தர்மரை விட மிகவும் நல்லவன்

பாண்டவர்கள் மற்றும் கௌரவர்களின் வாழ்க்கை சம்பவமே மகாபாரத காவியம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அதில், நீதி, நேர்மை, ஒழுக்கத்திற்கு தலைசிறந்தவராக திகழ்ந்த தர்மரின் சிறப்பு பற்றி கிருஷ்ண பரமாத்மாவும், சகுனியும் கூட பாராட்டு தெரிவிப்பர். ஆனால், தர்மரை விட மிகவும் நல்லவனாக திகழ்ந்தவன் என்று விகர்ணனை பற்றி கிருஷ்ணர் எதற்காக கூறினார் என்றும் அவனது சிறப்பு பற்றியும் அறிந்திடுவோம்.

மிகமிக நல்லவன்

பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் யுத்தம் நடைபெற்று வந்தபோது, ஒரு நாள் பாஞ்சாலி, கிருஷ்ண பகவானிடம், பரமாத்மாவே இந்த யுத்தம் முழுவதையும் நீயே நடத்துகிறாய் என்பதை நான் அறிவேன்.

போரில் யார் உயிருடன் இருப்பார்கள், யார் உயிர் பிரியும் என்பது பற்றியும் தாங்கள் அறிவீர்கள். இருப்பினும், என் மனம் கவலையில் உள்ளது.

எனவே, இன்றைய போரில் யார், யார் கொல்லப்படுவார்கள் என்று கேட்டாள்.

பாஞ்சாலியின் கேள்வியைக்கேட்ட பாண்டவர்கள், கிருஷ்ணர் என்ன பதில் கூறுவார் என்று ஆவலுடன் எதிர்பார்த்தனர்.

அதற்கு கிருஷ்ணன் சிரித்தபடியே பதில் கூறுகையில், திரௌபதி உனக்கு எல்லாவற்றையும் முன்கூட்டியே தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் உள்ளது.

இன்று அனைவரிலும் மிகமிக நல்லவன் ஒருவன் கொல்லப்படுவான்.

உலகில் வாழ்பவர்களில் அவனைவிட நல்லவர்கள் இன்று யாருமில்லை.

அதனால், அவன் இறக்கப்போவதை நினைத்து எனது மனம் இப்போதே வருந்துகிறது என்றார்.

அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அர்ஜூனன், பீமன், நகுலன், சகாதேவன் மற்றும் பாஞ்சாலி ஆகியோர் தர்மரை கவலையோடு பார்த்தனர்.

ஏனெனில், தர்மரை விட நல்லவர்கள் வேறு யார் இருக்க முடியும் என்று அவர்கள் கருதினர்.

அதையடுத்து, இன்று போர் முடிந்து மாலை வேளையில், 5 பேரும் திரும்புவார்களா இல்லை, 4 பேர் மட்டுமே திரும்புவார்களா என்று பாஞ்சாலி கவலையுடன் இருந்தாள்.

ஆனால், இதைப்பற்றி எதையும் கண்டுகொள்ளாமல், கிருஷ்ணன் போர்க்களம் நோக்கி சென்றார்.

விகர்ணன்

இந்நிலையில், போர்க்களத்தில் கதாயுதத்தோடு களத்தில் இறங்கிய பீமன், தன்னுடன் போர்புரிய முன்வந்த விகர்ணனைப் பார்த்துக் கடுமையாக எச்சரித்தான்.

விகர்ணா, உன்னைக் கொல்வதற்காக நான் போர்புரிய வரவில்லை, உனது அண்ணன்களான துரியோதனன், துச்சாதனன் ஆகிய 2 பேரையும் வதம் செய்ய வந்திருக்கிறேன்.

திரௌபதியின் சபதத்தை நிறைவேற்ற, நான், அவர்களை கொன்றே ஆக வேண்டும்.

கௌரவர்கள் 100 பேரில் நீ மட்டுமே தப்பிப் பிறந்தவன். அன்று கௌரவர் சபையில் திரௌபதிக்கு அநியாயம் நடந்தபோது, நீ மட்டும்தான் தர்மத்தின் பக்கம் நின்று குரல் கொடுத்தவன்.

நல்லது பற்றி யார் கூறினாலும் துரியோதனனுக்கு பிடிக்காது என்றாலும் நீ அறத்தின் பக்கமே நின்றாய்.

எனவே உன்மேல் கொண்ட அன்பால் உன்னைக் கொல்ல என் கதாயுதம் விரும்பவில்லை, எனவே இங்கிருந்து போய்விடு என்றான்.

மேலும், விகர்ணா நீ எங்களுடன் சேர்ந்துவிடு, உன்னையும் சேர்த்து பாண்டவர்கள் 6 பேராக இருப்போம்.

உனக்கும் அரசு வழங்கி முடி சூட்டுகிறோம். திரௌபதியின் மானத்தைக் காக்கக் குரல்கொடுத்த உன் தலையில் முடிசூட்டிப் பார்க்க விரும்புகிறேன் என்று பீமன் கூறினான்.

பீமனின் பேச்சைக் கேட்ட விகர்ணன், பீமா என்னை வென்றுவிட்டு அதன் பிறகு, அவர்களை வெல்ல முடியுமா என்று யோசித்து பார்.

போரில் என்னை வெல்ல முடியாமல் போய்விடும் என்று உனக்கு பயமா என்று கேட்டதோடு, நல்லதோ, கெட்டதோ என் வாழ்வின் இறுதிவரை நான் எனது அண்ணனோடு தான் இருப்பேன் என்று கூறி பீமனைத் தாக்க தொடங்கினான்.

தர்மரின் ஒப்புதல்

வேறு வழியில்லாமல் விகர்ணனை தனது கதையால் தாக்கினான் பீமன்.

விகர்ணனும், பீமனுக்கு இணையாக போர் புரிந்தபோது, தர்மத்தின் வழியே வாழ்பவர்களை வெல்வது சுலபமல்ல என்பதை பீமன் உணர்ந்தான்.

இறுதியாக, தன் கதாயுதத்தால் பலமாக விகர்ணனை, பீமன் தாக்கியபோது, அவன் சிரித்துக் கொண்டே மரணத்தை வரவேற்பதை பார்த்து வியந்தான்.

விகர்ணனின் உயிர் பிரிந்தபோது, பீமனின் மனது இனம் புரியாத சோகத்தில் ஆழ்ந்தது.

அதையடுத்து, மாலை சூரியன் அஸ்தமனத்திற்கு பிறகு யுத்தம் நிறுத்தப்பட்டது.

எல்லோரும் அவரவர் பாசறைக்குத் திரும்பினார்கள். அனைவரிலும் நல்லவன் இன்று கொல்லப்படுவான் என்று கிருஷ்ணன் கூறியநிலையில், தர்மர் பாசறைக்கு திரும்பியதை கண்டு பாஞ்சாலி மனநிம்மதியடைந்தாள்.

அப்போது தர்மரை விட யார் மிகவும் நல்லவன் என்ற சந்தேகம் அவளுக்குள் வந்ததும், கிருஷ்ணரிடமே கேட்டாள்.

அதற்கு கிருஷ்ணர் பதில் கூறுகையில் திரௌபதி, நல்லவர்களிடையே நல்லவனாக இருப்பதில் யாருக்கும் சிரமம் கிடையாது.

ஆனால், விகர்ணன் கெட்டவர்களிடையே நல்லவனாக இருந்தான்.

உன் மானத்தைக் காப்பதற்காக எதிரணியில் இருந்து குரல் கொடுத்தான்.

இப்போது, தன் அண்ணன் கெட்டவனே ஆனாலும், அரச பதவிக்கு ஆசைப்படாமல், தான் இறப்போம் என்று தெரிந்தே, தன் அண்ணனுக்காக உயிரையே விட்டான்.

தர்மம் எங்கு இருக்கிறதோ, அந்த அணியில்தான் நான் இருப்பேன் என்றும், நான் இருக்கும் அணிதான் வெல்லும் என்றும் அவன் நன்கு அறிவான்.

இருப்பினும், தனது அண்ணனுக்காக உயிரை விடுவதே தனது தர்மம் எனக் கருதினான்.

அவன் இருக்கும்வரை கௌரவர்களை அழிப்பது இயலாத காரியம்.

இன்று அவனை பீமன் வதம் செய்துவிட்டதால், இனி கௌரவர்களை அழிப்பது கடினமல்ல என்று கூறினார்.

அதைக்கேட்ட தர்மர், விகர்ணன் என்னை விட மிக நல்லவன் என்பது உண்மைதான் என்பதை, எல்லோர் முன்னிலையிலும் ஒப்புக்கொண்டார்.

தன்னை விட மிகவும் நல்லவன் என்று தர்மர், எதற்காக விகர்ணனை கூறினார் என்பதை உங்களுக்கு தெரிந்தவர்கள் அறிந்திட பகிர்ந்திடுங்கள் (ஷேர் செய்யுங்கள்).



Follow Us on