
குரு தான் இருக்கும் இடத்தை விட, பார்க்கும் இடத்திற்கு அதிக நன்மைகளை செய்வார். ஒருவருடைய ஜாதகத்தில் குரு வலிமையாக இருக்கும்போது, அவருக்கு சகல நன்மைகளும் நடைபெறும். அதுவே, குரு தோஷம் இருப்பவர்கள், தன் வாழ்வில் உயர்வு நிலையை எட்டாமல், பிறர் வாழ்க்கை உயர்வுக்கு ஏற்றி விடும் ஏணியாக மட்டுமே செயல்படுவர். அதையடுத்து, குரு தோஷம் என்றால் என்ன, அது நீங்குவதற்கு என்ன பரிகாரம் செய்வது, எங்கே செய்தால் நல்லது என்று பார்க்கலாம்.
குரு தோஷம்
குரு பகவான் என்கிற வியாழன், தான் நின்ற இடத்திலிருந்து 5-வது ராசியையும், 9-வது ராசியையும் பார்ப்பார். மேலும் 7-வது ராசியை நேர் பார்வையாக பார்ப்பார்.
அத்துடன், தான் நின்ற ராசிக்கு அடுத்த ராசியையும் அதாவது 2-வது வீடு, மற்றும் 11-வது வீட்டையும் சூட்சுமப் பார்வையின் மூலம் பார்ப்பார்.
அதையடுத்து, குரு தோஷம் என்பது, ஒருவரின் ஜாதகத்தில் வியாழன் மற்றும் காரி என்கிற சனி கோள்கள் சேர்க்கை பெற்றாலும், குரு பகவானை சனி பகவான் எங்கிருந்து நோக்கினாலும், குருவின் சாரத்தில் சனியும், சனியின் சாரத்தில் குருவும் இருத்தாலும், குரு மற்றும் சனி கோள்கள் ஒன்றையொன்று நோக்கினாலும் அது குரு தோஷம் ஆகும்.
ஜாதகத்தில், குரு நீசமாகவோ, பகை பெற்றோ இருந்தால், அத்தகைய ஜாதகர்கள் பரிகாரங்கள் செய்து கொள்வது நல்லது.
என்ன பரிகாரம்
வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்திக்கு காலை 8 மணிக்குள்ளாக அர்ச்சனை மற்றும் அபிஷேகம் செய்து, மஞ்சள் நிற வஸ்திரம் சாற்றி வழிபாடு செய்ய வேண்டும்.
வியாழக்கிழமை தோறும் குரு பகவானுக்கு பிடித்த மஞ்சள் நிற லட்டுகளை வாங்கி, நைவேத்தியம் செய்து, கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு வழங்க வேண்டும்.
மங்களகரமான மஞ்சள் நிறப் பொருள்களைப் பிறருக்கு தானம் கொடுப்பதும் சிறந்த பரிகாரங்களாகும்.
நவக்கிரக சந்நிதியில் உள்ள குரு பகவானுக்கு, வியாழக்கிழமை தினத்தன்று காலை 8 மணிக்குள்ளாக, 27 கொண்டைக்கடலை கோர்த்த மாலையை அணிவித்து, மஞ்சள் நிற பூக்கள் சமர்ப்பித்து வணங்க வேண்டும்.
குரு காயத்ரி மந்திரத்தை 108 முறை துதித்து வருவதால் குரு பகவானால் ஏற்படும் தோஷங்கள் நீங்கி, உங்கள் வாழ்வில் மேன்மையான பலன்கள் ஏற்படும்.
இந்த பரிகாரத்தை 9 வாரங்கள் முதல் 27 வாரங்கள் வரை செய்வது சிறப்பு.
கோயில் யானைகளுக்கு வாழைப்பழங்கள் மற்றும் கரும்பு போன்றவற்றை கொடுப்பதும் குருவின் நல்லருளை பெற்றுத்தரும்.
எந்த ஊர்களில்
நவக்கிரகத் தலங்களில் குருவுக்கு முதன்மையான தலமாகத் திகழும் கும்பகோணம் அருகே உள்ள ஆலங்குடிக்குச் சென்று வழிபடுவது குருவருளை பெற்றுத்தரும்.
சென்னை, போரூரில் இருக்கும் அருள்மிகு ராமநாதீஸ்வரப் பெருமான் திருக்கோயிலுக்கு வியாழன் தோறும் சென்று வழிபடுவது மேன்மை தரும்.
சென்னை பாடியில் உள்ள திருவல்லீஸ்வரர் கோயிலுக்கு சென்று வழிபடுவதும் சிறப்பை கொடுக்கும்.
ஆறுமுகப்பெருமானின் ஆறுபடைவீடுகளில், இரண்டாம் படைவீடான திருச்செந்தூர், தென்குடித்திட்டை போன்ற தலங்களும் குருவின் அருளை பெற்றுத்தரும் கோயில்கள்தான்.
குருதிசை, குருபுத்தி நடப்பில் உள்ளவர்கள் மற்றும் குரு தோஷத்தால் பாதிக்கப்பட்டு, முன்னேற இயலாத நிலையில் இருப்பவர்கள் நவதிருப்பதிகளுள் ஒன்றாக குரு ஸ்தலமாக திகழும் ஸ்ரீவைகுண்டம் அருகில் உள்ள ஆழ்வார் திருநகரி வந்து குரு பரிகாரம் செய்யலாம்.
நவ கைலாயங்களில் ஒன்றாக குரு ஸ்தலமாக திகழும் முறப்ப நாடில் உள்ள ஸ்ரீகைலாச நாதர் கோயிலில் வீற்றிருக்கும் குரு பகவானை வழிபாடு செய்வது மிகவும் சிறந்தது.
இந்த கோயில்கள் மட்டுமல்ல, அனைத்து சிவன் கோயில்களில் இருக்கும் நவக்கிரக குருவையும், தட்சிணாமூர்த்தியையும் வழிபட நன்மைகள் கிடைக்கும்.
குரு தோஷம் உள்ளவர்களுக்கு இக்கட்டுரையை அனுப்பி அவரது தோஷத்தை நீக்குவதற்கான பலனை அடைய செய்யுங்கள்.(ஷேர்)