download_indicator

கர்ப்பிணிகள் பப்பாளி சாப்பிடலாமா?

பழுக்காத பப்பாளியை பெண்கள் சாப்பிட்டால் வயிற்றில் வளரும் கரு தங்காது என்று அனுபவம் வாய்ந்த வயது முதிர்ந்த பெண்கள் எல்லோருமே சொல்வதுண்டு. அதனால், புதிதாக திருமணமாகிய பெண்கள் பப்பாளியை சாப்பிடுவதை அறவே தவிர்த்து விடுவர். அவ்வாறிருக்கையில், கர்ப்பிணிகள் பப்பாளி சாப்பிடலாமா என்று அறிந்திடலாம்.

பெண்களும், கர்ப்பமும்

புது திருமணமான தம்பதிகள் பலர் வேலை, உடல் நலம் மற்றும் பிற காரணங்களுக்காக குழந்தைப்பேற்றை ஒரு சில வருடங்களுக்கு தள்ளி வைப்பதுண்டு.

70 முதல் 80 சதவீத தம்பதியர்கள் இறைவன் கொடுத்த வரமான குழந்தைப்பேற்றை எப்போது கிடைத்தாலும் மனமகிழ்ந்து ஏற்றுக்கொள்வர்.

அவ்வாறு கர்ப்பம் தரித்தது உறுதியானதும், முதல் 3 மாதங்களுக்கு மிக கவனமாக இருப்பார்கள்.

ஏனெனில், முதல் 3 மாதத்தில் சிறிய அதிர்வு ஏற்பட்டாலோ, அதிக வெப்பம் மற்றும் உடல்நல பாதிப்பு, கர்ப்பத்தை பாதிக்கக்கூடிய உணவு சாப்பிடுதல் போன்ற காரணங்களினால் கரு கலைந்துவிடும் அபாயம் உண்டு.

அதனால், பெரும்பாலான வீடுகளில் கர்ப்பமான முதல் 3 மாதங்களுக்கு, கர்ப்பமடைந்த தகவலைக்கூட வெளியில் யாரிடமும் சொல்லமாட்டார்கள்.

பழுக்காத பப்பாளி

கர்ப்பத்தின் ஆரம்பகால கட்டங்களில், கரு உடையக்கூடிய தன்மையில் இருக்கும் என்பதால், லேடெக்ஸ் போன்ற குறைந்த நச்சுத்தன்மை வாய்ந்த பொருட்கள் கூட அதிக தீங்கு விளைவிக்கும்.

பழுக்காத பப்பாளியில் இந்த லேடெக்ஸ் உள்ளது, இது கருப்பையில் சுருக்கங்களை ஏற்படுத்தும்.

கர்ப்ப காலத்தில் இதுபோன்ற கருப்பை சுருக்கங்கள், கருச்சிதைவு அல்லது குறைமாத பிறப்பை ஏற்படுத்தும்.

கருவின் முக்கிய சவ்வுகளை இந்த பப்பேன் பலவீனப்படுத்துவதால், கரு உயிர்வாழ்வது கடினம்.

அதனால், முதல் மூன்று மாதங்களில், பழுக்காத பப்பாளியை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

அதேபோல், கர்ப்பத்தின் கடைசி மூன்று மாதங்களின் போதும், கர்ப்பிணி பெண்கள் பழுக்காத பப்பாளியை தொட்டுக்கூட பார்க்கக்கூடாது.

இதுபோன்ற காரணங்களினால்தான், பொதுவாகவே கர்ப்பிணி பெண்கள் பப்பாளி காயை முற்றிலுமாக தவிர்த்துவிடுவர்.

ஆனால், சட்டம், ஒழுக்கத்திற்கு புறம்பான முறையில், தவறான உறவுகொண்டு கர்ப்பம் தரித்த பெண்கள், இந்த பழுக்காத பப்பாளியை இயற்கை கரு கலைப்பு மருந்தாக சாப்பிடுவதுண்டு.

பழுத்த பப்பாளி

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பானதாகவும், நன்மை பயக்க கூடியதாகவும் பழுத்த பப்பாளி கருதப்படுகிறது.

பழுத்த பப்பாளியில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளன.

இவை அனைத்தும் அதிக ஆக்ஸிஜனேற்றத்தைக் கொண்டு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன.

பப்பாளியில் இருந்து கிடைக்கும் வைட்டமின் சத்து பல்வேறு தொற்றுகளைத் தடுக்கிறது.

பப்பாளி பழத்தில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை எளிதாக்குவதுடன், மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படாமல் பாதுகாக்கிறது.

அதனால், கர்ப்பிணிகள் பழுத்த பப்பாளியை மட்டுமே சாப்பிடுவது நல்லது, உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்தது.

கர்ப்பிணி பெண்கள் பப்பாளி பழம் சாப்பிடலாம், ஆனால், பப்பாளி காய் சாப்பிடக்கூடாது என்பதை உங்களுக்கு தெரிந்த கர்ப்பிணி பெண்கள் அறிந்திட ஷேர் செய்யுங்கள்.



Follow Us on