download_indicator

இரண்டு நாட்களில் திதி வந்தால் என்ன செய்வது?

விண்வெளியில் சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையே உள்ள தூரத்தை குறிப்பது தான் திதி என்பதாகும். சூரியனிலிருந்து, சந்திரன் ஒவ்வொரு நாளும் எவ்வளவு தூரம் விலகிச் சென்றுள்ளார் என்பதைக் குறிப்பதே திதி ஆகும். ஒரு திதிக்கு 12 பாகை. திதி என்ற சொல்லே பிறகு தேதி என்று பெயரானது. அமாவாசை தினத்தன்று சூரியனும், சந்திரனும் சேர்ந்து இருப்பார்கள். பௌர்ணமி தினத்தன்று இருவரும் நேர் எதிராக 180 டிகிரி தூரத்தில் இருப்பார்கள். அமாவாசை அன்று சேர்ந்து இருக்கும் சூரியனும், சந்திரனும் பிரதமை அன்று பிரிந்து பின்னர் மீண்டும் சேருவதற்கு 30 நாட்கள் ஆகின்றன. இந்த 30 நாட்களும், 30 திதிகள் எனப்படுகின்றன. 30 திதிகளில் பவுர்ணமிக்கும், அமாவாசைக்கும் மட்டும் பெயர் உள்ளது. மற்ற 28 திதிகளும் ஒன்று, இரண்டு என்பது முதல் பதினான்கு வரையிலான எண்ணிக்கையை குறிக்கும் வடமொழிச் சொற்களால் குறிக்கப்படுகின்றன. அதையடுத்து, திதிகள் விபரம், எதற்கு உகந்தது மற்றும் இரண்டு தேதிகளில் வந்தால் என்ன செய்வது என்ற விபரங்களை பார்க்கலாம்.

வளர்பிறை, தேய்பிறை

அமாவாசைக்கு அடுத்த நாள் முதல் பௌர்ணமிக்கு முதல் நாள் முடியும் திதிகள் சுக்ல பட்ச திதிகள் அல்லது வளர்பிறை திதிகள் எனப்படும்.

பௌர்ணமிக்கு அடுத்த நாள் முதல் அமாவாசைக்கு முதல் நாள் முடியும் திதிகள் கிருஷ்ண பட்ச திதிகள் அல்லது தேய்பிறை திதிகள் எனப்படும்.

அமாவாசை, பிரதமை, துவிதியை, திருதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப்தமி, அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரியோதசி, சதுர்த்தி, பௌர்ணமி என்று திதிக்கள் அழைக்கப்படுகின்றன.

எந்த திதி, எதற்கு

பிரதமை, சஷ்டி, ஏகாதசி போன்ற திதிகளில் கோயில் விழா எடுக்கலாம். நடனம், பாட்டு போன்ற இசை தொடர்பான நிகழ்ச்சிகள், வகுப்புகளில் கலந்து கொள்ளலாம்.

துவிதியை, சப்தமி, துவாதசி போன்றவற்றில் வாகனம் வாங்க, விற்க, பிராயணம் செய்வது போன்ற வேலைகளை தொடங்கலாம்.

திரிதியை, அஷ்டமி, திரியோதசி போன்ற திதிகளில் கொடி மரம் நடுவது நல்லது.

திரிதியை, திரியோதசி திதிகளில் சுபகாரியங்கள் செய்யலாம்.

சதுர்த்தி, நவமி போன்றவற்றில் எதிரிகள் மீது வழக்கு போடுவது மற்றும் எதிர்மறை செயல்களுக்கு சிறந்தது.

பஞ்சமி, தசமி, பௌளர்ணமி போன்ற திதிகளில் திருமணம், யாத்திரை, யாகம் மற்றும் சுபகாரியங்கள் செய்யலாம்.

இரண்டு தேதியில்

சில நாட்களில் திதியானது இரண்டு நாட்களில் வரும்.

அதாவது முதல் நாள் காலை, மதியம், மாலை அல்லது இரவு போன்ற நேரங்களில் தொடங்கி மறு நாள் காலை, மதியம், மாலை அல்லது இரவு வரை இருக்கும்.

இவ்வாறு இரண்டு நாட்கள் இருந்தால் அதில் எந்த நாளை கணக்கிடுவது என்பதில் பலருக்கும் குழப்பம் இருக்கும்.

திதி கணக்கிடுவதில் பொதுவாக சூரிய உதயம் எந்த நாளில் வருமோ அதை கணக்கிடுவதே முக்கியமாகும்.

ஆனால், சதுர்த்தி, அஷ்டமி போன்றவைகளுக்கு மாலை நேர பூஜை முக்கியம் என்பதால் அந்த திதிகளின்போது, எந்த நாளில் மாலை வருகிறதோ அதை கணக்கிட வேண்டும்.



Follow Us on