
வீட்டுக்கு வீடு வாசல்படி என்று கூறுவதுபோல், கணவன், மனைவி சண்டை இல்லாத வீடு என இந்த உலகில் எந்த வீடும் இருக்காது. என்னதான் கருத்து வேறுபாடு இருந்தாலும், கணவன், மனைவி இருவரும் தங்களுக்குள் விட்டுக்கொடுத்து அனுசரித்து சென்றால் சண்டை சச்சரவுக்கே இடம் இருக்காது. அதையடுத்து, தம்பதியர் இருவரும் எப்படி இருக்க வேண்டும் என்று அறிந்திடலாம்.
ஆன்மீகமும், இல்லறமும்
இந்து மதத்தில் கூறப்படாத விஷயங்களே இல்லை என்று எண்ணுமளவிற்கு அதில் அனைத்து விஷயங்களும் உள்ளன.
இல்லற வாழ்வை பற்றி கூட அதில் மிக அற்புதமாக கூறப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஆன்மீகத்தில் இருப்பவர்கள் இல்லற வாழ்க்கையில் இருந்தாலும், தாமரை இலை மீதுள்ள தண்ணீர் போன்று பட்டும், படாமலும் இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.
அத்தகைய வாழ்க்கையை எத்தனையோ தம்பதியினர் வாழ்ந்து காட்டி, இந்த உலகிற்கு சிறந்த உதாரணமாக இருந்துள்ளனர், அவர்களில் ஒருவர்தான், இராமானுஜரின் சீடர்களில் முதன்மையானவரும், ஸ்ரீவத்சாங்கர் என்ற இயற்பெயர் கொண்டவருமான கூரத்தாழ்வார்.
கூரத்தாழ்வார் தை மாதம் 1009-ஆம் ஆண்டு ஹஸ்த நட்சத்திரத்தில் காஞ்சிபுரம் அருகே உள்ள கூரம் என்ற ஊரில் அவதரித்தார்.
பெரும் செல்வந்தராக திகழ்ந்த கூரத்தாழ்வார், காஞ்சி வரதராஜ பெருமாள் கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் தினமும் அன்னதானம் செய்து வந்தார்.
ஆண்டாள்
சூடிக்கொடுத்த சுடர்கொடி நாச்சியாரான ஆண்டாளின் பெயரே, கூரத்தாழ்வாரின் மனைவி பெயருமாகும்.
இந்த ஆண்டாளும் ஞானத்தில் சிறந்து விளங்கி கணவரின் எண்ணங்களுக்கேற்ப செயல்பட்டார்.
கணவர் பெரும் செல்வந்தராக இருந்தபோதும் ஆண்டாள் வீண் கர்வம் அடைந்ததில்லை.
கூரத்தாழ்வாரின் செல்வம் மற்றும் அன்னதானம் குறித்து ஒருமுறை திருக்கச்சி நம்பிகளிடம், வரதராஜ பெருமாளின் பிராட்டியான பெருந்தேவி தாயார் விசாரித்தாராம்.
அதைக்கேட்ட கூரத்தாழ்வார், எங்கே தனக்கு அகங்காரம் வந்துவிடுமோ என்று பயந்து தன்னுடைய பெரும்செல்வங்கள் அனைத்தையும் தானமாக வழங்கிவிட்டாராம்.
செல்வங்கள் அனைத்தையும் தானமாக வழங்கியபோதும் கூட, ஆண்டாள் கணவரிடம் எந்த கோபமும் கொள்ளாமல் அவருக்கு துணையாகவே இருந்தார்.
மேலும், ஒரு சமயம் கூரத்திலிருந்து தன் மனைவியை அழைத்துக்கொண்டு, இராமானுஜரின் சீடராகும் வகையில் ஸ்ரீரங்கம் சென்றார்.
அப்போது, செல்லும் வழியில் காட்டில் திருடர் அச்சமிருந்ததால், ஏதாவது வைத்திருக்கிறாயா என்று மனைவியிடம் கூரத்தாழ்வார் கேட்டார்.
அதற்கு சிறுவயது முதலே கூரத்தாழ்வார் சாப்பிடுவதற்கு பயன்படுத்திய தங்கவட்டிலை வைத்திருப்பதாக கூறியதும், அதை வாங்கி விட்டெறிந்தாராம்.
அந்த நிலையிலும் ஆண்டாள், கணவர் மீது எந்த கோபமும் கொள்ளவில்லை.
ஒரு கணவன், மனைவி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஆண்டாளும், கூரத்தாழ்வாரும் அடையாளமாக இருந்தனர்.
மனைவிக்கு மதிப்பு
ஸ்ரீரங்கத்தில் யாசகம் பெற்று வாழ்ந்த கூரத்தாழ்வார் தம்பதியர், ஒருமுறை தொடர்ந்து 3 நாள் உணவு கிடைக்காமல் பட்டினி கிடக்க நேர்ந்தது.
அப்போது தன் கணவர் பட்டினியாக இருப்பதை கண்ட ஆண்டாள், மனதில் ஸ்ரீரங்கநாதரை நினைத்து "அப்பா, திருவரங்கனே! உனக்கு மட்டும் மூன்று வேளையும் பிரசாதம் வருகிறது.
உன் பக்தன் இங்கு 3 நாட்கள் பட்டினியாக இருப்பது உனக்கு தெரியவில்லையா? நீ மட்டும் வயிறாற உணவு சாப்பிடுகிறாயே, நியாயமா என்று கேட்டார்.
அப்போது, சில நிமிடங்களில் அங்கு வந்த ஒருவர், அரங்கன் இந்த பொட்டலத்தை கொடுத்து வரச்சொன்னார் என்று கூறி ஒரு பொட்டலத்தை ஆண்டாள் கையில் கொடுத்தார்.
அதைப் பிரித்துப் பார்த்த ஆண்டாள், அதிலிருந்த கோயில் பிரசாதத்தை எடுத்து கணவரிடம் கொடுத்து சாப்பிடும்படி கூறினாள்.
அதைக்கண்டதும் கூரத்தாழ்வாருக்கு எல்லாம் தெரிந்து விட்டது.
கூரத்தாழ்வார் தன் மனைவியிடம், அரங்கனிடம் எதுவும் கேட்டாயா என்றார்.
அவரும் நடந்ததை கூறியதும், மனைவிக்கு மதிப்பளித்து பிரசாதத்தை வாங்கி சாப்பிட்டார்.
அதன் பின்னர், இனி இம்மாதிரி செய்யாதே என்று அறிவுறுத்தினார்.
இவ்வாறாக கூரத்தாழ்வாரும், அவரது மனைவியும் ஒற்றுமையாக இருந்ததுபோல், வாழ்வில் கணவன், மனைவி இருவரும் எப்போதும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.
கணவன், மனைவி இருவரும் எந்த விஷயமாக இருந்தாலும், ஒருவரையொருவர் புரிந்து கொண்டு நடந்து கொண்டு வேண்டும் என்பதை உங்கள் உறவினர்களும், நண்பர்களும் அறிந்திட செய்யுங்கள் (ஷேர் செய்யுங்கள்).