்தலம் உள்ளது.
திருஅம்பர் மாகாளம் குறித்து திருஞானசம்பந்தர் பதிகம் பாடியிருப்பது சிறப்பு வாய்ந்தது.
படியுளர் விடையினர் பாய்புலி
தோலினர் பாவ நாசர்
பொடிகொள்மா மேனியர் பூசமார்
படையினர் பூன நூலர்
கடி கொள்மா மலர்இடும் அடியினர்
பிடிநடை மங்கையோடும்
அடிகளார் அருள்புரிந்து இருப்பிடம்
அம்பர் மாகாளம் தானே!
என்று திருஅம்பர் மாகாளத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் காளாண்டேஸ்வரரை பாடி வணங்கியிருக்கின்றார்.
மிருகசீரிட நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பரிகார விருட்சமாக கருங்காலி மரம் உள்ளது.
அனைத்து விதமான நோய்களையும் குணப்படுத்தும் ஆற்றலுடைய மரமாக கருங்காலி மரம் திகழுவதையடுத்து, வீட்டில் கருங்காலி கட்டை, கருங்காலி வளையல், கருங்காலியால் செய்யப்பட்ட சாமி சிலைகள் வைத்திருப்பது நல்லது.