download_indicator

இறைவனை அடைவதற்கு திருமூலர் கூறியதென்ன?

பதினெட்டு சித்தர்களில் ஒருவராக கருதப்படுகின்ற திருமூலர் தனது திருமந்திர பாடல்களில் கூறாத விஷயம் எதுவுமில்லை. அந்தளவிற்கு அனைத்து துறைகளிலும் அவர் கையாண்டுள்ளார். அதனால்,திருமூலரை சர்வக்ஞ்ஞர் என்று கூட கூறலாம். அந்தளவிற்கு அனைத்தும் அறிந்த திருமூலர் இறைவனை அடைவதற்கு என்ன செய்தால் போதும் என்று அவர் கூறியதை அறிந்திடலாம்.

சிவயோகியார்

கைலாயத்தில் நந்திதேவரின் அருள் பெற்ற யோகிகளுள் ஒருவரான சுந்தரநாதர் என்னும் சிவயோகியார் அஷ்ட சித்திகளையும் கற்றறிந்து பொதிகை மலையில் உள்ள அகஸ்திய முனிவரை சந்திக்க சென்றார்.

செல்லும் வழியில் கேதார்நாத், நேபாளம், காசி, திருக்காளத்தி, திருவாலங்காடு, காஞ்சி ஆகிய ஸ்தலங்களை தரிசித்து தில்லையில் இறைவனின் அற்புத நடனத்தைக் கண்டு மகிழ்ந்தார்.

அதன் பின்னர் அங்கிருந்து சென்றபோது ஆடுதுறையில் கோமுக்தீஸ்வர பெருமானை தரிசித்து சென்றார்.

சாத்தனூர் என்ற ஊரை அடைந்தபோது, பசுக்களை மேய்க்கும் மூலன் என்ற இடையர் ஒருவர் இறந்து கிடப்பதையும், அவரை சுற்றி நின்ற பசுக்கள் கண்ணீர் சிந்திக் கதறுவதையும் கண்டார்.

பசுக்களின் துயர்கொண்டு மனம் இரங்கிய சிவயோகியார் அவற்றின் துன்பங்களை போக்குவதற்காக, கூடு விட்டுக் கூடு பாயும் வித்தையில் தனது உயிரை மூலனின் உடலில் செலுத்தி எழுந்தார்.

அதைக்கண்ட பசுக்கள் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தன.

திருமந்திரம்

மாலையில் பசுக்கள் வீட்டிற்கு திரும்பி சென்றபோது, மூலனாக இருந்த திருமூலரும் சென்றார்.

அங்கே மூலனின் மனைவியிடம், தன்னைப்பற்றி தெரிவித்து அங்கிருந்து வந்து மறைவாக வைத்திருந்த தனது உடலை தேடினார்.

ஆனால் உடலை காணாததால், எல்லாம் இறைவன் சித்தம் என்று கருதி திருவாவடுதுறை சென்று, அங்கிருந்த சிவன் கோயிலில் உள்ள அரசமரத்தின் கீழ் சிவராஜ யோகத்தில் அமர்ந்து, திருமந்திர பாடல்களை அருளி செய்தார்.

ஆண்டுக்கு ஒரு பாடலாக, தமிழில் மூவாயிரம் பாடல்கள் கொண்ட திருமந்திரத்தை அருளினார்.

திருமூலர் அருளிச்செய்த “திருமந்திரம்” நூல் சைவ திருமுறைகளில் பத்தாம் திருமுறையாக உள்ளது.

திருமந்திரத்தில் பல யோக ரகசியங்களையும், வாழ்க்கைத் தத்துவங்களையும் திருமூலர் தெரிவித்துள்ளார்.

தாமறிந்த உண்மைகளை உலகத்தவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில்

"யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்

வான்பற்றி நின்ற மறைபொருள் சொல்லிடின்

ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம் தான்பற்றப்

பற்றத் தலைப்படும் தானே"

திருமந்திரத்தின் முதல் பாடலிலேயே அதை தெரிவித்துள்ளார்.

இறைவனை அடைவதற்கு

திருமூலரின் திருமந்திரம் ஒன்பது தந்திரங்களைக் கொண்டுள்ளது.

முதல் நான்கு தந்திரங்கள் அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கையும் உணர்த்துகின்றன.

அதையடுத்துள்ள ஐந்து தந்திரங்களும் வீடுபேறு, வீடுபேற்றுக்கான வழி, வழிபாடு, வழிபாட்டுறுதி, வாழ்வு ஆகிய ஐந்தையும் உணர்த்துகின்றன.

திருமந்திரத்திற்கு இணையாக வேறு திருமுறைகள் எதுவும் இல்லை.

இந்த மூவாயிரம் திருமந்திர பாடல்களையும் அதிகாலையில் எழுந்து படிப்பவர்கள், பிறவிப்பாசம் நீங்கி இறைவனை அடைவார்கள் என்று திருமூலர் கூறுகின்றார்.

அத்தகைய சிறப்பு வாய்ந்த திருமூல நாயனாரின் குருபூஜை ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் அஸ்வினி நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.

சிவயோகியார், மூலன் என்ற இடையன் உடலில் புகுந்து திருமூலரான ஸ்தலமாகிய சாத்தனூரில் உள்ள திருமூல நாயனார் திருக்கோயிலிலும், (ஆடுதுறையிலிருந்து 3 கி.மீ.தொலைவில் சாத்தனூர் உள்ளது)

முக்தியடைந்த ஸ்தலமான திருவாவடுதுறையில் உள்ள கோமுக்தீசுவரர் கோயிலிலும் திருமூலர் குருபூஜை நடத்தப்படுகிறது.

திருமூலரின் குருபூஜை தினமான இன்று அவரை வணங்கி திருமந்திர பாடல்களை படிப்பது சிறப்பாகும்.

மயிலாடுதுறை, கும்பகோணம் சாலையில் உள்ள திருவாலங்காடு என்ற பேருந்து நிறுத்தத்தில் இறங்கி 1 கி.மீ நடந்து சென்றால் திருவாவடுதுறையை அடையலாம். இங்கு திருமூலரின் ஜீவ சமாதி உள்ளது.

திருமூலரின் திருமந்திரப் பாடல்களை தினமும் பாடி வருபவர்கள் இறைவனை அடைவார்கள் என்று திருமூலர் கூறுவதை சிவனடியார்கள் அனைவரும் அறிந்திட ஷேர் செய்யுங்கள்.



Follow Us on