
பாண்டுரங்கனின் பக்தர்களில் புரந்தரதாசர், நாமதேவர், ஞானதேவர், ஜனாபாய் ஆகியோர் முக்கியமானவர்களாவர். இறைவனைத் தேடி நாமெல்லாம் கோயிலுக்கு செல்வதுதான் வழக்கம். ஆனால், இந்த பக்தர்களுக்காக, இறைவனே அவர்களைத்தேடி வருகிற அளவிற்கு அவர்களது பக்தி இருந்தது. அவ்வாறிருக்கையில், எதற்காக விட்டலன் கந்தல் சேலையை கட்டினான் என்று அறிந்திடுவோம்.
பாண்டுரங்கன் கோயில்
மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பண்டரிபுரம் பாண்டுரங்கன் கோயிலில் ஒரு சமயம் கார்த்திகை மாத ஏகாதசி தினத்தன்று கட்டுக்கடங்காத கூட்டம் இருந்தது.
அன்றைய தினம் பக்தர்கள் அனைவரும் பாண்டுரங்கனின் கீர்த்தனைகளையும், புகழையும் போற்றி பாடிக்கொண்டிருந்தனர்.
அன்று கோயிலுக்கு வந்த ஒரு குடும்பத்தை சேர்ந்த 10 வயது சிறுமியும், பாண்டுரங்கனை குறித்து இனிய குரலில் பாடினாள்.
அதன் பின்னர், பாண்டுரங்கனின் மீதிருந்த பக்தியின் காரணமாக, தனது குடும்பத்தினருடன் வீட்டுக்கு செல்ல விரும்பாமல் கோயிலிலேயே தங்கிவிட்டாள்.
சிறுமியின் பக்தியை கண்ட நாமதேவர், ஜனாபாய் என்ற அந்த சிறுமியிடம் பேசி, இளம் வயதிலேயே அவருக்கு ஏற்பட்ட பக்தியை கண்டு வியந்து, தன்னுடன் தனது வீட்டிற்கு அழைத்து சென்றார்.
நாமதேவரின் வீட்டில் தங்கி அவர்கள் குடும்பத்திற்கு அனைத்து வேலைகளையும் செய்து, பாண்டுரங்கனுக்கும் சேவை செய்து வந்தாள்.
அத்துடன், நாமதேவரை காண பாண்டுரங்கன் அவரது வீட்டிற்கு அடிக்கடி வருவதை கண்ட ஜனாபாய், மிகுந்த மகிழ்ச்சியுடன் தூய்மையான பக்தியுடன் இறைவனுக்கு பணிவிடை செய்து அவரது திருவடியில் விழுந்து வணங்கினாள்.
கந்தல் சேலை
இந்நிலையில், ஒரு நாள் நாமதேவரின் வீட்டுக்கு வந்த பாண்டுரங்கனின் பட்டு பீதாம்பரத்தை வாங்கி துவைப்பதற்காக ஜனாபாய் வெந்நீர் தயார் செய்து கொண்டிருந்தாள்.
அதனால், இறைவன் அதுவரை ஜனாபாயின் கந்தல் சேலையை உடுத்திக் கொண்டார்.
அத்துடன், பீதாம்பரத்தை காயப்போட்டு எடுக்கும் வரை சிறிது நேரம் தூங்குவதற்கு விரும்பிய விட்டலன், நாமதேவரின் சிறிய வீட்டின் ஒரு மூலையில் பழைய துணிகள் இருந்த இடத்தில் படுத்து தூங்கினார்.
அப்போது, விட்டலனின் பாதங்களை ஜனாபாய் இதமாக பிடித்து விட்டாள்.
ஆதிசேஷனின் மலர் படுக்கையில் அயர்ந்து உறங்கும் இறைவன், இங்கு அழுக்குத் துணிகள் மீது படுத்தபோதும், வைகுண்டத்தை விட சுகமாக தூக்கம் வருகிறதே என்று தூங்கி எழுந்தார்.
பின்னர், ஜனாபாய் எல்லோருக்கும் உணவு பரிமாறியபோது, நாமதேவர் குடும்பத்தாருடன் பாண்டுரங்கன் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டார்.
அப்போது, நாமதேவர், பாண்டுரங்கனுக்கு தன் கையால் உணவை ஊட்டி விட இறைவன் அதை ஏற்றுக் கொண்டார்.
அதைக்கண்ட ஜனாபாய் தனக்கும் அத்தகைய பாக்கியம் கிடைக்குமா என்று ஏங்கினாள்.
ஜனாபாயின் மனதில் இருப்பதை அறிந்த பாண்டுரங்கன், ஜனாபாயிடம், எனக்கும் ஒரு வாய் உணவு ஊட்டுவாயா என்று கேட்டார்.
அதையடுத்து, ஆனந்தக் கண்ணீர் வழிய ஜனாபாய், பாண்டுரங்கனுக்கு ஊட்டி விட்டாள்.
பாண்டுரங்கனும் சாப்பிட்டபடியே, ஜனாபாயின் மடியில் தலை வைத்து படுத்து விட்டார்.
இவ்வாறாக உண்மையான பக்தியுடன் இருப்பவர்களுக்கு இறைவனின் கருணை எந்த விதத்திலாவது கிடைக்கும் என்பதற்கு ஜனாபாயே சிறந்த உதாரணமாகும்.
ஜனாபாயின் தூய்மையான பக்தியை விட்டலன் உலகிற்கு எவ்வாறு எடுத்துக்காட்டினான் என்பதை உங்கள் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள் (ஷேர் செய்யுங்கள்).