
பன்னிரு ஆழ்வார்களில் பூமா தேவியின் அம்சமாக பிறந்தவரும், ஒரே பெண் ஆழ்வாருமான ஆண்டாள் அவதாரம் பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. அதையடுத்து, ஆண்டாள் அவதாரம் பற்றியும் அவளது வாழ்வில் நடந்த சில முக்கியமான சம்பவங்களையும் அறிந்திடலாம்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
கோதை பிறந்தஊர், கோவிந்தன் வாழும் ஊர் என்று போற்றப்படும் ஸ்ரீவில்லிபுத்தூரில், ஒரு நள வருடத்தின் ஆடிப்பூரத் தினத்தன்று ஆண்டாள் அவதரித்தாள்.
ஆண்டாள் பாடிய திருப்பாவை பாடலைக்கொண்டே அவள் பிறந்த வருடத்தை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
அதாவது, திருப்பாவையில் 13-வது பாசுரத்தில் வரும் 'வெள்ளி எழுந்து, வியாழம் உறங்கிற்று' என்ற சொற்றொடரில் கூறப்படும் வானியல் சம்பவத்தை வைத்து நிபுணர்களுடன் ஆராய்ந்ததில், அது கி.பி. 885, நவம்பர் மாதம் 25-ஆம் தேதி என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
'ஆழ்வார்கள் கால நிலை' என்ற நூலில் இந்த விபரங்கள் விரிவாக கொடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீவில்லிப்புத்தூரில் வடபத்ரசாயி கோயிலில் நந்தவனம் அமைத்து, வடபெருங் கோயிலுடையானுக்குப் பூ மாலைகள் சமர்ப்பித்துக் கைங்கரியம் செய்து வந்தவர் பட்டர் பிரான் என்றும், விஷ்ணு சித்தர் என்றும் அழைக்கப்பட்ட பெரியாழ்வார்.
இவர் கருடனின் அம்சமாக அவதரித்தவர் என்று கூறப்படுகிறது.
ஒரு நாள், அவரது நந்தவனத்திலே துளசிச்செடியின் கீழ் கிடந்த அழகான பெண் குழந்தையை எடுத்து கோதை எனப் பெயரிட்டு, சீரும் சிறப்பு மாக பெரியாழ்வார் வளர்த்து வந்தார்.
காதலும், கல்யாணமும்
பெரியாழ்வார் தனது வளர்ப்பு மகள் ஆண்டாளுக்கு சிறு வயது முதலாகவே கிருஷ்ண பகவானின் வரலாற்றை கூறி வளர்த்தார்.
அதனால், ஆண்டாள் சிறு வயதிலேயே கண்ணன்மீது காதல் வசப்பட்டாள்.
வடபத்ரசாயி கோயிலில் தலைமை அர்ச்சகராக பணிபுரிந்து வந்த பெரியாழ்வார், தினந்தோறும் பெருமாளுக்கு தானே பூ மாலை தயார் செய்து காலையில் அணிவிப்பது வழக்கம்.
அவ்வாறு அவர் தொடுக்கும் மாலையைத் தன் கூந்தலில் சூடி அழகு பார்த்து, பெருமாளுக்கு அழகாக இருக்குமா என்று தனக்குத்தானே கேட்டு, அந்த மாலையைக் கழற்றி வைத்து விடுவாள்.
பெருமாளுக்கு அணிவிக்கும் மாலையை ஒரு நாள், தனது மகள் அணிந்ததை கண்ட பெரியாழ்வார், மகளை கடிந்து அன்று பெருமாளுக்கு மாலை சூட்டாமல் துயரத்தில் தூங்கி விட்டார்.
அவரது கனவில் வந்த பெருமாள், 'உன் மகள் சூடிக்களைந்த மாலையே எனக்கு மிகவும் பிடித்தமானது' என்றுக்கூறி மறைந்தார்.
அதையடுத்து, தனது மகள் தாயாரின் அம்சமாக பிறந்திருப்பதைக்கண்டு மிக மகிழ்ச்சியடைந்தார்,
அதன் பின்னர், மகளுக்கு திருமணம் செய்து வைக்க பெரியாழ்வார் நினைத்தபோது, இறைவனைத்தவிர மானிடர்களுக்கு வாழ்க்கைப்பட மாட்டேன் என்று கோதை கூறியதும், பெரும் கலக்கமடைந்தார்.
அதையடுத்து, ஆழ்வாரின் கனவில் தோன்றிய ஸ்ரீரங்க பெருமாள், கோதையைத் தம்மிடம் அழைத்து வரும்படி கூறினார்.
அதேபோல, பாண்டிய மன்னன் வல்லவதேவன் கனவிலும் சென்ற இறைவன், ஆண்டாளின் பயணத்துக்கு ஏற்பாடு செய்து, பெரியாழ்வாரையும், ஆண்டாளையும் அழைத்துக்கொண்டு ஸ்ரீரங்கம் வரும்படி உத்தரவிட்டார்.
அவ்வாறே, ஆண்டாளும், பெரியாழ்வாரும் ஸ்ரீரங்கம் சென்றபோது, அரங்கனின் கருவறைக்குள் உள்ளே சென்ற ஆண்டாள், பெருமானின் திருவடி பற்றி அமர்ந்ததும் எல்லோரும் பார்த்திருக்க அப்படியே இறைவனுடன் கலந்தாள்.
மகள் திருமணம் நடைபெறும்போது எல்லா பெற்றோருக்கும், மகள் பிரியப்போவதை நினைத்து ஒரு விதமான மனக்கலக்கமும், வருத்தமும் ஏற்படும்.
அது பெரியாழ்வாருக்கும் ஏற்பட்டதை
“ஒரு மகள் தன்னையுடையேன்,
உலகம் நிறைந்த புகழால்,
திருமகள் போல வளர்த்தேன்,
செங்கண்மால்தான் கொண்டு போனான்”
என்று அவர் பாடிய பாசுர பாடல் மூமாக அறியலாம்.
இவ்வாறு ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற ஆண்டாளின் திருக்கல்யாணத்தை, பெரியாழ்வார் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் மக்கள் வேண்டியதன்பேரில், அன்னையை முறைப்படி அரங்கன் திருமணம் புரிந்து கொண்டதாக ஸ்தல வரலாறு கூறுகின்றது.
அதையடுத்து ஸ்ரீ வில்லிபுத்தூரில் ஆண்டாள் நாச்சியாருடன், ரங்கமன்னார் எழுந்தருளி பக்தர்களைக் காத்தருள்கின்றார்.
இங்குள்ள கோயில் கருவறையில், பெருமாளுக்கு அருகிலேயே அவரை வணங்கிய நிலையில் கருடன் இருப்பதை காணலாம்.
தனது மகளான ஆண்டாளை கன்னிகாதானமாக பெருமாளுக்கு தந்தபோது, மாப்பிள்ளைக்கு அருகிலேயே பெரியாழ்வார் நின்று கொண்டதால்தான், கருவறையில் மூலவருக்கு அருகில் கருடன் வீற்றிருக்கிறார்.
சிறப்பு
ஆண்டாள் சூடிய மாலையை பெருமாள் விரும்பி அணிந்ததன் நினைவாக, ஆண்டாள் அணிந்த மாலை, திருப்பதி வெங்கடாஜலபதி மற்றும் மதுரை கள்ளழகர் ஆகியோருக்கு ஆண்டுதோறும் கொண்டு செல்லப்படுகிறது.
கண்ணனை மணம்புரிய வேண்டும் என்று நினைத்த ஆண்டாள், அதற்காக இந்த இரண்டு பெருமாள்களிடம்தான் வேண்டிக்கொண்டாளாம்.
ஆண்டாளின் ஆசை நிறைவேறியதும், அதற்கு நன்றி செலுத்தும் விதமாகத்தான், ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை, கிளி, பட்டு வஸ்திரம் போன்றவைகள், சித்ரா பௌர்ணமியின்போது கள்ளழகருக்கும், புரட்டாசி பிரம்மோற்சவத்தின் 5-ம் திருநாள் அன்று திருப்பதி ஏழுமலையானுக்கும் அணிவிக்கப்படுகிறது.
ஸ்ரீவில்லிபுத்தூரில் மார்கழி மாத பகல் பத்து திருவிழாவின் முதல்நாள் அன்று ஆண்டாள் நாச்சியார், பெரியாழ்வாரின் வம்சாவளியினர் வீட்டிற்குச் செல்வார்.
அந்த வீட்டின் முன்பு காய்கறிகளை பரப்பி வைத்து ஆண்டாளுக்கு வரவேற்பு அளிப்பதை 'பச்சைப் பரத்தல்' என்று அழைப்பார்கள்.
பின்னர் கொண்டைக்கடலை, சுண்டக்காய்ச்சிய பால், வெல்லம் ஆகியவை சேர்க்கப்பட்ட 'திரட்டுப்பால்' மற்றும் மணிப்பருப்பு நைவேத்தியம் இன்றைக்கும் ஆண்டாளுக்கு வழங்கப்படுகிறது.
ஆண்டாள் அருளிய திருப்பாவை பாடல்களைப் பாடுவோருக்கு கைமேல் பலன் கிடைக்கும்.
பூமா தேவியின் அம்சமாக அவதரித்த ஆண்டாள் பிறந்த ஆடிப்பூரத்தின் மேன்மையை, ஆடிப்பூரத்தன்று பிறந்தவர்கள் அறிந்திட ஷேர் செய்யுங்கள்.