
கோயிலில் அர்ச்சனை செய்யும்போது, ஒரு சிலர் சுவாமி பெயருக்கே அர்ச்சனை பண்ணுங்க என்று கூறுவதுண்டு. அவ்வாறு சுவாமி பெயருக்கு அர்ச்சனை செய்வது சரியா, தவறா என்பது பலருக்கும் தெரியாது. அதையடுத்து, எப்படி செய்யவேண்டும் என்று அறிந்திடலாம்.
அர்ச்சனை என்றால் என்ன?
பெரும்பாலான மனிதர்கள் கஷ்டங்களையும், துன்பங்களையும் சந்திக்கும்போதுதான் இறைவனை தேடிச்சென்று, தங்கள் கஷ்டங்கள் தீர வேண்டும் என்று வேண்டுவது வழக்கம்.
சந்தோஷமும், மகிழ்ச்சியும் கிடைக்கும்போது 70 சதவீத மக்கள் இறைவனை நினைப்பதில்லை.
தங்கள், உழைப்பாலும், திறமையாலும் மட்டுமே தங்களுக்கு அத்தகைய வாய்ப்பும், வசதியும் கிடைத்ததாக கருதி அற்ப பதர்களாக உள்ளனர்.
கஷ்ட, நஷ்டம், துன்பம், துயரம், மகிழ்ச்சி, சந்தோஷம், லாபம், ஆனந்தம் என எதுவாக இருப்பினும் எல்லாம் இறைவன் செயல் என்று கருதி, இறைவனிடம் நமது குறைகளையும், வேண்டுதல்களையும் கூறி அதை நிறைவேற்றி கொடுக்கும்படி வேண்டிக்கொள்வதே அர்ச்சனையாகும்.
எப்படி வேண்டுவது?
இறைவனிடம் நமக்காக வேண்டும்போது நம் பெயர், குலம் கோத்திரம், நட்சத்திரம் பற்றி கூறுவது ஒவ்வொருவரையும் அடையாளப்படுத்தும் விதமாக கூறி, இந்த விண்ணப்பத்தை இறைவனுக்கு சமர்ப்பிக்கிறேன் என்று இறைவனிடம் சொல்ல வேண்டும்.
பொதுவாக நமக்கு நாமேதான் அர்ச்சனை செய்ய வேண்டும்.
ஆனால், நமக்கு மந்திரங்கள் தெரியாததால் நமக்காக அர்ச்சகர் மந்திரங்களைச் சொல்லி சமர்ப்பிக்கிறார்.
அர்ச்சனை என்பது பாட்டுதான் என்பதை சேக்கிழார், மாணிக்கவாசகர் போன்றோர் தெரிவிக்கின்றனர்.
இறைவனிடம் நமக்கு வேண்டியதைக் கேட்கும்போது நமக்கு சரி என்று தோன்றுவதையும், நமது ஆசைகளையும் கூறுகின்றோம்.
இந்நிலையில் நமக்கு என்ன வேண்டும் என்பதும், நமக்கு என்ன கொடுக்க வேண்டும் என்பதும் இறைவனுக்கு நன்றாகவே தெரியும்.
அதனால், எனக்கு வேண்டியதை நீயே அறிவாய், அதை, நீ எனக்கு கொடு இறைவா என்று கூறுவதே சிறப்பாகும்.
வேண்டத் தக்கது அறிவோய் நீ,
வேண்ட முழுவதும் தருவோய் நீ,
வேண்டும் அயன், மால்க்கு அரியோய் நீ
வேண்டி என்னைப் பணிகொண்டாய்!
வேண்டி நீ யாது அருள் செய்தாய்,
யானும் அதுவே வேண்டின் அல்லால்
வேண்டும் பரிசு ஒன்று உண்டு என்னில்,
அதுவும் உன் தன் விருப்பு அன்றே!
என்று திருவாசகத்தில் ஒரு பாடல் இருப்பது குறிப்பிடத்தக்கது.
எதற்காக கூடாது?
இறைவன் பெயருக்கே அர்ச்சனை செய்வது என்பது ஒரு தவறான செயலாகும்.
ஏனெனில், உலகம் முழுவதையும் அதில் உள்ள உயிரினங்கள் அனைத்தையும் படைத்து, இயக்கி வருகின்ற இறைவனுக்கு எந்த தேவையும் இல்லை.
யாரிடமும் போய், எதையும் கேட்கும் அவசியமும் இறைவனுக்கு கிடையாது.
அப்படியிருக்கையில், இறைவன் பெயருக்கு அர்ச்சனை செய்வது அர்த்தமற்ற செயலாகும்.
எல்லாம் அறிந்தவனுக்கும், தெரிந்தவனுக்கும், எல்லாவற்றையும் உடமையாக கொண்டவனுக்கு தனியாக வேண்டுதல் என்பது தேவையில்லாதது.
எனவே, கோயிலுக்கு சென்று அர்ச்சனை செய்யும்போது, அவரவர் பெயரைக்கூறி அர்ச்சனை செய்வதே சிறந்தது.
சுவாமி பெயருக்கு அர்ச்சனை செய்வது தேவையில்லை என்று எதற்காக கூறுகின்றனர் என்பதை உங்களுக்கு தெரிந்தவர்களும் அறிந்திட ஷேர் செய்யுங்கள்.