ஏகாதசி என்றதுமே எல்லோருக்கும் வைகுண்ட ஏகாதசியும், சொர்க்கவாசல் திறப்பும்தான் நினைவிற்கு வரும். இந்நாளில், சொர்க்கவாசல் வழியாக வெளியே வந்து சேவை சாதிக்கிற பெருமாளை தரிசிப்பவர்களுக்கு மோட்சம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. வைகுண்ட ஏகாதசியில் பெருமாள் கோயில்கள் அனைத்திலும், சொர்க்கவாசல் வழியாக பெருமாள் வருகின்ற நிலையில், எந்த ஊரில், எதற்காக பெருமாளுக்கு பதிலாக தாயார் சொர்க்கவாசலை கடக்கிறார் என்றும், அதன் சிறப்பு குறித்தும் அறிந்திடலாம்.
எந்த ஊரில், எதற்காக?
108 வைஷ்ணவ தலங்களில் 2-வது தலமான உறையூர் அழகிய மணவாளர் கோயிலில்தான், மார்கழி மாதம் நடைபெறுகிற வைகுண்ட ஏகாதசி நடைபெறாமல், மாசி மாத தேய்பிறை ஏகாதசி நாளில் சொர்க்கவாசல் திறப்பு நடைபெறுகிறது.
அப்போது பெருமாளுக்கு பதிலாக தாயார் சொர்க்கவாசல் கடக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.
இக்கோயிலில் தாயாருக்குதான் முதல் மரியாதை வழங்கப்படுவதன் காரணமாக, பெருமாள் தனது மனைவிக்காக விட்டுக்கொடுத்து தாயாருக்கு மரியாதை கிடைக்க செய்கிறார்.
கோயில் கருவறையில் அழகிய மணவாள பெருமாள் கமலவல்லி தாயாருடன் திருமண கோலத்தில் நின்றபடி காட்சி தருகின்றனர்.
பெண்மையை போற்றும் விதமாகவும், பெண்மைக்கு மதிப்பளிக்கும் விதமாகவும், இங்கு தாயார் சொர்க்கவாசல் கடக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
என்ன வரலாறு?
ஆழ்வார்களில் திருப்பாணாழ்வார் அவதரித்த தலமே உறையூர் நாச்சியார் கோயிலாகும்.
திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் செய்யப்பட்ட ஸ்தலங்களில் ஒன்றான உறையூரில் தான், கமலவல்லி என்ற பெயரில் சோழ மன்னன் ஒருவனின் வளர்ப்பு மகளாக துவாபர யுகத்தில் மகாலட்சுமி வளர்ந்து வந்தாள்.
பருவ வயதை அடைந்த கமலவல்லி, ஒரு சமயம் மாப்பிள்ளை கோலத்தில் குதிரையில் வலம் வந்த ரங்கநாதரை கண்டு அவர் மீது காதல் கொண்டார்.
அன்றிரவு மன்னன் கனவில் தோன்றி ரங்கநாதர் கூறியதன்படி, கமலவல்லியை திருமண கோலத்தில் மணப்பெண்ணாக அலங்கரித்து ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வந்து ஒப்படைத்தான்.
அப்போது, கமலவல்லி தாயாரை ரங்கநாதர் ஆட்கொண்டதுடன், உறையூரில் கமலவல்லிக்கே முன்னுரிமை தரப்படும் என்று கூறினார்.
அதன் காரணமாகவே, உறையூரில் கமலவல்லி தாயாருக்கு முதல் மரியாதை கொடுக்கப்படுகிறது.
சிறப்பு
பங்குனி தேர் திருவிழாவின் போது ஸ்ரீரங்கத்து உற்சவர் பெருமாள் நாச்சியாருடன் சேர்ந்திருக்க, இங்கு வருவதே சேர்க்க சேவையாகும்.
அப்போது தாயார் சன்னதி திறக்கப்படாமல், தயிர் மற்றும் பால் ஆகியவற்றை வீசி எதிர்ப்புகள் தெரிவிக்கப்படும்.
இதற்கு ஊடல் உற்சவம் என்றும் பெயராகும்.
அதையடுத்து, பன்னிரு ஆழ்வார்களில் முதல்வரான நம்மாழ்வார் தலையிட்டு, இறைவனுக்கும், தாயாருக்கும் இடையே சமாதானம் செய்து, இருவரையும் ஒன்றாக எழுந்தருள செய்வார்.
உறையூர் நாச்சியார் கோயிலில் கமலவல்லி தாயாரின் முக்கியத்துவம் குறித்து உங்கள் உறவினர்களும், நண்பர்களும் அறிந்திட ஷேர் செய்யுங்கள்.