
இந்து மதத்தின் கருத்துகளும், தத்துவங்களும் அதில் உள்ள வேதங்கள், உபநிஷதங்கள், புராணங்கள், உப புராணங்கள் போன்றவற்றில் உள்ளன.அவைகளில் இறைவனின் அவதாரங்கள் பற்றியும், நீதி, நேர்மையாக நடந்து கொண்டவர்கள், நீதிக்கு மாறாக செயல்பட்டவர்கள் என அனைத்து தரப்பினரையும் பற்றி கூறப்பட்டுள்ளன. பெருபாலும் அவற்றில் உள்ள ஒழுக்க வழக்கங்களையும், நேர்மையான பழக்க வழக்கங்களையும் இன்றைய சமுதாயத்தினர் அறிந்துகொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்படுகின்றன. அதையடுத்து, இராமாயணம், மகாபாரதம் ஆகிய 2 இதிகாசங்களிலும் வாழ்ந்தவர்கள் யாரென அறிந்திடலாம்.
இராமாயணம், மகாபாராதம்
கிருத யுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலியுகம் என நான்கு யுகங்கள் இருப்பதில், இராமாயணத்திற்கும், மகாபாரதத்திற்கும் பல்லாயிரம் ஆண்டுகள் வித்தியாசம் உள்ளது.
அதன்படி, இராமாயணம், மகாபாராதம் ஆகிய 2 இதிகாசங்களிலும் வருபவர்கள், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் வாழ்ந்தவர்களா என்ற கேள்வி வரும்.
பண்டைய காலத்தில் கிருத யுகம், திரேதா யுகத்தில் வாழ்ந்தவர்களின் ஆயிட்காலம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பரசுராமர்
இராமாயண காலத்தில் இருந்த பரசுராமர் மிகச்சிறந்த வில்வித்தை வீரராக இருந்ததுடன், சிவபெருமானிடமிருந்து பரசு என்னும் ஆயுதத்தை பெற்றதன் காரணமாக பரசுராமர் என்ற பெயரை பெற்றார்.
தனது தந்தையை கொன்ற சத்திரியர்கள் மீது கடும் கோபம் கொண்ட பரசுராமர், சத்திரியர்கள் வம்ச 21 தலைமுறையினரை பூண்டோடு அழிப்பதாக சபதம் செய்து அவர்களை அழித்தார்.
சிவதனுசுவை உடைத்து இராமர் சீதையை மணம் புரிந்ததை அறிந்த பரசுராமர், அவரையும் அழிக்கும் எண்ணத்தில் இருந்தார்.
ஆனால், இராமரை நேரில் பார்த்ததும் பரசுராமர் மனம் மாறி சத்திரியர்களை அழிக்கும் எண்ணத்தை கைவிட்டார்.
இந்த பரசுராமர், மகாபாரதத்திலும் வருகிறார்.
தன்னை அந்தணர் என்று பொய் சொல்லி பிரம்மாஸ்திரம் ஏவும் வித்தையை பரசுராமரிடமிருந்து கற்றுக்கொண்ட கர்ணன் ஒரு சத்திரியன் என்று தெரியவந்ததும், அவன் கற்ற வித்தைகள் அனைத்தும் மறந்து போகும் என்று சாபமிட்டார்.
துர்வாசர்
இராமரையும், சீதையையும் அடர்ந்த வனத்தில் கண்ட துர்வாசர், அவர்கள் இருவரும் விரைவில் பிரிந்து விடுவார்கள் என்பதை கணித்து அறிந்து கொள்கிறார்.
மகாபாரதத்தில் குந்திக்கு கணவனால் குழந்தை பாக்கியம் கிடைக்காது என்பதை ஞானதிருஷ்டியால் தெரிந்து கொண்டதும், அவளுக்கு தேவர்களை அழைக்கும் மந்திரங்களை கற்றுக்கொடுத்தார்.
ஜாம்பவான்
இராமாயணத்தில் இராமருக்கு உதவிய கரடிதான் ஜாம்பவான் ஆவார்.
சுக்ரீவன் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த ஜாம்பவான், அறிவில் சிறந்து விளங்கியதுடன் இராமாயண காலம் முடிந்த பின்னரும் உயிருடன் இருந்தார்.
மகாபாரதத்தில் காணாமல்போன சியமந்த மணியை தேடி கிருஷ்ணர் சென்றார்.
அந்த மணி, ஜாம்பவனிடம் இருந்ததை கண்ட கிருஷ்ணர், அவரிடம் மல்யுத்தம் செய்து அவரை வெற்றி பெற்றார்.
அதையடுத்து ஜாம்பவான், கிருஷ்ணருக்கு சியமந்த மணியையும், தனது மகள் ஜாம்பவதியையும் திருமணம் செய்து கொடுத்தார்.
மாயாசுரன்
இராமாயணத்தில், இராவணனின் மனைவி மண்டோதரியின் தந்தையாக இருந்த மாயாசுரன் என்பவரே, மகாபாரதத்தில் பாண்டவர்களுக்காக இந்திரபிரஸ்தம் நகரை அமைத்து கொடுத்தவராவார்.
மந்தாரை
இராமாயணத்தில் கைகேயி மனதை கலைத்து, இராமருக்கு பட்டம் சூட்டுவதை தடுத்தது மட்டுமல்லாமல், அவரை காட்டுக்கு அனுப்ப பெரும் காரணமாக இருந்தவள் மந்தாரை என்னும் கூனியாவாள்.
இந்த கூனியே, மகாபாரதத்தில் கிருஷ்ணரை சந்தித்து தனது கூன் வடிவம் நீங்கி அழகிய பெண்ணாக மாறி சாப விமோசனம் பெற்றாள்.
அனுமன்
இராமபிரானின் சிறந்த பக்தராக இருந்த அனுமன், இலங்கையில் இருந்து சீதையை மீட்பதில் பெரும்பங்கு வகித்து இராமர், சீதை ஆகியோரின் வாழ்வில் மகிழ்ச்சியை ஏற்படுத்தினார்.
இராவணனின் மகன் இந்திரஜித் நாகாஸ்திரத்தை ஏவியபோது, உயிரிழந்த லட்சுமணன் மற்றும் பல்லாயிரகணக்கான வானர வீரர்களின் உயிரை சஞ்சீவி மலையை கொண்டு வந்து மீட்டார்.
அதேபோல், இராமரின் தம்பி பரதன் தீக்குளிக்க இறங்கியபோது அவனை தடுத்து அவன் உயிரையும் காப்பாற்றினார்.
இராமர், சீதை உள்பட எண்ணற்றவர்களின் உயிரை காப்பாற்றிய அனுமன், இன்றும் சிரஞ்சீவியாக ராமநாமம் ஜெபிக்கும் இடத்தில் வாழ்ந்து வருகின்றார்.
மகாபாரதத்தில், அர்ஜூனன் கொடியில் வீற்றிருந்த அனுமன், பாண்டவர்களின் வெற்றிக்கு காரணமாக இருந்தார்.
மகாபாரதத்தில் அனுமனின் சகோதரராக பீமன் கருதப்பட்டான்.
பரசுராமர், துர்வாசர், அனுமன், ஜாம்பவான் ஆகியோர் யுகங்கள் கடந்தும் வாழ்ந்தனர் என்பதை உங்களுக்கு தெரிந்த முதியவர்கள் எல்லோரும் அறிந்திட ஷேர் செய்யுங்கள்.