
மகிசி என்னும் அரக்கியிடமிருந்து தேவர்களைக் காக்கும் விதமாக, அவதாரம் எடுத்தவரே சபரிமலை ஐயப்ப சுவாமி ஆவார். அன்றைய ஒருங்கிணைந்த தமிழகத்தின் மலைநாட்டில் அடர்ந்த கானகத்தில் குழந்தை வடிவில் இருந்த ஐயப்ப சுவாமி, பந்தள மகாராஜனால் எடுத்து வளர்க்கப்பட்டு, ராணியின் தவறான சிந்தனையால், குழந்தையாக இருந்த ஐயப்பன் காட்டிற்கு சென்ற வரலாறு அனைவருக்கும் தெரிந்ததே. இந்நிலையில், ஆறு படை வீடு என்று சொன்னாலே பொதுவாக நம்முடைய நினைவுக்கு வருவது முருகப்பெருமான் தான். முருகனுக்கு திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை என ஆறுபடை வீடுகள் இருப்பது போல் ஐயப்ப சுவாமிக்கும் ஆறுபடை வீடு இருப்பது பலருக்கும் தெரியாது. தர்ம சாஸ்தா என்று அழைக்கப்படுகின்ற ஐயப்பனுக்கும் ஆறுபடை வீடுகள் உண்டு. அந்த ஆறுபடை வீடுகள் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.
ஆரியங்காவு
ஐயப்ப சுவாமியின் முக்கிய திருத்தலங்களில் ஒன்றாக ஆரியங்காவு ஐயப்பன் கோவில் திகழ்கிறது.
கேரள மாநிலம், கொல்லம் மாவட்டத்தில் உள்ள ஆரியங்காவில் இந்த கோயில் இருக்கிறது.
பொதுவாக ஐயப்பன் என்றாலே பிரம்மச்சாரியாக தான் கருதப்படுகிறார். ஆனால் ஆரியங்காவில் அவர் புஷ்கலை என்னும் மதுரையைச் சேர்ந்த சௌராஷ்டிர குலப் பெண்ணை திருமணம் செய்தபடி, துணையோடு காட்சி தருகிறார்.
மார்கழி மாதத்தில் தான் இந்த கோயிலில் ஐயப்ப தம்பதியினரின் திருமண வைபவ நிகழ்ச்சி கோலாகலமாக நடத்தப்படுகிறது.
இந்த கோயிலில் ஐயப்பனுக்கு காவல் தெய்வமாக, கருப்பசாமியும் கருப்பாயி அம்மனும் வீற்றிருக்கிறார்கள்.
அச்சன் கோவில்
இங்கு வீற்றிருக்கும் சாஸ்தா சிலையானது மிகவும் பழமையானது. இந்த கோயிலில் ஐயப்பன் அமர்ந்த கோலத்தில் கையில் அமுதத்துடனும், காந்த மலை வாளும் ஏந்தி கொண்டிருக்கிறார்.
இந்த ஐயப்பனின் இரண்டு புறத்திலும் பூரணா மற்றும் புஷகலை ஆகிய இருவரும் மலர் தூவிக் கொண்டிருப்பது போல காட்சியளிக்கிறார்கள்.
இந்த சாஸ்தா கல்யாண சாஸ்தா என்று அழைக்கப்படுகிறார். இந்த கோயிலுக்கு சென்று வழிபட்டால், திருமணத் தடைகள் இருந்தால் நீங்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.
இந்த கோயிலும், கேரள மாநிலத்தின் கொல்லம் மாவட்டத்தில் பத்தனாபுரம் பகுதிக்கு அருகில் இருக்கிறது.
சபரிமலைக்கு மாலை அணிந்து செல்லும் பக்தர்கள் பலரும் அச்சன் கோவில் சென்று தரிசனம் செய்து வருகின்றனர்.
குளத்துப்புழா
ஐயப்பன் கோயில்களில் மிக முக்கியத் தலமாகக் கருதப்படுவது குளத்துப்புழை ஐயப்பன் கோயில் ஆகும்.
இந்த கோயிலில் ஐயப்பன் குழந்தை வடிவில் பாலசாஸ்தாவாகக் காட்சியளிக்கிறார். அதனாலேயே இந்த கோயில் நுழைவாயில் பகுதி சிறுவர்கள் சென்று வரும் அளவுக்கு குறுகியதாகவே இருக்கிறது.
இந்த கோயிலும், கேரள மாநிலத்தின் கொல்லம் மாவட்டத்தில் தான் அமைந்திருக்கிறது.
இந்த கோயிலில் உள்ள முக்கியமான சன்னதிகளுள் ஒன்று யட்சியம்மன் சன்னதி. குழந்தை இல்லாத பெண்கள் இந்த சன்னதியில் சென்று தொட்டில் கட்டி வழிபட்டால், குழந்தை பாக்கியம் உண்டாகும் என்று நம்பப்படுகிறது.
எருமேலி
கேரள மாவட்டம், கோட்டயம் பகுதியில் இருக்கும் எருமேலி ஐயப்பன் கோயில், சபரிமலைக்கு மாலை அணிந்து செல்லும் பக்தர்கள் அனைவரும் ஒன்று சேரும் இடமாக இருக்கிறது.
பந்தள மன்னன் ராஜசேகர பாண்டியன் என்பவரால் கட்டப்பட்ட ஐயப்பன் கோயிலாகும்.
இந்த கோயிலில் வேட்டைக்குப் போகும் தர்ம சாஸ்தாவாக ஐயப்பன் அம்பு மற்றும் வில்லுடன் காட்சி தருகிறார்.
எருமைக்கொல்லி என்னும் பெயர் தான் காலப்போக்கில் எருமேலி என்று மருவியிருக்கிறது.
பந்தளம்
கேரளாவில் உள்ள பத்தனம்திட்டா மாவட்டத்தில் பந்தளம் உள்ளது.
சபரிமலையில் குடிகொண்டிருக்கும் ஐயப்பன் பந்தள மகாராஜாவின் மகனாகப் பிறந்து வளர்ந்ததாக நம்பப்படுகிறது.
சபரிமலைக்கு வரும் பக்தர்கள் பந்தளத்தில் உள்ள வலியக்கோயில் என்னும் இந்த கோயிலுக்கு வந்து வழிபட்டு செல்கின்றனர்.
இந்த கோயிலில் இருந்து தான், சபரிமலையில் நடைபெறும் மகர விளக்கு பூஜையின் போது, ஐயப்ப சுவாமிக்கு அணிவிக்கப்படும் புனித ஆபரணங்கள் அனைத்தும், பந்தள மன்னரின் வாரிசுகளால் இன்றும் கொண்டு செல்லப்படுகிறது.
சபரிமலை
கேரளாவின் மேற்கு மலைத்தொடர் பகுதியில் உள்ள பத்தனம்திட்டா மாவட்டத்தில் தான் சபரிமலை இருக்கிறது.
மகிசி என்னும் கொடிய அரக்கியைக் கொன்று, ஐய்யப்பன் தியானம் செய்யும் இடமாக திகழும் சபரிமலை, பதினெட்டு மலைகளுக்கு இடையே அமைந்திருந்திருக்கிறது.
அதன் குறியீடு தான் பதினெட்டு படி. ஒவ்வொரு படியும் ஒரு மலை.
ஒவ்வொரு ஆண்டும் சுமார் 5 கோடி பேர் சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்து வருகிறார்கள்.
இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள் (ஷேர் செய்யுங்கள்).