
லக்கினம் அல்லது இராசியில் இருந்து எண்ணி வரும் 11-ஆம் இடத்தை லாபஸ்தானம் என்பார்கள். இந்த இடத்தில் என்ன கிரகங்கள் இருந்தாலும் சரி அந்தக் கிரகம் பெரும்பாலும் நன்மையை தான் செய்யும். அதனால் தான் இந்த இடத்தை லாபஸ்தானம் என்கிறது ஜோதிடம்.
எதைக் குறிக்கும்
பொதுவாக 11-ஆம் இடம் என்பது வாழ்வில் கிடைக்கும் நேர்முக, மறைமுக லாபங்களைப் பற்றியும், மூத்த உடன் பிறந்தவர்களைப் பற்றியும், அவர்களுடன் இருக்கப் போகும் உறவு அல்லது பாசத்தின் அளவு பற்றியும் குறிக்கும் இடம் ஆகும். 11-ஆம் இடத்தில் என்னென்ன கிரகங்கள் ஸ்தான அடிப்படையில் இருந்தால் என்னென்ன பலன் தரும் என்று பார்ப்போம் வாருங்கள்.
சூரியன் இருந்தால் அந்த ஜாதகருக்கு தீர்க்காயுள் தரும். நல்ல சந்ததியை பெற்றுத் தரும்.
சந்திரன் இருந்தால் அந்த ஜாதகர் நல்ல மனதுடன் காணப்படுவார். அதிலும் அதிக மனவலிமை பெற்று இருப்பார். வளர்பிறையில் பிறந்து இருந்தால் எதிர்காலத்தில் நிறைய சம்பாதிப்பார்.
செவ்வாய் இருந்தால் தனம், சுகம், சந்தோசம் தரும். அனைத்து விதத்திலும் வாழ்வில் வெற்றி உண்டு.
புதன் இருந்தால் தீர்க்காயுள் உண்டு. நல்ல பணவரவை இந்த அமைப்பு பெற்றுத் தரும்.
குரு இருந்தால் உடன் பிறந்தவர்கள் மீது அதிக பாசம் இருக்கும். நல்ல சந்ததி உண்டு. பிரபல வாழ்க்கை வாழ்கிற பாக்கியம் உண்டு. குரு மற்ற கிரகங்களுடன் சேர்ந்து இருந்தாலும் கூட குறைந்தது அந்த ஊரில் அவரை அனைவருக்கும் தெரியும்.
சுக்கிரன் இருந்தால் பெண்கள் மூலம் இன்பம், நல்ல பண வரவு, ஆடை, ஆபரண சேர்க்கை என அனைத்தையும் இந்த அமைப்பு பெற்றுத் தரும்.
சனி இருந்தால் நல்ல ஆயுள் பலத்தை தரும். எப்படியாவது பணம் சம்பாதிக்கும் வழியை அவர்கள் அறிந்து வைத்து இருப்பார்கள். எதிர்காலத்தில் அவர்கள் கையில் பணம் அதிகளவில் புழங்கும். நல்ல ஆரோக்கியத்தை தரும். எந்த நோயாக இருந்தாலும் உடனடியாக குணமாகும். பிறர் செய்ய தயங்கும் அபாயகரமான காரியங்களை கூட இவர்கள் எளிதில் செய்வார்கள்.
இராகு இருந்தால் பிள்ளைகள் அல்லது நல்ல சந்ததி உண்டு. சூதாட்டம், கேளிக்கை மூலம் சம்பாதிப்பது என இவர்களுக்கு வரும் வருமானம் இந்த அடிப்படையில் இருக்கலாம். இராகு 11-ஆம் இடத்தில் அதீத வலிமையுடன் அவர் மட்டுமே தனித்து இருந்து விட்டால் தந்திரமாக பணத்தை சம்பாதிப்பதில் அவர்கள் வல்லவர்களாக இருப்பார்கள். பொய்யை கூட உண்மை போலவே சொல்லக்கூடியவர்களாக இருப்பார்கள். பெரிய கார்ப்பரேட் நிறுவனத்தை கூட எதிர்காலத்தில் நடத்தும் வாய்ப்பு உண்டு.
கேது இருந்தால் பல புண்ணிய காரியங்களை வாழ்வில் செய்யக் கூடியவர்கள். தார்மீக குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். அதிலும் கேது உச்ச பலத்துடன் தனித்து இருந்தால் ஆன்மீகத் துறை அல்லது ஆலயத்துறை அல்லது அது சம்மந்தமான வேலை கூட அமையலாம்.
இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள் (ஷேர் செய்யுங்கள்).