
சமையலுக்கு சுவை கூட்டுவது அதில் இருக்கும் நறுமணப் பொருட்கள் தான். நம் முன்னோர்கள் மூலம் காலம், காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் ஏலக்காய், சோம்பு, கிராம்பு போன்ற சில வாசனை பொருட்களை நாம் சமையலில் தொடர்ந்து கடைபிடித்து வருகிறோம். இதில் வாசனைக்காக பயன்படுத்தப்படும் பொருட்களும் அடங்கும். நறுமண பொருட்களை உணவில் சேர்ப்பதால் செரிமான நொதிகள், உமிழ்நீர் மற்றும் அமில சுரப்பை தூண்டுகிறது. இவற்றில் பாக்டீரியல் எதிரி, அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்சிஜனேற்ற பண்புகள் உள்ளன. இவைகள் கொழுப்பின் அளவை குறைத்து இதய நோயை தடுக்கிறது. அதையடுத்து அவ்வாறு பயன்படுத்தப்படும் பொருட்களில் உள்ள மருத்துவ பயன்கள் குறித்து தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
வெந்தயம்
வெந்தயம், இரைப்பை குடல் வலி நீக்கியாக பயன்படுத்தப்படுகிறது.
பெரியம்மை தாக்கிய நோயாளிகளின் உடல் நலனை மேம்படுத்துவதற்காக, குளிர்பானத்துடன் இதை கலந்து கொடுப்பது வழக்கம்.
இது முடி வளர்ச்சிக்கும், தோல் பளபளப்புக்கும் உதவுகிறது.
வெந்தயத்தை இரவு முழுவதும் ஊறவைத்து, அந்த தண்ணீரை குடித்தால், உடல் குளிர்ச்சி அடையும்.
ஏலக்காய்
ஏலக்காய் வாய் மனத்திற்கான பொருளாகும்.
ஏலக்காய் இல்லாமல், பாயாசம், ஹல்வா, சர்க்கரை பொங்கல் என்று எந்த இனிப்பும் தயாரிக்க முடியாது.
இது வாதம், பித்தம், கபம் எனும் 3 தோசங்களையும் சமச்சீராக வைத்து கொள்ள உதவுகிறது.
ஜீரணத்தை மேம்படுத்தவும், வாயுவை வெளியேற்றவும் பயன்படுகிறது.
கொத்தமல்லி
சட்னி முதல் சாம்பார் வரையில் அனைத்து, அன்றாட உணவுகளிலும் கொத்தமல்லி அவசியம் இடம் பெறுகிறது.
இது இல்லாமல் உணவு ருசி, மனத்துடன் அமையாது.
கொத்தமல்லி விதைகள், ஜீரணத்துக்கு மிகச் சிறப்பானது. வயிற்று கோளாறுகள் அனைத்தையும் தீர்க்கும் வல்லமை கொண்டவை.
சீரகம்
சீரகம் என்ற பெயர் வந்ததற்கு காரணமே, இது அகத்தை சீர்படுத்துவதால்தான். ஜீரணத்தை மேம்படுத்தும் திறன் கொண்ட இது, உணவுக்கு மனத்தையும் அளிக்கிறது.
இது வயிற்றுப்போக்கு ஏற்படாமல் தடுக்கிறது.
ஓமம்
வாதம், கபம் ஆகியவற்றை சமப்படுத்துவதுடன், பித்தத்தை அதிகரிக்கச் செய்கிறது.
இது சிறந்த உடற்கட்டை பெற உதவி செய்து, ஜீரணத்தை அதிகரிக்கச் செய்கிறது.
சாப்பாட்டிற்கு பின்பு ஒரு ஸ்பூன் அளவு இதை சாப்பிட்டால் போதும், சுவாச உறுப்புகள் சிறப்பாக செயல்பட இது உதவுகிறது.
கபத்தை நீர்த்துப்போகச் செய்கிறது.
கறுப்பு மிளகு
திரிகடுவை தயாரிக்க பயன்படும் முக்கியமான பொருட்களில் ஒன்று கறுப்பு மிளகு.
தொண்டை வறட்சி, ஜலதோஷம் போன்ற பிற சுவாச பிரச்சனைகளுக்கு கறுப்பு மிளகு கசாயம் மிகச்சிறந்த வீட்டு வைத்தியம்.
அதேபோல், சிறிதளவு தேனுடன், மிளகுப்பொடியை கலந்து சாப்பிட்டால் ஜலதோஷம் கட்டுப்படும்.
இலவங்கப்பட்டை
உயர்தர கார உணவு வகைளில் இது சேர்க்கப்படுகிறது.
அசைவ உணவு மற்றும் பிரியாணியில் இது அவசியம் இடம்பெறும்.
சிறிதளவு இலவங்கப்பட்டையை எடுத்து வாயில் மெல்வதால் வாய் துர்நாற்றம் காணாமல் போகும்.
கபத்தை கட்டுப்படுத்துவதுடன், வாதத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும்.
இஞ்சி
அஜீரணத்தில் இருந்து விடுபட இஞ்சி பயன்படுகிறது.
வயிற்று பொருமல், சிறந்த உடற்கட்டுக்கும் இது உதவுகிறது.
உணவுகளில் மனத்தை கூட்டுவதற்கு மட்டும் இல்லாமல், ஜீரணத்தை மேம்படுத்துவதற்காகவும் இது பயன்படுத்தப்படுகிறது.