download_indicator

தெய்வங்களையும், முனிவரையும் ஆட்டிப்படைத்த கர்ம வினை

ஒருவரின் பாவ, புண்ணியங்களுக்கு அடிப்படை காரணமே அவரவர் கர்ம வினைகளே காரணம் என்று இந்து மதம் கூறுகிறது. அவ்வாறிருக்க இந்த கர்ம வினையானது எவ்வளவு பெரிய ஆளாக இருப்பினும் அவர்களை விடாது. அது ஞானிகள், முனிவர்கள், ரிஷிகள், மகான்கள் என்றில்லை தெய்வங்களைக்கூட விடாது என்பது குறிப்பிடத்தக்கது. அதையடுத்து அது குறித்த விபரத்தை அறிந்திடுவோம்.

கர்ம வினை

ஒருவர் தெரிந்தோ, தெரியாமலோ பாவம், புண்ணியம் செய்திருந்தால் அதற்கு தகுந்த பலன் கிடைக்கும்.

நல்லது செய்திருந்தால் அவருக்கு பல நல்ல விஷயங்கள், யோகங்கள், காரிய வெற்றிகள், பேரும் புகழும் கிடைக்கும்.

அதுவே, தீமை, கெடுதல் செய்திருந்தால் கஷ்டம், துயரம், துன்பம், தோல்வி, அவமானம் போன்றவற்றை சந்தித்தே தீர வேண்டும்.

எதுவாக இருந்தாலும் அதை அனுபவித்தே தீர வேண்டுமென்பதுதான் கர்ம வினை.

இந்த நியதிக்கு யாரும் தப்ப முடியாது, அரசனாக இருப்பினும், ஆண்டியாக இருப்பினும் இறைவனின் நீதிமன்றத்தில் எல்லோருக்கும் ஒரே சட்டம்தான்.

எவ்வளவு சக்தி பெற்ற தெய்வமாக இருந்தாலும், எண்ணற்ற தவம், ஞானம் பெற்ற முனிவராக இருந்தாலும் அவருக்கான தண்டனையில் இருந்து தப்ப முடியாது.

இராமனும், கிருஷ்ணரும்

மனித வடிவில் பிறந்து வந்த அவதார தெய்வங்களான இராமபிரானையும், கிருஷ்ணரையும் கூட கர்மவினை விட்டுவைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இராமபிரான் சிறு வயதில் கூனியின் முதுகில் கல்விட்டு எறிந்து ரசித்து விளையாடினார்.

அதன் விளைவே, ஆட்சிப்பதவி ஏற்கவேண்டிய கடைசி நேரத்தில் காட்டிற்கு சென்று அவதியடையும் நிலையேற்பட்டது.

அதுமட்டுமல்லாது, சீதையுடன் அவர் இல்லற வாழ்க்கை நடத்தியதும் ஒரு சில மாதங்கள் மட்டுமே இருந்திருக்கும்.

இராமபிரான் தனது வாழ்நாளில் பெரும்பகுதியை துன்பம், துயரம், கஷ்டங்களுடனே வாழ்ந்தார்.

அதேபோல், இராமர், வாலியை மறைந்திருந்து தாக்கி கொன்றதன் விளைவை கிருஷ்ணாவதாரத்தில் அனுபவித்தார்.

அடுத்த பிறவியில் வேடனாக பிறந்த வாலி, கிருஷ்ணரின் பாதங்களை பறவை என்று நினைத்து அம்பெய்தி, கிருஷ்ண பகவானை வைகுண்டத்திற்கே அனுப்பி வைத்தான்.

இந்த கர்ம வினைக்கு தெய்வங்களும் தப்ப முடியாது என்பதற்கு இராமர், கிருஷ்ணர் மட்டுமல்ல, இன்னும் எண்ணற்ற தெய்வங்களை உதாரணமாக கூற முடியும்.

சிலாதர முனிவர்

சிறு வயதில் அறியாமல் சில தவறுகளை பலரும் செய்வதுண்டு.

அவ்வாறு நாம் அறியாமல் செய்தாலும், அதற்கான தண்டனைகளை அனுபவித்தே தீர வேண்டும்.

இதற்கு சிறந்த உதாரணமாக, இராமபிரானின் சிறுபிராயத்தில் நடந்ததை அறிந்தோம்.

அதேபோல், சிலாதர முனிவர் என்பவரும், சிறு வயதில் தனது தந்தையின் ஆசிரமத்திற்கு வருகை புரியும் முனிவர்களின் உணவில், வேண்டுமென்றே கல்லை கலந்து விட்டு அவர்கள் படும் அவஸ்தையை ரசித்து மகிழ்ந்தார்.

அதன் விளைவை, அவர் ஒருமுறை எமலோகத்திற்கு சென்றபோது நேரில் கண்டார்.

அங்கு அவர் செய்த தவறுக்கு 5 அடி உயரக்கல்லை, அவரே தின்று கரைக்க வேண்டும் என்பதை உணர்ந்தார்.

இந்நிலையில், அந்த முனிவரோ இப்பிறவியிலேயே முக்தியடைந்து, இறைவன் அடியை சேர விரும்பினார்.

அதற்கு இந்த கற்பாறை தடையாக இருக்கும் என்பதால், இந்த ஜென்மத்திலேயே அந்தப் பாவத்தைப் போக்க விரும்பினார்.

அதையடுத்து, இந்தக் கல்லை இப்பிறவியிலேயே நானே கொஞ்சம் கொஞ்சமாக தின்று விடுகிறேனே என்று எமதர்மனிடம் முனிவர் கேட்டார்.

எமதர்மனும் அவரது கோரிக்கையை ஏற்றுக்கொண்டு சம்மதம் தெரிவித்தார்.

அதன் பின்னர், அந்த முனிவர் 5 அடி உயரக்கல்லை சிறிது சிறிதாக அரைத்து உண்டார்.

அதன் காரணமாகவே அவருக்கு சிலாதர் என்ற பெயர் வந்தது.

இவ்வாறாக, யாராக இருந்தாலும் கர்ம வினைக்கு தப்ப முடியாது என்பதை நாம் அறிந்து கொண்டு, இனியாவது பாவங்களை செய்யாமல் புண்ணிய செயல்களை மட்டுமே செய்திட முன்வர வேண்டும்.

கர்ம வினை எப்படி ஏற்படும் என்பதை எல்லோரும் அறிந்திட பகிர்ந்திடுங்கள் (ஷேர் செய்யுங்கள்).



Follow Us on