
ஜோதிடக்கலை ஒரு முடிவில்லாத கலை என்பதால் இதை யாராலும் அவ்வளவு எளிதில் கற்றுக்கொள்ள முடியாது. ஜோதிடத்தில் நிபுணத்துவம் வாய்ந்தவன் என்று கிருஷ்ண பகவானிடம் பெயர் வாங்கிய சகாதேவனால் கூட, ஜோதிடத்தில் பத்தில் ஒரு பங்கு கூட தெரிந்து கொள்ள முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அத்தகைய சிறப்பு வாய்ந்த ஜோதிட கலையில், சாஸ்திரம் கூறும் சில ரகசியங்களை மட்டும் அறிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படும் போது, வாழ்வில் அனைத்து வகையான இன்பங்களையும் பெற முடியும். அதையொட்டி, ஒவ்வொரு நாளுக்கும் அதிபதியாக இருக்கின்ற திதிகளை வணங்கி ஒரு காரியத்தில் ஈடுபட்டால் அதில் சாதகமான பலனை அடைய முடியும். அதன்படி என்ன திதிக்கு யார் அதிதேவதை என்றும், எந்த காரியங்களில் ஈடுபடுவது நல்லது என்றும் பார்க்கலாம்.
பிரதமை திதி
இந்த திதிக்கு அதிதேவதை அக்னி பகவான் ஆவார். பிரதமை தினம் புது வீடு கட்டுவதற்கான வாஸ்து காரியங்கள் செய்வதற்கும், திருமணம் போன்ற சுப காரியங்கள் செய்வதற்கும் ஏற்ற திதியாகும். நெருப்பு தொடர்புடைய காரியங்கள் செய்யலாம். அக்னி வேள்விகள், ஹோமங்கள் போன்றவற்றை செய்யலாம்.
துவிதியை திதி
இந்த திதிக்கு அதிதேவதையாக பிரம்ம தேவன் இருக்கிறார். இந்நாளில், அரசாங்கம் தொடர்புடைய அனைத்து காரியங்களும் செய்யலாம். திருமணம் செய்யலாம். புதிய ஆடை, நகைகள் வாங்கி அணியலாம். தெய்வங்களுக்கு விரதம் இருக்கலாம். கோயில்களில் சிலை பிரதிஷ்டை செய்யலாம். புதிய கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டலாம்.
திருதியை திதி
இந்த திதியின் அதிதேவதை பராசக்தி ஆவார். இந்த திதியில் குழந்தைக்கு முதன் முதலில் அன்னம் ஊட்டும் சடங்கு செய்யலாம். சீமந்தம் செய்யலாம். சிற்பம் செதுக்கும் காரியங்களில் ஈடுபடலாம். அனைத்து விதமான சுப காரியங்களுக்கும் நல்லது.
சதுர்த்தி திதி
இந்தத் திதிக்கு அதிதேவதைகளாக எமதர்மன், விநாயகப் பெருமான் ஆகிய இருவரும் இருக்கின்றனர். பிற நாடுகளின் மீதான படையெடுப்புக்கு உகந்த நாளாக முற்காலத்தில் மன்னர்கள் தேர்ந்தெடுத்தனர். எதிரிகளை வெல்ல, விஷ சாஸ்திரம், நெருப்பு சம்பந்தமான காரியங்கள் செய்ய உகந்த திதி இது.
பஞ்சமி திதி
அனைத்து சுப காரியங்கள் செய்வதற்கு விசேஷமான திதி ஆகும் இது. நீண்ட நாட்களாக இருக்கும் நோய்கள் தீர இத்திதியில் அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம். இந்த திதிக்கு நாக தேவதைகள் அதிதேவதை என்பதால், நாக வழிபாட்டுக்கு உகந்த திதியாக கருதப்படுகிறது.
சஷ்டி திதி
இந்த திதிக்கு அதிதேவதை கார்த்திகேயன் எனப்படும் முருகப் பெருமான் ஆவார். ஆறுமுகம் கொண்ட முருகனை வழிபடுவதன் மூலம் நன்மைகள் பெருகும். முருகனை சஷ்டி விரதம் இருந்து வேண்டிக்கொள்பவர்களுக்கு நன்மக்கட் பேறு உண்டாகும். சிற்பம், வாஸ்து போன்ற காரியங்களில் ஈடுபடலாம். புதிய ஆபரணங்கள் தயாரிக்கலாம். புது வாகனம் வாங்கலாம். புதியவர்களின் நட்பை ஏற்படுத்திக் கொள்ளலாம். புதிய பதவிகளை ஏற்றுக் கொள்ளலாம்.
சப்தமி திதி
இந்த திதியின் அதிதேவதை சூரிய பகவான் ஆவார். இந்த தினத்தில் ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்துடன் உள்ள சூரியனை வழிபடுவது சிறப்பான நன்மைகளை தரும். தொலைதூர பயணம் மேற்கொள்ள உகந்த திதி இது. புதிய வாகனம் வாங்கலாம். வீடு, தொழிலில் இடமாற்றம் செய்து கொள்ள சிறந்த திதி இது. திருமணம் செய்யலாம்.
அஷ்டமி திதி
இதன் அதிதேவதை ருத்ரன் எனப்படும் சிவபெருமான் ஆவார். வீடு கட்டுவதற்கான நடவடிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். புதிய தளவாடம் வாங்கலாம். நாட்டியம் பயில்வதற்கும் சிறந்த திதியாகும்.
நவமி திதி
இந்த திதிக்கு அம்பிகை அதிதேவதை ஆவாள். எதிரிகள் பயத்தை போக்கும் திதி இது. தீமைகள் அனைத்தும் ஒழிப்பதற்கான செயல்களில் ஈடுபட சிறந்த திதி இது.
தசமி திதி
இந்தத் திதிக்கு எமதர்மனே அதிதேவதை ஆவார். அனைத்து சுப காரியங்களில் ஈடுபடலாம். ஆன்மிக பணிகளுக்கு மிகவும் ஏற்ற திதி இது. தீர்த்த யாத்திரை மேற்கொள்ளலாம். கிரகப்பிரவேசம் செய்யலாம். வாகனம் ஓட்ட பழகலாம். அரசு காரியங்களில் ஈடுபடலாம்.
ஏகாதசி திதி
இந்த திதிக்கும் ருத்ரன் எனப்படும் சிவன் அதிதேவதை ஆவார். தெய்வங்களுக்கு விரதம் இருக்கலாம். திருமணம் செய்யலாம். காயங்களுக்கு சிகிச்சை மேற்கொள்ளலாம். சிற்பம் செதுக்குதல்,தெய்வ காரியங்களில் ஈடுபடலாம்.
துவாதசி திதி
இந்த திதிக்கு அதிதேவதை விஷ்ணு பகவான் ஆவார். பொதுவாக தெய்வீக காரியங்கள் அனைத்தையும் மேற்கொள்வதற்கு ஏற்ற திதி இது.
திரயோதசி திதி
இந்த திதியில் சிவ வழிபாடு செய்வது மிகவும் விசேஷம் ஆகும். நீண்ட தூர பயணம் மேற்கொள்ளலாம். புத்தாடை அணியலாம். எதிர்ப்புகள் விலகும். தெய்வ காரியங்களில் ஈடுபடலாம். புதியவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளலாம். விளையாட்டுகள், கேளிக்கைகளில் ஈடுபடலாம்.
சதுர்த்தசி திதி
காளி தேவி இந்த திதிக்கு அதிதேவதை ஆவாள். புதிய ஆயுதங்கள் உருவாக்க, துஷ்ட சக்திகள், எதிரிகளை வெற்றி கொள்ள, தீயவற்றை ஒழிக்கும் மந்திரம் பயில ஆகிய செயல்களுக்கு ஏற்ற திதியாக இருக்கிறது.
பௌர்ணமி திதி
பௌர்ணமி திதிக்கு பராசக்தி அதிதேவதை ஆவாள். உடல் நலம் மற்றும் உலக நலத்திற்கான ஹோமங்கள் செய்யலாம். கோயில் சிற்ப வேலைப்பாடுகள், மங்கள காரியங்களில் ஈடுபடலாம்.
அமாவாசை திதி
அமாவாசை திதிக்கு சிவன், சக்தி ஆகிய இருவரும் அதிதேவதை ஆவார்கள். பித்ருக்களுக்கு ஆற்ற வேண்டிய கடன்களை, வழிபாடுகள் செய்யலாம். தான, தர்ம காரியங்கள் செய்வதற்கு உகந்த திதியாகும்.
நல்ல திதிகள்
பொதுவாக திதிகளில் வளர்பிறை துவிதியை, திருதியை, பஞ்சமி, சப்தமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி ஆகியவை சிறந்த திதிகளாகும்.
தேய்பிறை காலத்தில் வருகிற துவிதியை, திருதியை, பஞ்சமி ஆகிய மூன்று திதிகளும் சுப திதிகள் ஆகும்.
தேய்பிறை காலத்தில் இந்த மூன்று திதிகளில் மட்டுமே சுப காரியங்களில் ஈடுபடலாம். மீதமுள்ள திதிகளில் எந்த நல்ல காரியமும் செய்யக்கூடாது.
எந்தெந்த திதிகளில் என்ன செய்யலாம் என்பதை மற்றவர்கள் அறிந்துகொள்ள பகிர்ந்திடுங்கள் (ஷேர் செய்யுங்கள்).