ஜாதகத்தில் சூரியன், சுக்கிரன் சேர்க்கை நன்மையா? தீமையா?

பொதுவாக, ஜாதகத்தில் சூரியன், சுக்கிரன் சேர்ந்து இருப்பது நன்மை என்று சொல்லி விடமுடியாது. அது சேர்கின்ற இடத்தை பொறுத்தது. இணைந்து இருக்கும் சூரிய, சுக்கிரனை பார்க்கின்ற கிரகத்தை பொறுத்தது. சூரியன் நெருப்பு கிரகம். சுக்கிரனோ நீர் தன்மை கொண்ட கிரகம். இவை இரண்டும் இணைந்தால் என்ன நடக்கும்? தவிர, சூரியனுடன் ஒரு குறிப்பிட்ட பாகையில் சேரும் எந்த ஒரு கிரகமும் அஸ்தமங்கம் அடையும். அதாவது, சூரிய ஒளியின் தாக்கத்தில் தன் சுய ஒளிக் கிரணங்களை இழக்கும்.

அவயோகத்தை

ஒருவரின் ஜாதகத்தில் சூரியன், சுக்கிரன் மட்டும் ஒரு இராசியில் இணைந்து இருந்தால், குடும்ப வாழ்க்கையில் எதிரும், புதிருமாக சில நேரம் இருக்கச் செய்யும். மகரம், கும்பம் ஆகிய ராசிகளில் பிறந்தவர்களுக்கு சூரியன், சுக்கிரன் சேர்க்கை நன்மையை செய்யாது. இதற்குக் காரணம், மேற்சொன்ன இரு ராசிக்கும் சுக்கிரன் ஒருவரே யோகத்தை செய்யக் கூடிய கிரகம். இந்நிலையில், 8-ஆம் அதிபதியுடன் (அதாவது சூரியனுடன்) சுக்கிரன் சேரும் போது மகர ராசிக்கு ஒரு விதத்தில் அது அவயோகத்தை தரும். அதாவது நல்ல பலனைத் தராது.

எதிர்பாராமல்

கும்பத்திற்கு சுக்கிரன், சூரியனுடன் சேரும் போது அஸ்தமங்கம் அடையும் என்பதால், சுக்கிர தசை அல்லது புத்தி வரும் காலத்தில் சுக்கிரன் தரும் நற்பலன்கள் அதிக அளவில் குறையலாம். பொதுவாகவே, சூரியனும், சுக்கிரனும் ஒன்றாக உள்ள ஜாதகர்களின் திருமணம், தொழில், உத்தியோகம் எல்லாமே எதிர்பாராமல் நடக்கும். இவர்கள் சற்று நிதானமாக சமயோசிதமாக எதையும் செய்ய வேண்டும். வரவு எட்டணா, செலவு பத்தணா என்ற கதை ஆகிவிடும். ஆகவே வரவு, செலவுகளில் கவனமாக இருப்பது நல்லது. மேலும், இவர்கள் எதையும் நம்பக்கூடியவர்கள். அதிதைரியமாக செய்துவிட்டு நஷ்டபட்டாலும் வெளியே காட்டிக் கொள்ள மாட்டார்கள்.

லக்கினம் முதற்கொண்டு 12 பாவங்களில் சூரிய, சுக்கிர சேர்க்கை என்ன செய்யும் அல்லது என்ன பலன் தரும் என்பதை இப்போது பார்ப்போம்.

லக்கினத்தில் சூரியன், சுக்கிரன் சேர்ந்து அல்லது இணைந்து காணப்பட்டால், உடல் ஆரோக்கியத்தில் தொய்வு நிலை ஏற்படலாம். ஒற்றைத் தலைவலி போன்ற பிரச்சனைகள் வரலாம். கௌரவம் கெடும்படி நடந்து கொள்வார்கள். தன் பெயரைத் தானே கெடுத்துக் கொள்வார்கள்.

லக்கினத்திற்கு இரண்டாம் இடத்தில், சூரியன், சுக்கிரன் சேர்ந்து அல்லது இணைந்து காணப்பட்டால், குடும்பத்தில் மகிழ்ச்சி குறையலாம். கண் பார்வையில் கூட குறை ஏற்படலாம். சிலருக்கு கண் புரை பிரச்சனை ஏற்படலாம். குடும்பத்தில் தேவை இல்லாத தன விரயங்களை எல்லாம் சந்திக்க வேண்டி வரும். பேச்சில் கூட நிதானம் இருக்காது. கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் கூடுதல் கவனம் தேவைப்படும்.

சூரியன், சுக்கிரன் சேர்க்கை லக்கினத்திற்கு 3-ஆம் இடத்தில் காணப்பட்டால், உடன் பிறந்தவர்கள் வழியில் தொல்லைகள் ஏற்படலாம். திடீர் பயணங்களால் தேவை இல்லாத அலைச்சல் எல்லாம் ஏற்படும். அபரிவிதமான துணிச்சல் தரும். இதனால்,' என்ன செய்கிறோம்!' என்ற நிதானம் இல்லாமல் போகலாம்.

சூரியன், சுக்கிரன் சேர்க்கை லக்கினத்திற்கு 4-ஆம் இடத்தில் காணப்பட்டால், வண்டி, வாகனங்களில் செல்லும் சமயத்தில் கூடுதல் கவனத்துடன் சென்று வருதல் வேண்டும். வீடு, மனை வாங்கும் யோகம் தாமதம் ஆகலாம். தாயாரின் உடல் நிலை அடிக்கடி பாதிக்கலாம். சில சமயங்களில் தாயாருடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். சிலர் வண்டி, வாகனங்களை அடிக்கடி மாற்றலாம். நேரத்திற்கு உணவு உண்ண முடியாத நிலை ஏற்படலாம். இரவில் அடிக்கடி தூக்கமின்மை ஏற்படும்.

சூரியன், சுக்கிரன் சேர்க்கை லக்கினத்திற்கு 5-ஆம் இடத்தில் காணப்பட்டால், குழந்தை பாக்கியம் தாமதம் ஆகலாம். முதல் கரு உண்டாகும் காலத்தில் கூட கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. வாழ்க்கையில் நிறைய மன உலைச்சல் ஏற்படலாம். கல்வியில் தடை, ஞாபகமறதி போன்ற பிரச்சனைகள் கூட ஏற்படலாம்.

சூரியன், சுக்கிரன் சேர்க்கை லக்கினத்திற்கு 6-ஆம் இடத்தில் காணப்பட்டால், வீண் வழக்குகள் மற்றும் விவாதங்கள் ஏற்படலாம். சிலருக்குத் தேவை இல்லாத கடன் ஏற்படலாம். எதிரிகளின் தொல்லை அதிகரிக்க இடம் உண்டு. உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான நிலை காணப்படலாம். இந்நிலையில், எதிலும் இவர்கள் எச்சரிக்கை உணர்வுடன் இருப்பது நல்லது.

சூரியன், சுக்கிரன் சேர்க்கை லக்கினத்திற்கு 7-ஆம் இடத்தில் காணப்பட்டால், திருமண வாழ்க்கையில் அதிக நிதானத்துடன் இருந்து கொள்வது நல்லது. சிலருக்கு இரு திருமணம் நடந்தேற இடம் உண்டு. நல்ல நண்பர்கள் அமைவது கடினம். அப்படியே அமைந்தாலும் வெகு நாட்கள் அவர்கள் நம்முடன் பயணிக்க மாட்டார்கள். கூட்டுத் தொழில் நன்மை செய்யாது. அரசாங்க கெடுபிடி அதிகரிக்க இடம் உண்டு.

சூரியன், சுக்கிரன் சேர்க்கை லக்கினத்திற்கு 8-ஆம் இடத்தில் காணப்பட்டால், வண்டி, வாகனங்களில் செல்லும் சமயத்தில் அதிக நிதானத்துடன் சென்று வருதல் நல்லது. சில சமயங்களில் கண்டங்கள் ஏற்பட்டு விலகலாம். நெருப்புடன் பழகும் சமயத்தில் கூடுதல் கவனத்துடன் இருந்து கொள்வது நல்லது. சிலருக்கு உஷ்ண சம்மந்தமான பிரச்சனைகள் வரலாம்.

சூரியன், சுக்கிரன் சேர்க்கை லக்கினத்திற்கு 9-ஆம் இடத்தில் காணப்பட்டால், தந்தையுடன் நிறைய கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். பூர்வீக சொத்து விஷயங்களில் பிரச்சனைகள் ஏற்படலாம். தந்தையின் உடல் நிலை பாதிக்கப்படலாம். தடை கடந்து படிக்க வேண்டி இருக்கும். ஜாதகர் அதிக முன்கோபியாக இருப்பார்.

சூரியன், சுக்கிரன் சேர்க்கை லக்கினத்திற்கு 10-ஆம் இடத்தில் காணப்பட்டால், தொழில் வளர்ச்சியில் அதிக இடையூறுகள் இருக்கும். அவற்றை எல்லாம் கடந்து முன்னேறுவார்கள். உத்யோக ரீதியாகக் கூட நிறைய அலைச்சல் ஏற்படலாம். நல்ல திறமைகள் இருந்தும், வாழ்க்கையில் சீக்கிரம் வளர்ச்சி அடைய முடியாத நிலை காணப்படும். உத்யோகத்தில் நேர்முக, மறைமுக எதிர்ப்புகளைக் கடந்தே முன்னேற வேண்டி இருக்கும்.

சூரியன், சுக்கிரன் சேர்க்கை லக்கினத்திற்கு 11-ஆம் இடத்தில் காணப்பட்டால், நிறைய செலவு செய்து வசதிகளை மேம்படுத்திக் கொள்வார்கள். சதா சிந்தனை வயப்பட்டுக் கொண்டே இருப்பார்கள். நிறைய சிந்திப்பார்கள் ஆனால், செயல்பாடு குறைந்து காணப்படலாம். அவ்வப்போது சின்னச் சின்ன லாபங்கள் கொடுத்தாலும், தந்தைக்கு நல்ல பலன்களை சொல்வதற்கு இல்லை.

சூரியன், சுக்கிரன் சேர்க்கை லக்கினத்திற்கு 12-ஆம் இடத்தில் காணப்பட்டால், செலவுகள் அதிகரிக்கும். இதனால் கை இருப்பு அதிக அளவில் கரையலாம். இறை வழிபாட்டில் நாட்டம் அதிகரிக்க இடம் உண்டு. திருமண வாழ்க்கையில் நாட்டம் குறையலாம்.

பரிகாரம்

ஒருவரது சொந்த ஜாதகத்தில் சூரியன், சுக்கிரன் சேர்ந்து காணப்பட்டால் அதிகாலையில் சூரிய நமஸ்காரம் செய்வது நல்ல பலன்களைத் தரும். ஆதித்ய ஹ்ருதய சுலோகம் சொல்வது நல்லது. சூரியனார் கோயில் மற்றும் ஸ்ரீ ரங்கம் சென்று வருவது நல்லது.

இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள் (ஷேர் செய்யுங்கள்).



Follow Us on