காதல் திருமணத்தை ஜாதகத்தால் அறிய முடியுமா?
கலப்பு அல்லது காதல் திருமணம் ஏற்பட ஜோதிட ரீதியாக எது காரணமாகிறது. வாருங்கள் பார்ப்போம்.
சனி, இராகு சேர்க்கை
ஒருவர் ஜாதகத்தில் 5ஆம் வீட்டில் சனி, இராகு, கேது போன்ற பாவகிரகங்கள் அமையப் பெற்றாலும், 5ஆம் அதிபதி சனி, இராகு கேது சேர்க்கைப் பெற்றாலும், 5ல் அமையக்கூடிய பாவிகளுடன் 7ம் அதிபதி சேர்க்கைப் பெற்றாலும், 5,7 க்கு அதிபதிகள் இணைந்து உடன் பாவகிரகங்களின் தொடர்பு ஏற்படாது இருந்தாலும் காதல் வயப்படக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டு திருமணம் செய்யும் வாய்ப்பு உண்டாகும். 5,7க்கு அதிபதிகள் பரிவர்த்தனை பெற்றிருந்தாலும் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டு சனி, இராகு சேர்க்கைப் பெற்றாலும், காதல் ஏற்பட்டு கலப்பு திருமணம் நடைபெறுகிறது.
காதல் திருமணம்
ஒருவர் ஜாதகத்தில் 7ம் வீடு களத்திர ஸ்தானமாகும். களத்திர காரகன் சுக்கிரனாவார். 7ம் வீட்டதிபதியும், சுக்கிரனும் சனி, இராகு போன்ற பாவிகளின் சேர்க்கைப் பெற்றிருந்தாலும், 7ல் செவ்வாய் சனி, இராகு அமையப் பெற்று, சுபர் பார்வையின்றி இருந்தாலும் காதல் திருமணம், கலப்பு திருமணம் நடைபெறுகிறது.
7ம் வீட்டில் கேது அமையப்பெற்று 7ம் அதிபதியும் சுக்கிரனும் கேது சேர்க்கை அல்லது கேதுசாரம் பெற்றிருந்தால் காதல் திருமணம், கலப்புத் திருமணம் நடைபெறும். ஜென்ம லக்னத்திற்கு 5ல் 1,7 க்கு அதிபதிகள் இருந்தாலும் 5ம் அதிபதி பாவியாக இருந்து ஜென்ம லக்னத்தில் அமைந்து 7 ம் வீட்டை பார்வை செய்தாலும் காதலித்து திருமணம் செய்யும் வாய்ப்பு மற்றும் கலப்புத் திருமணங்கள் நடைபெறும் வாய்ப்பு உண்டாகும்.
யாருக்கு வாய்ப்பு
ஜென்ம லக்னத்திற்கு 7ம் வீட்டில் இராகு பகவான் அமையப் பெற்று, 7ம் அதிபதியும் சுக்கிரனும் இராகு சாரம் பெற்றிருந்தால், சிறிதளவாவது வேறுபட்ட ஒருவரை கலப்புத் திருமணம் செய்யக்கூடிய வாய்ப்பு உண்டாகும். ஜென்ம லக்னத்திற்கு 7ம் வீட்டை குறிப்பிடுவது போல சந்திரனுக்கு 7ம் வீட்டில் சனி, செவ்வாய், இராகு போன்ற கிரகங்களில் ஏதாவது இருகிரகங்கள் அமையப் பெற்றாலும் பழக்க வழக்கத்தில் மாறுபட்ட இடத்தில் திருமணம் செய்ய நேரிடும்.