ஆருத்ரா தரிசனம் எதற்காக நடைபெற்றது?

மார்கழி மாத பௌர்ணமி தினமும், திருவாதிரை நட்சத்திரமும் சேர்ந்து வருகிற தினத்தன்று, சூரிய உதயமாகும் நேரத்தில் சிவபெருமான் காட்சியளிப்பதே ஆருத்ரா தரிசனமாகும். இந்த தரிசனம் எதற்கு, யாருக்காக நடைபெற்றது என்று அறிந்திடலாம்.

ஆருத்ரா தரிசனம்

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக பார்வதி தேவியின் தீவிர பக்தையான திரேதாயுகா என்ற பெண்ணிற்கு, திருமணம் நடைபெற்று சாந்தி முகூர்த்தம் முடிவதற்கு முன்பாகவே அவளது கணவன் இறந்தான்.

அக்காலத்தில் திருமணமான நான்காவது நாளில்தான் சாந்தி முகூர்த்தம் நடைபெறும்.

ஆனால், திருமணமான மூன்றாவது நாளிலேயே, திரேதாயுகாவின் கணவன் இறந்து விட்டான்.

அதையடுத்து, திரேதாயுகாவின் கதறலை கேட்டு மனம் உருகிய பார்வதி தேவி, சிவபெருமானிடம் அவளுக்கு உயிர்பிச்சை அளிக்கும்படி கூறினார்.

அதைக்கேட்ட சிவபெருமான், எமலோகத்தை ஒரு பார்வை பார்த்ததும், பதறிய எமதர்மன், திரேதாயுகாவின் கணவனுக்கு மீண்டும் உயிர் கொடுத்தார்.

அதன்பின்னர், அப்பனும், அம்மையும், திரேதாயுகா, அவள் கணவனுக்கு காட்சியளித்து ஆசி வழங்கினர்.

இந்நிகழ்ச்சி ஒரு மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளில் நடந்ததால், இந்த தரிசனத்துக்கு ஆருத்ரா தரிசனம் என்ற பெயர் ஏற்பட்டது.

அத்தகைய சிறப்பு வாய்ந்த ஆருத்ரா தரிசனம் நாளை நடைபெற இருப்பதையடுத்து, அவசியம் அதிகாலை சிவன் கோயிலுக்கு சென்று ஆருத்ரா தரிசனம் காண்பது சிறப்பாகும்.

சேந்தனாரும், முனிவர்களும்

தாருகாவன முனிவர்கள் ஒரு சமயம் கடவுள் இல்லை என்றும், கர்மம் தான் பெரியது என்று ஆணவம் கொண்டிருந்தனர்.

அவர்களுக்கு பாடம் கற்பிக்கும் வகையில், சிவபெருமான், பிட்சாடனர் வடிவில் அவர்கள் இல்லங்களுக்குச் சென்றார்.

அப்போது, பிட்சாடனர் அழகில் மயங்கிய முனிவர்களின் மனைவியர் அனைவரும் அவரை பின் தொடர்ந்து சென்றனர்.

அதைக்கண்டு கடும் கோபமடைந்த முனிவர்கள், இறைவன் மீது மத யானை, மான், உடுக்கை, முயலகன். தீப்பிழம்பு ஆகியவற்றை ஏவி விட்டனர்.

இறைவனோ அவை எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டு, முயலகனின் மேல் வலது காலை ஊன்றி, இடது காலைத் தூக்கியபடி நடனம் ஆடினார்.

அதுவே ஆருத்ரா தரிசனம் என்று கூறப்படுகிறது.

அதன் பின்னர், முனிவர்கள் உண்மையை அறிந்து, இறைவனிடம் மன்னிப்பு கேட்டனர்.

அதேபோல், சேந்தனாரின் பக்தியை உலகிற்கு தெரிவிக்கும் வகையில், அவரது வீட்டிற்கு சென்று களியும், கூட்டும் வாங்கி சாப்பிட்டு, அவருக்கு காட்சியளித்தார்.

அவ்வாறு சேந்தனாருக்கு, இறைவன் காட்சியளித்த தினமே ஆருத்ரா தரிசனம் எனப்படுகிறது.

ஆருத்ரா தரிசனம் நடைபெறுவதற்கு காரணமாக இருந்தவர்கள் யாரென்பதை உங்களுக்கு தெரிந்தவர்கள் அறிந்திட பகிர்ந்திடுங்கள் (ஷேர் செய்யுங்கள்).



Follow Us on