கணவன் மனைவிக்குள் எப்போதும் சண்டையா?
கணவன் மனைவிக்குள் சண்டை வர வேண்டும். "ஊடுதல் காமத்திற்கு" என்கிறார் திருவள்ளுவர். சண்டையிட்டு இணைவது தான் இன்பம் என்கிறார் வள்ளுவப் பேராசான். அதற்கு சண்டையும் கோபமும், ஒரு அளவில் இருக்க வேண்டும். அதாவது எளிதில் சமாதானம் ஆகக்கூடியதாக இருக்க வேண்டும். ஆனால், சண்டையே வாழ்க்கையாக இருந்தால் என்ன செய்வது; அறிந்து கொள்வோம் வாருங்கள்.
சிக்கலே வாழ்க்கை
கணவன், மனைவியாக சேர்ந்து வாழும் குடும்ப வாழ்க்கை என்பது மிகவும் சிக்கல் நிறைந்த ஒன்றாகும்.
இருவரும் சமமாக வாழ வேண்டும்.
சம உரிமையுடன் நடத்தப்பட வேண்டும்.
இருவரும் சுந்ததிரமாக வாழ வேண்டும்.
ஆனால், விட்டுக்கொடுத்து வாழ வேண்டும்.
ஒருவருக்கொருவர் இறங்கிப் போக வேண்டும்.
இங்குதான் சிக்கல். முதலில் இறங்குவது யார்? இதற்கு உளவியல் ரீதியாக ஆராய்ந்து பார்த்தால், இறங்குவது என்ற எதிர்பார்ப்பே தவறு. உணர்வுகளுக்கு மதிப்பளித்து ஒன்றிப்போகும் பட்சத்தில் ஏற்ற இறக்கம் என்ற வார்த்தைக்கு அங்கு இடம் இல்லாமல் போகும்.
சுதந்திரம் எது?
தனி மனித சுதந்திரம் என்பது, தனக்குள் ஒரு வட்டத்தை அமைத்துக் கொண்டு அதற்குள் வாழ முற்படுவது அன்று. எத்தனை பேர்களோடு வாழ்ந்தாலும், உடல் அளவிலும், மனதளவிலும் அழுத்தம் இல்லாத, தெளிந்த மனநிலையோடும், புத்துணர்ச்சியோடும் வாழ இயலுமானால் அதுவே சுதந்திரம். எனது இயல்பை பங்கப்படுத்த யாராலும் இயலாது என்ற மனநிலையோடு வாழப் பழகினால் அதுவே சுதந்திரம். அதற்கு என்ன செய்வது?
உனக்குள் நான்
குடும்பத்திலும் சுதந்திரத்தை எதிர்பார்க்க கூடாது. கணவன் மனைவி இருவரும்,
வலிகளை பகிர வேண்டும்.
குழப்பத்தை பகிர வேண்டும்.
அழுத்தத்தை பகிர வேண்டும்.
ஆசைகளை பகிர வேண்டும்.
எதிர்பார்ப்பை பகிர வேண்டும்.
குறைகளை பகிர வேண்டும்.
தேவைகளை பகிர வேண்டும்.
மற்றவர் உணர்வுகளை மதித்து உள்வாங்கினால் மட்டுமே, நம் உணர்வுகள் மதிக்கப்படும். அப்போதுதான் இல்லறம் இனிக்கும். இல்லறத்தில் ஒருவர் மற்றொருவர் உணர்வின்படி வாழ தலைப்பட்டால் அங்கு சண்டைக்கு இடமில்லை. இதில் பெண்களுக்கே முக்கிய பங்கு உள்ளது. ஒரு ஆணிற்கு, நற்பண்புள்ள மனைவி அமையாத பட்சத்தில் இல்வாழ்க்கை என்பது எவ்வளவு சிறப்புடையதாக இருந்தாலும் பயன் இல்லை என்கிறார் திருவள்ளுவர்.
மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல்.
- திருவள்ளுவர்
ஆகவே, சண்டை வேண்டும், உடனே சமாதானம் ஆக வேண்டும். விரைவில் காதலாக வேண்டும், அது காமமாக மிளிர வேண்டும். அதுவே ஆரோக்கியமான இல்லறம் என்கிறார் அறநூல் தந்த தெய்வப்புலவர்.
முயல்வோம்! வாழ்வோம்!