download_indicator

அப்பன் முருகன்; மகன் சிவபெருமானா?

ஒரு சில குடும்பத்தில் தந்தை சாதாரண அலுவலக குமாஸ்தா வேலையும், அதே அலுவலகத்தில் மகன் உயர்ந்த பதவியில் அதாவது மாவட்ட ஆட்சியராகவோ, காவல் கண்காணிப்பாளராகவோ இருப்பதை பார்த்திருக்கலாம். அதேபோன்று, ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தைக்கு முருகனருளும், மகனுக்கு சிவபெருமானருளும் கிடைக்கப்பெற்றவர்கள் யாரென அறிந்திடலாம்.

தந்தையும், மகனும்

இயற்கை வளமும் செல்வ வளமும் கொண்ட பொத்தப்பி நாடு என்ற நாட்டில் உள்ள உடுப்பூர் என்ற ஊரில் முருக வழிபாடு செய்து வந்த மக்கள் அதிகம் வசித்து வந்தனர்.

உடுப்பூரில் வசித்து வந்த மக்களில், நாகன் என்பவன் வேடர் குல தலைவனாக இருந்து சிறந்த முறையில் ஆட்சி செய்து வந்தான்.

முருகப்பெருமானை தவிர வேறு எந்த கடவுளையும் வணங்காமல் தீவிர முருக பக்தராக இருந்தான்.

அதுமட்டுமல்ல, முருகனடியார்களுக்கு அவர்கள் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றி, குடும்பத்திற்கு தேவையான பொன், பொருள் போன்ற அனைத்தையும் வழங்கி பாதுகாத்து வந்தான். மேலும், முருகப்பெருமானையே தனது குலதெய்வமாக கருதியும் வழிபாடு செய்து வந்தான்.

கனவில் வந்த முருகன்

இந்நிலையில், நாகனுக்கும் அவனது மனைவி தத்தை என்பவளுக்கும் பல ஆண்டுகளாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தது.

அதனால் குழந்தை பாக்கியம் கிடைப்பதற்காக, அவர்கள் இருவரும் பல்வேறு ஊர்களில் உள்ள முருகப்பெருமானை வேண்டி வணங்கி தீர்த்த யாத்திரை சென்றனர்.

ஒரு நாள் நாகன் கனவில் வந்த முருகப்பெருமான், தனக்கு ஒரு கோயில் இல்லாமல் இருப்பதால், கோயில் கட்டி வணங்கிட, உனக்கு அழகான ஆண் குழந்தை பிறக்கும் என்று கூறினார்.

அதுமட்டுமல்லாமல், சிறந்த சிவபக்தனாக விளங்கி சிவனடியார்களில் ஒருவனாக அந்த குழந்தை பேரும், புகழும் பெற்று திகழும் என்று கூறினார். அதையடுத்து, உடுப்பூருக்கு திரும்பிய நாகன் முருகனுக்கு ஒரு கோயில் கட்டி வழிபட்டு வந்தான்.

கண்ணப்பர்

அதன் பின்னர் ஒரு சுப யோக தினத்தில் நாகன் மனைவிக்கு நல்ல அழகிய ஆண் குழந்தை பிறந்தது.

முருகனருளால் தங்களுக்கு கிடைத்த குழந்தை என்று நாகனும், அவன் மனைவியும் பார்ப்பவர்கள் அனைவரிடமும் சொல்லி சொல்லி மகிழ்ந்தனர். அக்குழந்தை பிறக்கும்போதே நன்கு கனமாக பிறந்ததால் திண்ணன் என்று பெயர் வைத்தனர்.

அந்த திண்ணனே, பிற்காலத்தில் சிவபெருமானுக்கு இரண்டு கண்களையும் தானம் வழங்கிய கண்ணப்ப நாயனாராக திகழ்ந்தான்.

தங்கள் மகன் சிவபக்தியில் உயர்ந்து நாயன்மார்களில் ஒருவராக திகழ்ந்தது கண்டு கண்ணப்ப நாயனாரின் பெற்றோர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.

சிவபெருமானுக்காக 2 கண்களையும் தானம் வழங்கிய கண்ணப்ப நாயனார் முருகனருளால் பிறந்தவர் என்பதை சிவபக்தர்கள் எல்லோரும் அறிந்திட ஷேர் செய்யுங்கள்.



Follow Us on