download_indicator

ஏகாதசியில் என்ன செய்யலாம்? என்ன செய்யக் கூடாது?

மாதந்தோறும் ஏகாதசி தினம் வருகிறபோது பலரும் விரதமிருப்பது வழக்கமாகும். தொடர்ந்து விரதமிருந்தவர்களுக்கு என்ன செய்யவேண்டும் என்பது நன்கு தெரியும். ஆனால், புதிதாக ஏகாதசி விரதமிருப்பவர்களுக்கு இந்நாளில் என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது என்பது தெரியாது. அதையடுத்து அதன் விபரங்களை அறிந்திடலாம்.

உற்பத்தி ஏகாதசி

மார்கழி மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசிக்கு உத்பான அல்லது உற்பத்தி ஏகாதசி என்று பெயராகும். இந்நாளில் ஏகாதசி விரதம் இருந்தால் பகையை வெல்லக்கூடிய வலிமை கிடைக்கும்.

ஒருசமயம் மகாவிஷ்ணுவின் உடலிலிருந்து தோன்றிய பெண், முரண் என்ற அசுரனுடன் போரிட்டு அவனைக் கொன்றாள்.

நடந்தவற்றை அறிந்த மகாவிஷ்ணு, அந்த பெண்ணைப் பாராட்டி அவளுக்கு ஏகாதசி என்று பெயர் சூட்டியதுடன், ஏகாதசி என்ற பெண் தோன்றிய நாளில் விரதமிருந்து வழிபடுபவர்களுக்கு சகல செல்வங்களையும், வைகுண்ட பதவியையும் அருள்வேன் என்று மகாவிஷ்ணு கூறினார்.

அதனால் இன்று மார்கழி மாத தேய்பிறை ஏகாதசி தினத்தன்று பகவான் விஷ்ணுவை வணங்கி விரதமிருந்து வழிபடுவது சிறப்பாகும்.

என்ன செய்யவேண்டும்?

இன்று விரதமிருப்பவர்கள் துளசி தீர்த்தம் அருந்தலாம், திரவப் பொருட்கள், பால், பழங்கள் போன்றவற்றை சாப்பிடலாம்.

உணவு சாப்பிடாமல் இருக்க முடியாதவர்கள், உப்பில்லாத உணவை எடுத்து கொள்ளலாம்.

இன்று நாள் முழுவதும் விஷ்ணுசஹஸ்ரநாமம், பகவத்கீதை, பாகவதம், நாலாயிரதிவ்ய பிரபந்தம் போன்றவற்றை படிப்பது நல்லது.

அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்கு சென்று துளசி வாங்கி கொடுப்பதுடன், விளக்கேற்றி வழிபடுவது சிறப்பாகும்.

கோயில் அல்லது வீடுகளில் துளசி மாடம் இருந்தால் அங்கு விளக்கேற்றி வழிபட மிகுந்த புண்ணியம் கிடைப்பதுடன் நினைத்தது அனைத்தும் நிறைவேறும்.

துளசி மாடத்தில் விளக்கேற்றும்போது அகல் விளக்கின் எண்ணெய் அல்லது நெய்யில் ஒரு துளசி இலை வைத்து விளக்கேற்ற மகாலட்சுமி, மகாவிஷ்ணு ஆகிய இருவரின் அருள் உடனடியாக கிடைக்கும்.

ஏகாதசி விரதம் முடிந்து துவாதசியன்று காலையில் பாரணை செய்யும்போது (விரதம் முடிக்கும்போது) அகத்திக்கீரை, நெல்லிக்காய் போன்றவற்றை கண்டிப்பாக உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

என்ன செய்யக்கூடாது?

இன்று தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்கக்கூடாது, நகம் வெட்டக் கூடாது.

வாசனை திரவியங்களை பூசுவது கூடாது, பகலில் உறங்கக் கூடாது.

வாழை சம்மந்தமான எந்த உணவையும் எடுத்துக் கொள்ளக் கூடாது. வாழை இலையும் பயன்படுத்தக்கூடாது.

கத்தரிக்காய், புடலங்காய், பாகற்காய், கடலைப் பருப்பு, துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

கடுகு, கொத்தமல்லி, மிளகாய், கடலை, புளி சேர்க்க கூடாது.

சினிமா, தொலைக்காட்சியில் வரும் சீரியல் நிகழ்ச்சிகள், திரைப்படங்கள், திரைப்பாடல்கள் போன்றவற்றை கண்டிப்பாக பார்க்கக்கூடாது, முக்கியமாக இன்று எக்காரணம் கொண்டும் துளசி இலையை பறிக்கக்கூடாது.

ஏகாதசியன்று பகலில் உறங்குவது, நகம் வெட்டுவது, வாழை இலையில் உணவருந்துவதை தவிர்க்க வேண்டும் என இன்றைய இளைய தலைமுறையினர் அறிந்திட ஷேர் செய்யுங்கள்.



Follow Us on