சந்திர தோஷங்கள் விலக சொல்ல வேண்டிய மந்திரம்

சந்திரன் மாத்ருகாரகன், அதாவது ஒரு மனிதனின் தாய்க்கு காரகனாகிறார். மேலும், ஜாதகரின் மனநிலை, ஞாபகத்திறன், வெளிநாட்டு பயணம், திரவம் தொடர்புடைய தொழில்கள் போன்றவற்றிற்கும் காரகனாக இருக்கிறார். ஜாதகத்தில் ஒருவருக்கு சந்திரனின் நிலை கெட்டிருந்தால் அவருக்கு மனநிலை கோளாறுகள், தாயுடன் மனஸ்தாபம், நீரில் கண்டம், வெளிநாட்டு பயணத்தடை போன்றவை ஏற்படும். இந்நிலையில், சந்திர தோஷம் ஏற்பட்டால் கூற வேண்டிய மந்திரம், செய்ய வேண்டிய பரிகாரம் குறித்து பார்க்கலாம்.

யார், யாருக்கு

தாயின் சாபம் பெற்றவர்கள், தாயை நல்ல முறையில் பேணி பாதுகாக்காதவர்கள்.

ஜாதகத்தில் சந்திரன் நிலை சரியில்லாத நிலையில் இருப்பவர்கள், சந்திரனின் கோட்ச்சாரம் சரியில்லாமல் இருப்பவர்கள்.

பரிகாரம்

சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமையில் விரதம் இருந்து சந்திரனை வழிபடுவது நல்ல பலன்களை அள்ளித்தரும்.

ஏதேனும் ஒரு புண்ணிய நதியில், ஒரு திங்கட்கிழமை அன்று ஒரு சொம்பு தூய்மையான பசும்பாலை ஊற்றி வழிபட வேண்டும்.

சந்திர கிரகத்தால் தோஷம் அடைந்தவர்கள் திங்கட்கிழமைதோறும் அதிகாலையில் எழுந்து, குளித்து முடித்துவிட்டு, ஐந்து விளக்குகளில் நெய் ஊற்றி, தீபமேற்ற வேண்டும்.

அதன் பின்னர், சிவபெருமானையும், சந்திரனையும் அவருக்குரிய மந்திரங்களை கூறி வணங்க வேண்டும்.

சிவன் கோயில்களில் சிவபெருமானுக்கு நடைபெறும் பாலாபிஷேகத்திற்கு பசும் பாலும், பௌர்ணமி தினங்களில் கோயில்களில் நடைபெறும் அன்னதானத்திற்கு அரிசியையும் தானம் வழங்குவது போன்ற செயல்களால் சந்திரனின் நல்லாசிகளை பெற முடியும்.

மந்திரம்

பத்ம த்வாஜய வித்மஹே

ஹேம ரூபாய தீமஹி

ஸ்ரீ வேங்கடாசலபதி தந்நஸ் ஸோம ப்ரசோதயாத்

சந்திரனுக்குரிய இந்த மந்திரத்தை, ஒவ்வொரு திங்கட்கிழமையும் மாலை நேரத்தில் தீபம் ஏற்றும் வேளையில் உச்சரித்து வர சந்திரனுக்குரிய தோஷங்கள் விலகி ஓடும்.

மந்திரத்தை உச்சரிக்கும் முன்பாக அகல் விளக்கில் தீபம் ஏற்றி, அந்த தீபத்தை நெல் பரப்பி அதன்மீது வைக்க வேண்டும்.

பின்னர் வெண் பொங்கல் நைவேத்தியம் படைத்து, 108 எண்ணிக்கையில் மல்லிகை பூவைக் கொண்டு வடமேற்கு திசை நோக்கி அமர்ந்து, சந்திரனுக்குரிய காயத்ரி மந்திரத்தைச் கூறி வழிபட அற்புதமான பலன்கள் கிடைக்கும்.

இந்த மந்திரத்தை தினமும் 11 முறை ஜெபித்து வந்தாலும் நினைத்த காரியம் உடனடியாக நிறைவேறும். சந்திரனுக்குரிய தோஷங்கள் விலகி ஓடும்.

யாருக்கு பாதிப்பில்லை

தாயாரை வாழ்நாள் முழுவதும் நன்கு கவனித்து வருபவர்களுக்கும், தாயாரிடம் ஆசி பெறுபவர்களுக்கும் சந்திர தோஷங்களால் எவ்வித பாதிப்புகளும் ஏற்படாது.

சந்திர தோஷம் விலகுவதற்கு என்னென்ன செய்யலாம் என்பதை சந்திர தோஷம் உள்ளவர்களும் அறிந்திட பகிருங்கள்.(ஷேர்)



Follow Us on