download_indicator

ஜீரணத்தை சீராக்கும் உணவுகள்?

சாப்பிட்ட ஏதோ ஒன்று செரிமானம்(ஜீரணம்) ஆகாததால் நெஞ்செரிச்சல் ஏற்படுகிறது. ஜீரணம் என்பது உமிழ்நீரில் ஆரம்பித்து மலக்குடல் வரை நடக்கிற செயல்பாடு ஆகும். நாம் சாப்பிடும் உணவு வாய், இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல் என பகுதி பகுதியாக செரிமானமாகிறது. இந்த செரிமானப் பாதையில் உற்பத்தியாகிற என்சைம்கள், ஹைட்ரோகுளோரிக் அமிலம், ஹார்மோன்கள் ஆகியவை உணவு செரிமானத்துக்கு உதவுகின்றன. ஆரோக்கியமாக உள்ளவருக்கு இந்தச் செரிமான நீர்களும், என்சைம்களும் தேவையான நேரத்தில் தேவையான அளவுக்குத் தேவையான இடத்தில் சுரந்து செரிமானம் எனும் அற்புதப் பணியைச் செய்து முடிக்கின்றன. ஆனால் நினைத்தபோது, நினைத்தபடி, நினைத்தவற்றைச் சாப்பிடுவதால் செரிமானத்தில் பிரச்சனை ஏற்படுகிறது. இந்த செரிமானத்தில் பிரச்சனை ஏற்படுவதால் பல்வேறு நோய்களுக்கு வழிவகுக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே செரிமானத்தை(ஜீரணத்தை) சீராக்கும் சில உணவு வகைகளை பார்க்கலாம்.

உணவு வகைகள்

இரவு அல்லது காலை சிற்றுண்டிகளில் ஒரு வேளை பழ உணவும், அடுத்து இயற்கையில் விளைந்த சமைக்காத உணவும் இருப்பது நல்லது.

காலை உணவாக அவல் பொங்கல், அவல் உப்புமா, கைக்குத்தல் புழுங்கல் அரிசிக் கஞ்சி சாப்பிடலாம்.

சிறு குழந்தைகளுக்கு நவதானிய கஞ்சி, சிறு தானிய கஞ்சி, பயறு நிறைந்த கஞ்சி நல்லது.

வளரும் குழந்தைகளாக இருந்தால் ஒரு வாழைப்பழத்துடன் இட்லி அல்லது தானியக் கஞ்சி கொடுக்கலாம்.

இளைஞர்கள் அவல் பொங்கல் அல்லது வெண்பொங்கல் பழத்துண்டுகளுடன் சாப்பிடலாம்.

பெரியவர்களாக இருந்தால் சிவப்பரிசி அவலுடன், பப்பாளித் துண்டுகள், சிவப்பு கொய்யாவுடன் புழுங்கல் அரிசி உணவு அல்லது கேழ்வரகு உணவு சாப்பிடலாம்.

மதிய உணவில் அளவாக அரிசி உணவுடன் நிறையக் காய்கறிகள், கீரைக் கூட்டு அல்லது கீரைக் கடையல் சாப்பிடலாம்.

உணவில் காய்ந்த மிளகாய்க்கு பதிலாக மிளகைப் பயன்படுத்தலாம்.

சுக்கு, மிளகு, திப்பிலி, சீரகம், பெருஞ்சீரகம், ஏலம், பெருங்காயம், கறிவேப்பிலை சம பங்கு, உப்பு பாதிப் பங்கு சேர்த்து லேசாக வறுத்து பொடியாக்கி, சூடான உணவில் முதலில் பருப்புப் பொடிபோல் போட்டு சாப்பிட்டால் அஜீரணம் ஏற்படுவது சீராகக்கூடும்.

நாள் ஒன்றுக்கு 8 முதல் 10 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். அவ்வாறு அதிகமாக தண்ணீர் குடிக்கும்போது, அது உடலில் மலச்சிக்கலை நீக்கி, மிக எளிதாக செரிமானம் நடைபெற வழிசெய்கிறது.

தினமும் எலுமிச்சைப் பழச்சாற்றை குடிப்பதால், வயிற்றில் இருக்கும் கழிவுகள் மற்றும் அளவுக்கு அதிகமான வாயுக்கள் போன்றவை நீங்கி செரிமானத்திற்கு உதவும்.

உணவை நன்றாகக் கடித்து, மென்று சாப்பிடும்போது, உணவு செரிமானத்திற்கு தேவையான கார்போஹைட்ரேட் வாயில் உற்பத்தியாகிவிடும்.

ஆரோக்கியமான பாக்டீரியாக்களை வழங்கும் தயிர், உடலையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்கிறது. மேலும் செரிமானப் பிரச்சனைகளையும் நீக்க வாய்ப்புள்ளது.

நார்ச்சத்து அதிகம் உள்ள செர்ரி, திராட்சை, தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளை அதிகம் எடுத்துக்கொண்டால் உணவுகள் அனைத்தும் மிக எளிதாக செரிமானமாவதற்கு உதவுகிறது.

தினமும் உடற்பயிற்சி செய்து வந்தால், செரிமான பிரச்சனை வருவதற்கு வாய்ப்பு மிகக் குறைவு.

உணவை சாப்பிடும் போது கவனம் முழுவதும் உணவின் மீது மட்டுமே இருக்க வேண்டும்.



Follow Us on