download_indicator

இன்று தொலைநோக்கியை கண்டுபிடித்த விஞ்ஞானி கலிலியோ

விஞ்ஞானி கலிலியோ அவர்கள் 1564-ஆம் ஆண்டு பிப்ரவரி 15-ஆம் நாள் பீஸா (பைசா) நகரில் பிறந்தார். இவரது தந்தை வின்சென்ஸோ கலிலி ஒரு இசைக் கலைஞர்.

1570-ஆம் ஆண்டு வின்சென்ஸோ தனது குடும்பத்துடன் புளோரன்ஸ் நகருக்குக் குடிபெயர்ந்தார். அந்நகரின் அருகில் உள்ள வல்லம்புரோஸா எனும் நகரில் இருந்த பள்ளியில் கலிலியோவின் கல்வி தொடங்கியது.

இவருடைய முக்கியக் கண்டுபிடிப்புகளில் முதலாவது எந்திரவியல் தொடர்புடையதாகும். இலேசான பொருள்களை விடக் கனமான பொருள்கள் வேகமாகக் கீழே விழும் என அரிஸ்டாட்டில் கூறியிருந்தார். பல தொடர்ச்சியான பரிசோதனைகள் மூலம் அரிஸ்டாட்டிலின் இந்தக் கூற்று தவறானது என்பதை கலிலியோ விரைவிலேயே கண்டுபிடித்தார்.

இவர் தமது பரிசோதனைகளின் முடிவுகளைக் கொண்டு கணிதச் சூத்திரங்களையும், கணித முறைகளையும் விரிவாகப் பயன்படுத்துவது நவீன அறிவியலின் முக்கிய அம்சமாக விளங்குகிறது என்பதையும் கண்டறிந்தார். சடத்துவ விதியை (Law of Inertia) இவர் கண்டு பிடித்தது மற்றொரு அரிய சாதனையாகும்.

வானின் நட்சத்திரங்கள், கோள்களைப் பற்றி ஆராய தொலைநோக்கியைப் பயன் படுத்திய முதல் நபரும் இவரே ஆவார்.

நவீன வானியலின் தந்தை என்றும் நவீன இயற்பியலின் தந்தை என்றும் அழைக்கப்பட்டார். மேலும், தனது கண்டுபிடிப்புகளால் உலகத்தை அதிரச் செய்தவர்.

வியாழன் கிரகத்தின் நிலவுகள், சனி கிரகத்தைச் சுற்றியிருக்கும் வளையம் உள்ளிட்ட முக்கியமான கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியவர். ஐரோப்பாவின் மறுமலர்ச்சிக் காலத்தில் இவரது கண்டுபிடிப்புகள் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தின.

சூரியனை பூமி உள்ளிட்ட கிரகங்கள் சுற்றிவருகின்றன என்று சொன்ன நிக்கோலஸ் கோபர்நிகஸின் கூற்றை ஆதரித்து கலிலியோ எழுதிய ஆய்வுக் கட்டுரை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

மத நம்பிக்கைகளுக்கு எதிரான வகையில் கலிலியோவின் கருத்து இருந்ததாக அவருக்குக் கண்டனங்கள் எழுந்தன.

தொலைநோக்காடியைக் கண்டுபிடித்தும், அதன் பலனாக அவர் செய்த பற்பல கண்டுபிடிப்புகளும், கலிலியோவுக்கு உலகப் புகழைப் பெற்றுத் தந்தன.

வானியலில் பலவற்றைக் கண்டறிந்த திரு.கலிலியோ அவர்கள், 1642-ஆம் ஆண்டு ஜனவரி 8-ஆம் நாள் தனது 77-ஆம் வயதில் காலமானார்.



Follow Us on