download_indicator

ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான காரணங்களும், நடைபெறுமிடங்களும்

பொங்கல் பண்டிகையில் தமிழ் மக்கள் அனைவரும் எதிர்பார்க்க கூடிய ஒரு விழாவாக காளைகளை அடக்கும் ஜல்லிக்கட்டு போட்டி பார்க்கப்படுகிறது. இந்த காளைகளை அடக்கும் போட்டிக்கு, ஜல்லிக்கட்டு என்ற பெயர் வந்த காரணம் பற்றியும், ஜல்லிக்கட்டு எந்தெந்த இடங்களில் மிகவும் விமர்சையாக கொண்டாடப்படுகிறது என்பதை பற்றியும் பார்க்கலாம்.

காரணம்?

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான காளை அடக்கும் போட்டியானது, ஏறு தழுவல், மஞ்சு விரட்டு அல்லது சல்லிக்கட்டு என்று, ஒவ்வொரு இடங்களுக்கும் ஏற்றவாறு அழைக்கப்படுகிறது.

ஏறு என்பது காளை மாட்டைக் குறிக்கிறது. மாட்டை ஓடவிட்டு அதை மனிதர்கள் அடக்குவதையே ஏறு தழுவல் என்கிறார்கள்.

சிறுவயதில், வீட்டில் உள்ள பெரியவர்களிடம் காசு கேட்டால், சல்லிக்காசு கூட இல்லை என்று கூறுவதை பலரும் கேட்டிருப்போம்.

காசு சுத்தமாக இல்லை என்பதைதான், அப்படி கூறுகிறார்கள் என்றுதான் பலரும் நினைத்திருப்போம்.

ஆனால், சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பாக, 'சல்லிக் காசு' என்ற இந்திய நாணயங்கள் புழக்கத்தில் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதையே அவ்வாறு கூறியுள்ளார்கள் நம் முன்னோர்கள்.

காளை அடக்கும் போட்டிகளில், ஒரு துணியில் சல்லி என்ற நாணயங்களை வைத்து முடிபோட்டு, மாட்டின் கொம்புகளில் கட்டிவிடுவர். இந்த சல்லியே பின் நாளில், ஜல்லிக்கட்டாக மருவியது.

போட்டிகளில் கலந்து கொண்டு, யாரொருவர் காளையை அடக்கி, அதில் கட்டப்பட்டிருக்கும் பணமுடிப்பை எடுக்கிறார்களோ, அவர்களுக்கே அந்த பணம் உரியதாகும்.

மாடுகளின் பாதுகாப்பு

நம் நாட்டு காளை இனங்கள் அழியாமல் பாதுகாக்க, ஜல்லிக்கட்டு போட்டி முக்கிய காரணமாக இருக்கிறது.

ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவதன் மூலம், எந்தக் காளை வலிமையாக உள்ளது என்பதை கண்டறிய முடியும்.

போட்டியில் வெற்றிபெறும் வலிமையான காளைகளை இனப்பெருக்கதிற்குப் பயன்படுத்தி, வலிமையான ஒரு சந்ததியை உருவாக்க முடியும்.

எந்தவொரு பசு, பலமான காளையுடன் இணைந்து கருவுருகிறதோ, அந்த பசு தரமான பாலை கொடுக்கிறது என்று கூறப்படுகிறது.

அயல்நாட்டு இனங்களைவிட, நாட்டு இன மாடுகளானது ஒன்பது மடங்கு குறைவான அளவு பாலையே கொடுக்கிறது.

ஆனால் மற்ற பாலை விட, நாட்டு மாடுகளின் பாலானது ஆரோக்கியமானதாகவும், நோய் எதிர்ப்புச் சக்தி கொண்டதாகவும் இருக்கிறது.

தமிழ் நாட்டில் அதிகமாக மஞ்சுவிரட்டு நடைபெறு‌ம் மாவட்டமாக சிவகங்கை உள்ளது.

பிரபலமான இடங்கள்

மதுரை மாவட்டம் அவனியாபுரம், அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு எனும் ஊர்கள், திருச்சி பெரிய சூரியூர், நாமக்கல் மாவட்டம் அலங்காநத்தம், சேலம் மாவட்டம் தம்மம்பட்டி , கூலமேடு, தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம், புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை, வேலூர் மாவட்டம் திருவண்ணாமலை மாவட்டம் ஆதமங்கலம் புதூர் மற்றும் தேனீமலை, தேனி மாவட்டம் போன்ற இடங்களில், ஆண்டுதோறும் தை மாத பொங்கல் திருநாளையொட்டி, ஜல்லிக்கட்டு விழா கோலாகலமாக நடத்தப்படுகிறது.

ஜல்லிக்கட்டு பெயர் வந்த காரணம் பற்றி உங்களுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள். (ஷேர்)



Follow Us on