download_indicator

வெளிநாடு யோகம் யாருக்கு உண்டு

"திரைகடல் ஓடியும் திரவியம் தேடு!" என்பது ஆன்றோர் வாக்கு. இன்றைய கால கட்டத்தில் மனிதன் பணம் சம்பாதிக்கும் இயந்திரமாக மாறி வருகிறான் என்பது தான் உண்மை. அரசு வேலை கிடைக்காதவர்கள், சொந்தத் தொழில் செய்ய மூலதனம் இல்லாதவர்கள் என இந்த வகையினர் அடுத்து நாடிச் செல்வது வெளிநாட்டு வேலை தான். வெளிநாட்டு மாப்பிள்ளை என்றாலே ஒரு தனி மரியாதை, இன்றும் கூட சமூகத்தில் இருப்பதை நாம் சில இடங்களில் காண்கிறோம். காரணம் அவர்கள் சம்பாதிப்பது பணம் அல்ல டாலர்களும் - தினார்களும் தான். இப்படிப்பட்ட வெளிநாட்டு வேலை ஜாதகத்தில் யாருக்கெல்லாம் கிடைக்கும். அதற்கு எப்படிப் பட்ட அமைப்பு இருக்க வேண்டும் என்று பார்ப்போம் வாருங்கள்...

யோகம் தரும் அமைப்பு

கடக லக்கினம் மற்றும் கடக ராசியில் பிறந்து ஐந்தில் சந்திரன் இருந்தால் வெளிநாடு செல்லும் பாக்கியம் உண்டாகும்.

ஐந்தாம் அதிபதி சந்திரனாக இருந்து அவரை குரு பார்த்தால் வெளிநாடு செல்லும் பாக்கியம் உண்டு.

குரு ஐந்தாம் அதிபதியாகி கடகத்தில் உச்சம் பெற்றால் வெளிநாடு செல்லும் பாக்கியம் உண்டு.

லக்கினாதிபதி ஐந்தாம் இடத்தில் இருந்து குரு பார்வை பெற்று இருந்தால் அவர்கள் வெளிநாடு செல்வார்கள்.

லக்கினம் அல்லது இராசிக்கு 12 ஆம் இடத்தில் சந்திரன் ஆட்சி அல்லது உச்சம் பெற்று இருந்தால் அவர்கள் வாழ்க்கை அந்நிய தேசத்தில் கழியும்.

சந்திரன், குரு, இராகு, செவ்வாய் இவா்கள் 9, 12 வீடுகளுடன் சோ்ந்திருந்தாலும் தொடா்பு பெற்றிருந்தாலும் வெளிநாடு யோகம் கிடைக்கப்பெறும்.

சந்திரதசை, இராகுதசை, சனிதசை, சுக்கிரதசை, நடக்கும் போது வெளிநாட்டு பயணம் ஏற்படலாம். ஜாதக ரீதியாக 3,7,9,12 ஆகிய வீட்டில் இருக்கும் கிரகங்களின் திசை மற்றும் புத்திகள் நடப்பது. இத்தகைய தசா காலங்களில் அவர்களே எதிர்பாராத வகையில் வேலை பார்க்கும் நிறுவனம் மூலம் கூட வெளிநாடு செல்லலாம்.

5 ஆம் இடத்தில் சுக்கிரன் உச்சம் பெற்று குருவால் பார்க்கப்பட்டாலும் கூட வெளிநாடு செல்லும் பாக்கியம் உண்டு.

5 ஆம் அதிபதி உச்சம் பெற்று சந்திரனுடன் இணைந்து இருந்தால் சந்திர தசை அல்லது சந்திர புத்தி நடக்கும் சமயம் அவர்கள் வெளிநாடு செல்வார்கள்.

மேஷம், கடகம், துலாம், மகரம் இவை நான்கும் சரராசிகள். லக்ன ரீதியாக 9, 12 ஆம் வீடுகள் சரராசிகளாக இருந்தால் வெளிநாடு செல்லும் யோகம் உண்டு. 9,12 ஆம் வீட்டின் அதிபதிகள், சரராசிகளில் இருந்தாலும் கூட அந்த ஜாதகர் வெளிநாடு செல்வார்.

உச்சம் பெற்ற சந்திரன் லக்கினம் அல்லது இராசிக்கு ஐந்தாம் இடத்தை பார்த்தால் அந்த ஜாதகர் வெளிநாடு செல்வார்.

9 ஆம் வீடு அல்லது 12 ஆம் வீட்டில் இராகுவோ, சனியோ இருந்து 9 அல்லது 12ஆம் அதிபதி சேர்க்கை இருந்தால் வெளிநாடு செல்லும் யோகம் அமையும்.



Follow Us on