download_indicator

30. திருப்பாவை

(முப்பதாம் பாடல்)

வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனைத்

திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்று இறைஞ்சி

அங்கப் பறைகொண்ட ஆற்றை அணிபுதுவைப்

பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன

சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே

இங்கிப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத்தோள்

செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்

எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்.

- ஆண்டாள்

பாடலின் பின்னணி

அன்னை ஆண்டாள் நாச்சியார் பகவான் கண்ணையே கணவராக அடைய ஆவல் கொண்டார். மார்கழியில் தோழியர்களோடு பாவை நோன்பு நோற்றார். அவரது பக்திக்கு மனமிரங்கிய பகவானும் வேண்டிய வரத்தினை அளிக்க விருப்பம் தெரிவித்தார். பாவை நோன்பின் நோக்கத்தை வேண்டினார்கள், பகவானின் பெருமைகளைப் பாடினார்கள். எத்தனை பிறவிகள் எடுத்தாலும் இறைவனுக்கே ஆட்செய்வோம் என்ற ஜீவத்மாக்களின் லட்சியத்தை வேண்டிய ஆண்டாள், இந்த முப்பது பாடல்களையும் பாராயணம் செய்பவர்பவர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதைப் பாடி திருப்பாவையை நிறைவு செய்கிறார்.

பாடலின் பொருள்

ஓயாத அலைகளை உடைய பாற்கடலில் துயில் கொண்டிருப்பவரும், அந்த பாற்கடலைக் கடைவதற்காக கூர்மமாக அவதாரம் எடுத்த மாதவனை, கேசி என்ற அசுரனை வதம் செய்த கேசவனை, நிலவு போன்ற அழகிய முகத்தை உடைய ஆயர்குலப் பெண்கள் வணங்கி பாவை நோம்பு கடைபிடித்தார்கள். பகவான் கண்ணனிடம் வேண்டி நோன்பு நோற்று அவரது திருவருளைப் பெற்றனர். அவர்கள் பாவை நோன்பு நோற்ற விதம் குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் என்னும் திவ்ய தேசத்தில் பிறந்த பெரியாழ்வாரின் மகளான கோதை என்னும் அடியேன், சங்கத்தமிழால் பாடிய இந்த முப்பது பாடல்களையும் பாடி அழகிய இரு தோள்களை உடையவரும், சிவந்த அழகிய கண்களை உடையவரும், நிறைந்த செல்வத்தினை உடையவருமான திருமாலை பாடுபவர்களுக்கு அனைத்து விதமான செல்வங்களும், இறை அருளும் எப்போதும் நிறைந்திருக்கும். அவர்களுக்கு எப்போதும் இன்பமாக வாழும் வாழ்க்கை அமையும்.

பாடலின் உட்பொருள்

இந்த பாசுரம், திருப்பாவை என்ற பிரபந்தத்தின் பெருமையையும், அதைப் பாராயணம் செய்வதால் கிட்டும் பரம புருஷார்த்தத்தையும் (வாழ்வின் இறுதிப் பயன்) விளக்குகிறது.

கடல் கடைந்த மாதவன்: இது பகவானின் சௌலப்யத்தையும் (எளிமை), பரத்துவத்தையும் ஒருங்கே காட்டுகிறது. தேவர்களுக்காகத் கூர்மாவதாரம் எடுத்து கடலைக் கடைந்தார். இது அவரது எளிமை. அதில் இருந்து வெளிப்பட்ட திருமகளை இறைவன் அடைந்தார். இது அவரது பெருமை.

தத்துவார்த்தமாக பார்த்தால், சம்சார சாகரம் என்னும் கடலைக் கடைந்து, அடியார்களுக்கு மோட்சம் என்னும் அமிர்தத்தை எடுத்துக் கொடுப்பவர்.

கேசவன்: அடியவர்களின் துன்பம் தீர்ப்பவர் என்ற குணத்தைக் காட்டுகிறது. திருப்பாவையை ஓதுபவர்களின் அஞ்ஞானம், கர்மவினை போன்ற எதிரிகளை அவர் அழிப்பவர்.

சேயிழையார்: இவர்கள் கோபியர்கள் மட்டுமல்ல. பகவானையே அடைய வேண்டும் என்ற ஞானம் (திங்கள்-மதி) கைவரப்பெற்ற, பக்தி என்னும் ஆபரணம் (இழை) பூண்ட அனைத்து ஜீவாத்மாக்களையும் குறிக்கிறது.

பட்டர்பிரான் கோதை சொன்ன: ஆண்டாள் தன்னை "கோதை" என்று மட்டுமே சொல்லிக் கொள்கிறார். ஆனால், அதற்கு முன் தன் தந்தை "பட்டர்பிரான்" (பெரியாழ்வார்) பெயரைக் குறிப்பிடுகிறார். இது ஆச்சாரிய சம்பந்தத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. “நான் என் சொந்த அறிவால் இதைப் பாடவில்லை. என் ஆச்சாரியனான என் தந்தை மூலமாகவே இந்த ஞானத்தைப் பெற்றேன்.”

சங்கம்: “இது பக்தர்கள் கூடி அனுபவிப்பதற்காகப் பாடப்பட்ட தமிழ் மாலை.”

தமிழ்: இது வேதங்களின் சாரமாக, எளிய தமிழில், அனைவரும் புரிந்து அனுபவிக்கும் வண்ணம் பாடப்பட்டது. எனவே இது “தமிழ் மறை” எனப் போற்றப்படுகிறது.

முப்பதும்: இந்த 30 பாடல்களையும் முழுமையாக அனுபவிக்க வேண்டும்.

தப்பாமே: வெறும் சொற்களைப் பிழையின்றிச் சொல்வது மட்டுமல்ல. அதன் பொருளையும், தத்துவத்தையும் உணர்ந்து, அன்னை ஆண்டாள் குழுவினர் எந்த மனநிலையில் பாடினார்களோ (அன்பு, பக்தி, சரணாகதி), அதே மனநிலையுடன் பாட வேண்டும்.

ஈரிரண்டு மால் வரைத் தோள்... செல்வத் திருமாலால்: பலனைத் தருபவர் யார்? பரம்பொருளான அந்தத் திருமாலே. அவரது நான்கு தோள்களும் நான்கு புருஷார்த்தங்களையும் (அறம், பொருள், இன்பம், வீடு) தருபவை. அவரது செங்கண் கருணையைக் காட்டுகிறது. அவரது திருமுகம் ஆனந்தத்தைத் தருகிறது.

எங்கும்: இவ்வுலகில் (இகத்திலும்) வாழும்போதும், வைகுந்தத்தை (பரத்திலும்) அடைந்த பிறகும்.

திருவருள் பெற்று: “திரு” என்றால் பிராட்டி. “பிராட்டியின் சம்பந்தத்துடன் கூடிய பகவானின் அருளைப் பெறுவர்.” அதாவது, வெறும் பகவானின் அருளை மட்டுமல்ல, தாயாரின் புருஷகாரத்துடன் கூடிய ஒப்பற்ற திருவருளைப் பெறுவார்கள்.

இன்புறுவர்: இவ்வுலகில் பகவத் அனுபவத்தால் இன்புறுவர்; மறுமையில் பகவானுக்கு நித்திய கைங்கரியம் செய்து பேரின்பம் அடைவர்.

சுருக்கமாக பார்த்தால், சிறந்த குருவின் வழிகாட்டுதலுடன் (பட்டர்பிரான் கோதை), குழுவாக இணைந்து பக்தி செய்த அனுபவங்களை (சங்கம்), வேத சாரமாக எளிய தமிழில் (தமிழ் மாலை) அருளப்பட்ட இந்தத் திருப்பாவை முப்பது பாடல்களையும், அதன் பொருளை உணர்ந்து, பக்திப் பெருக்கோடு பாராயணம் செய்பவர்கள், பிராட்டியின் புருஷகாரத்துடன் கூடிய பரம்பொருளான திருமாலின் திருவருளைப் பெற்று, இவ்வுலகிலும், பரமபதத்திலும், அதாவது எல்லா இடங்களிலும், எல்லாக் காலங்களிலும் நித்தியமான பேரின்பத்தை அடைவார்கள். இதுவே ஆண்டாள் இந்த உன்னதமான பிரபந்தத்திற்குத் தரும் இறுதிப் பயனாகும்.

ஆன்மிக அன்பர்களே

மார்கழியில் அன்னை ஆண்டாள் நாச்சியாரின் இந்த முப்பது திருப்பாவை பாடல்களையும் பாடி எம்பெருமான் வைகுண்ட வாசனை வணங்குபவர்களுக்கு வேண்டிய அனைத்தும் கிடைக்கும் என்பது அனுபவ உண்மை.

இறைவனிடத்தே தனது வேண்டுகளை மட்டும் யாசிக்காமல், வையமே வளம் பெற வேண்டிகொள் வைத்த கோதை பிராட்டி, வளரும் தலைமுறைகளும் அவற்றை உணரும் வகையில் ‘சங்கத்தமிழ் மாலை’ என்னும் தலைப்பில் ஈரத்தமிழால் பாமாலைகளைப் பொழிந்தார்.

காவிரியில் கிடந்துறங்கும் பூலோக வைகுண்ட நாதரே அன்னையை ஆட்கொள்ள சம்மதித்தார், அவ்வண்ணமே திருவரங்கம் சென்ற பட்டர்பிரான் திருமகளாம் அன்னை ஆண்டாள், வையத்தை நோக்கி “யாம் இருக்கிறோம்! எங்கும் திருவருள் பெற்று இன்புறுக” என்று ஆசியுரை வழங்கி, அத்தனை ஆழ்வார்களும் போற்றிய அந்த அரங்கத்தம்மானின் திவ்யமங்கல திருமேனியோடு ஐக்கியமானார். வளரும் தலைமுறைக்கு திருப்பாவையை எடுத்துச் செல்வோம்! எல்லோரும் போற்றுவோம்! என்றென்றும் போற்றுவோம்!

அன்னை ஆண்டாள் நாச்சியார்

திருவடிகளே சரணம்!!!

 
 


Follow Us on