
குடிநீர் வசதியை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில், ஜல் ஜீவன் மிஷன் (Jal Jeevan Mission) 2.0 திட்டத்தை தமிழ்நாட்டில் நீட்டித்து செயல்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டுள்ளன.
சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் இருந்து முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் காணொலி வாயிலாக இந்த நிகழ்வில் பங்கேற்றார். புதுதில்லியில் இருந்து மத்திய ஜல் சக்தி துறை அமைச்சர் சி.ஆர். பாட்டீல் கலந்து கொண்டார்.
2028 வரை திட்டம் நீட்டிப்பு
ஒவ்வொரு வீட்டிற்கும் குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கும் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தை 2028 டிசம்பர் மாதம் வரை நீட்டிக்க மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் வழங்கியது. இதைத் தொடர்ந்து தமிழ்நாட்டுடன் புதிய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
முதல் கட்டத்தில்…
ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் முதல் கட்டத்தில் தமிழ்நாட்டில் 46.71 லட்சம் வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் சுமார் 1.86 கோடி மக்கள் பயனடைந்துள்ளனர்.
மேலும்,
45 புதிய பல கிராம குடிநீர் திட்டங்கள்
56 ஒருங்கிணைந்த குடிநீர் வழங்கும் திட்டங்களில் மேம்பாட்டு பணிகள்
21,258 தனி கிராம குடிநீர் திட்டங்கள்
ஆகியவை செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
முதல் கட்ட ஜல் ஜீவன் மிஷன் திட்டங்களுக்கு மொத்தமாக ரூ.18,123.05 கோடி ஒதுக்கப்பட்டது.
இதில்,
மத்திய அரசின் பங்கு – ரூ.9,025.68 கோடி
தமிழ்நாடு அரசின் பங்கு – ரூ.9,097.37 கோடி
என அதிகாரப்பூர்வ தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.2,177 கோடி நிதி ஒதுக்கீடு
ஜல் ஜீவன் மிஷன் 2.0 திட்டத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தானதைத் தொடர்ந்து, முதல் கட்டமாக மத்திய குடிநீர் மற்றும் சுகாதாரத் துறையிலிருந்து (DDWS) தமிழ்நாட்டுக்கு ரூ.2,177.27 கோடி நிதி வழங்கப்பட உள்ளது.
கிராமப்புற குடிநீர் வசதிக்கு புதிய ஊக்கம்
ஜல் ஜீவன் மிஷன் 2.0 திட்டத்தின் மூலம் கிராமப்புறங்களில் பாதுகாப்பான குடிநீர் விநியோகத்தை மேலும் வலுப்படுத்துவதோடு, அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்கும் இலக்கை தமிழ்நாடு அரசு விரைவாக நிறைவேற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.