download_indicator

உங்கள் குழந்தைக்கு ஜாதகம் எப்போது எழுதலாம்?

குழந்தை பிறந்த நேரத்தை வைத்து, ஜாதகம் எழுதுவது பொதுவான வழக்கம் என்கிற நிலையில், ஒரு குழந்தை எப்போது, எந்த நாளில், எத்தனை மணி, நிமிடம், விநாடிகளில் பிறக்க வேண்டும் என்பது யாருக்கும் தெரியாது. பிறப்பு என்பது அவரவர் பூர்வஜென்ம வினைகளுக்கேற்ப அமைவதாகும். பிறந்த குழந்தைக்கு ஜாதகம் எப்போது வேண்டுமானாலும் எழுதலாம் தவறில்லை. அந்தக் காலத்தில் ஒரு வயதிற்கு முன்னதாக ஜாதகம் எழுதக் கூடாது என்று கூறியதற்கு காரணம் உண்டு. அதையடுத்து, அதற்கு என்ன காரணம் என்றும், முன்கூட்டியே ஜாதகத்தை கணித்து அவ்வாறு குழந்தை பிறந்த சம்பவங்கள் மற்றும் கருடபுராணம் கூறுவது குறித்தும் பார்க்கலாம்.

காரணங்கள்

பழங்காலத்தில் ஜோதிடர்கள் மிக குறைவாக இருந்ததால், இராசி, நவாம்சம், த்ரேக்கானம், பாவகம், சஷ்டியாம்சம், சப்தாம்சம் என ஷோடசாம்சம் வரை மாத வாரியாக பலன், தசா புக்தி வாரியாக பலன் தினசரி பலன் என்று மிகவும் விரிவாக எழுதுவதற்கு மிக அதிக நாட்கள் ஆகும்.

மேலும், அந்த காலத்தில் மருத்துவர்களும் மிக குறைவானவர்களே இருந்ததால், உடல் நலக்குறைவால் சிசு மரணங்களும் தவிர்க்க முடியாததாக இருந்தது.

அதனால், ஜாதகம் எழுத குறைந்தது ஓராண்டாவது ஆகட்டும் என்றார்கள். மற்றபடி எந்த ஜோதிட காரணங்களும் இல்லை. பிறந்த குழந்தைக்கு எப்போது வேண்டுமானாலும் ஜாதகம் எழுதலாம்.

புராணத்தில்

சில சமயங்களில் பிள்ளை பிறப்பதற்கு முன்னதாக கூட ஜாதகம் கணித்து, நல்ல ஜாதகமாக இருக்கும் குறிப்பிட்ட நேரத்தில், குழந்தையை பிரசவிக்கும் வழக்கம் புராண காலம் முதல் சரித்திர காலம் வரையில் இருந்து உள்ளது.

உதாரணமாக, மகாபாரத காலத்தில் பாண்டு, தர்மம் தெரிந்த பிள்ளையை பெறுவதற்காக ஜோதிடர்கள் மூலமாக தெரிந்து கொண்ட நேரத்தில் தான் தர்மர் பிறந்தார்.

அதேபோல், கோச்செங்கட் சோழனை நல்ல முகூர்த்த நேரத்தில் பெற வேண்டும் என்றே, அவன் தாய், குழந்தை பிறப்பை சற்றே தாமதித்து, தனது உயிரைக் கொடுத்து நல்ல முகூர்த்தத்தில் பெற்றது வரலாறு.

கருட புராணம்

பூர்வ ஜென்ம நினைவுகள் பிறக்கின்ற குழந்தையிடம் 5 வருடம் வரை இருப்பதால், எந்த குழந்தையும் ஐந்து வயது வரை பெற்றோர்களுக்கு சொந்தமில்லை என்று கருட புராணம் சொல்கிறது.

அதன்படி, 5 ஆண்டுகளுக்கு பிறகே குழந்தைக்கு ஜாதகம் எழுத வேண்டும் என்று தெரிய வருகிறது.

குழந்தைக்கு 3 வயது முடிந்த பின்னரே ஜாதகம் பார்க்க வேண்டும். அப்போதுதான் அது பலனளிக்கும் என சில ஜாதக நிபுணர்கள் கூறுவதுண்டு.

ஒரு குழந்தை பிறந்து ஒருவருடம் முழுமையாக நிறைவு பெற்ற பிறகு ஜாதகம் எழுவதுவது தான் சரியான முறை. அதற்குள் அவசரப்பட்டு எழுத வேண்டிய அவசியம் இல்லை என்பது தற்போதைய நடைமுறையாக உள்ளது.



Follow Us on