
நமது முன்னோர்கள் திடகாத்திரமாகவும், ஆரோக்கியமாகவும், நீண்ட காலம் வாழ்ந்ததற்கு காரணமாக அமைந்தது சத்தான உணவு மட்டுமல்ல. அவர்கள் பயன்படுத்திய பாத்திரமும் காரணம் ஆகும். அக்காலத்தில் சமைப்பதற்கு மண்பாண்டங்கள், வெண்கலம், வெள்ளீயம் பூசப்பட்ட பித்தளை பாத்திரங்கள் ஆகியவற்றை தான் அதிகமாக பயன்படுத்தி வந்தனர். செம்பு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி பருகி வந்தனர். பொதுவாக எந்த ஒரு உணவை சமைத்தாலும் காற்று, வெளிச்சம் இருக்க வேண்டும். சூரிய ஒளி, காற்று படாத உணவு விஷத்திற்கு சமம். உடனே அதன் தன்மை வெளிப்படாமல் போனாலும் நாளடைவில், சிறிது சிறிதாக தீய விளைவுகளை ஏற்படுத்தும். அதையடுத்து, எந்தெந்த பாத்திரம் சமைப்பதற்கு சிறந்தது என்றும், அதன் பயன்கள் குறித்தும் பார்க்கலாம்.
மண்பாண்டம்
100% பலன் தரக்கூடியது.
உணவின் மீது வெப்பம் சீராக பரவுகிறது.
மண் பாத்திரத்தில் உள்ள நுண்துளைகள் மூலம் காற்று உணவில் ஊடுறுவுவதால், ஆவியில் வேக வைத்த தன்மையை உணவு பெறுகிறது.
மேலும், இதில் சமைத்த உணவு சுவையுடன் பல மணி நேரம் கெடாமல் இருக்கும்.
சமையலுக்கு மின் அடுப்பும், எரிவாயு அடுப்பும் பயன்படுத்துவதையடுத்து, இன்றைக்கு 95 சதவீதத்திற்கும் மேலாக மண்பாண்ட சமையல் பழக்கம் காணாமல் போய்விட்டது.
கிராமப்புறங்களில் மட்டும் இன்றும் மண்பாண்ட சமையல் உயிர்பெற்று இருக்கிறது.
பாரம்பரிய மண்பாண்ட சமையலின் அருமையை உணர்ந்தவர்கள் தற்போது அதை பயன்படுத்த தொடங்கியுள்ளது வரவேற்கத்தக்கதாக இருக்கிறது.
வெண்கலம்
97% பலன் தரக்கூடியது.
இதில் சமைத்த உணவு சீக்கிரம் கெட்டுப் போகாது.
அதனால், நமது உடல் நலம் சிறப்பாக இருக்கும்.
நெய் மற்றும் புளிப்புச் சுவையுடைய பொருட்களை வெண்கலப் பாத்திரங்களில் தவிர்க்க வேண்டும்.
வெண்கல பாத்திரங்கள் கனமாக இருப்பதால் யாரும் அதிகம் பயன்படுத்துவதில்லை.
பித்தளை (வெள்ளீயம் -Tin பூசப்பட்டது)
95% பலன் தரக்கூடியது.
வெள்ளீயம் பூச்சு இல்லாத பித்தளை பாத்திரத்தில் சமையல் செய்தால் உணவு விஷமாகும்.
ஆகவே, வெள்ளீய பூச்சு போய்விட்டால் மறுபடியும் புதிதாக வெள்ளீயத்தை பூசித்தான் உபயோகப்படுத்த வேண்டும்.
தற்போது, இத்தகைய நடைமுறை மறைந்தே போய் விட்டது எனலாம்.
எவர்சில்வர்
மண்பாண்டத்துக்கு அடுத்து எவர்சில்வர் பாத்திரங்கள் உணவு சமைக்கச் சிறந்தவை.
எந்த அமில வினைபுரியும் திறனும் எவர்சில்வர் பாத்திரங்களுக்கு இல்லாததால் சமைத்த உணவுகளை இதில் பல மணி நேரம் வைத்திருக்கலாம்.
மண்பாண்டம் மற்றும் எவர்சில்வர் பாத்திரங்களைத் தவிர, மற்ற எந்த பாத்திரங்களில் உணவு சமைத்தாலும் அவற்றை உடனடியாக எவர்சில்வர் பாத்திரத்துக்கு மாற்றிவிட வேண்டியது அவசியம்.
அலுமினியம்
விலை மலிவு என்பதால் அலுமினியப் பாத்திரங்களை பலரும் பயன்படுத்துகின்றனர்.
அலுமினியப் பாத்திரங்களில், புளிப்பு சுவையுடைய உணவுகளைச் சமைத்தால் அமிலத் தன்மையுடன் வினைபுரிந்து உணவுப்பொருளில் எளிதில் அலுமினியத் தாது கலந்துவிடும் அபாயம் உள்ளது.
பிரஷர் குக்கர்
அலுமினியம், காப்பர், ஸ்டெயின் லெஸ் ஸ்டீல், டைட்டானியம் போன்ற உலோகங்களில் பிரஷர் குக்கர் கிடைக்கிறது.
விலை குறைந்த அலுமினியம் பிரஷர் குக்கரில் சமைப்பதை விட, மற்ற மூன்று பிரஷர் குக்கர்களில் சமைப்பதே நல்லது.
அலுமினியத்துடன் ஒப்பிடும்போது மற்ற வகை குக்கர்களில் இருந்து மிக மிகக் குறைந்த அளவில்தான் மெட்டல் வெளியேறும்.