download_indicator

இந்தியாவின் எடிசன் என்று போற்றப்பட்ட மிகச்சிறந்த அறிவியல் மேதையும், மகத்தான கண்டுபிடிப்பாளருமான ஜி.டி.நாயுடு

ஜி.டி.நாயுடு அவர்கள் இந்தியாவின் தமிழகத்தில், கோயம்புத்தூர் மாவட்டம் கலங்கல் கிராமத்தில் 1893-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23-ஆம் நாள் பிறந்தார்.

இவரது இயற்பெயர் கோபால்சாமி துரைசாமி நாயுடு. தந்தையார் பெயர் கோபால் நாயுடு என்பதாகும்.

சிறு வயதிலேயே தந்தையை இழந்தார். படித்தது தொடக்கக் கல்வி மட்டுமே. ஆயினும் ஏராளமான நூல்களை வாங்கிப் படித்து அறிவை வளர்த்துக் கொண்டார். வியாபாரத் திறனும் பெற்றிருந்தார்.

எதைச் செய்தாலும் அதில் தன்னுடைய தனித்தன்மை வெளிப்படவேண்டும் என்று நினைத்தவரை அவருடன் இருந்தவர்கள் விநோதமாய் பார்த்தனர்.

இளம் வயதிலேயே ஜி.டி.நாயுடு அவர்கள் கோவையிலிருந்த ஒரு மோட்டார் தொழிற்சாலையில் பணிக்கு சேர்ந்தார். பணியிலிருந்தபோதே அத்தொழிலின் நுட்பங்களை கருத்தூன்றி படித்து அறிந்துக்கொண்டார்.

வேலையை விட்டுவிட்டு தன்னுடைய ஊதியத்திலிருந்து சேமித்து வைத்திருந்த பணத்துடன் நண்பர்களிடம் கடன் பெற்று திருப்பூரில் ஒரு பருத்தித் தொழிற்சாலையை நிறுவினார்.

திருப்பூரில் பருத்தி ஆலை தொடங்கினார். பெரும் தொழிலதிபராக உயர்ந்தார். தொழிலை விரிவுபடுத்த பம்பாய் சென்ற இவருக்கு எதிர்பாராத விதமாக நஷ்டம் ஏற்பட்டது. வெறுங்கையுடன் வீடு திரும்பினார். ஆனாலும், தோல்வியால் துவளவில்லை.

இந்தியாவிலேயே முதன் முதல் எலெக்ட்ரிக் மோட்டார் உற்பத்தி தொழிற்சாலை இவரால் ஆரம்பிக்கப்பட்டது(நேஷனல் எலக்ட்ரிக் ஒர்க்ஸ்). பல தொழில் ஸ்தாபனங்கள் இவரை பின்பற்றின.

வணிகத் திறமையின் மூலம் குறுகிய காலத்திலேயே திருப்பூரில் மிகப்பெரிய லட்சாதிபதிகளில் ஒருவரானார்.

தனது விடா முயற்சியாலும், தொழில் நுட்ப திறமையாலும் விரைவில் பேருந்து அதிபர் ஆனார். அவரது முதல் பேருந்து பழனிக்கும் பொள்ளாச்சிக்கும் இடையே ஓடியது. அதை ஓட்டிய ஓட்டுனரும் இவரே.

பல்கலைக்கழகப் படிப்பில்லாதிருந்தும் அறிவியல் துறையில் அவர் படைத்த சாதனைகள் பல.

ஜெர்மன் சென்றிருந்தபோது, ஹிட்லரை சந்தித்துப் பேசினார். வெளிநாட்டு தொழில் நுட்ப திறன்களை நேரில் கண்டறிந்து, அதைப்போன்ற தொழில் நுட்ப கருவிகளை உருவாக்கினார்.

தொழில் மேதையான ஜி.டி.நாயுடு, விவசாயத் துறையிலும் வல்லவர். அவர் கண்டுபிடித்த பப்பாளி மரங்கள், பூசணிக் காய் அளவுள்ள பப்பாளிக் காய்களை கொடுத்தது. அதோடு அவர் கண்டு பிடித்த அவரைச்செடி, மரம் போல் வளர்ந்து நல்ல பலனை தந்தது.

விவசாயத் துறையிலும் பல சாதனைகள் புரிந்தார். இவர் கண்டுபிடித்த தாவர ஆராய்ச்சி முடிவுகள் அமெரிக்கர்களையே பிரமிக்க வைத்தன. ஜெர்மானியர்கள் இவருடைய அதிசய பருத்திச் செடிக்கு ‘நாயுடு காட்டன்’ என்ற பெயர் சூட்டி கவுரவித்தனர்.

1938-ஆம் ஆண்டு பதினெட்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள தன்னுடைய போக்குவரத்து நிறுவனத்திற்கு சொந்தமான பேருந்துகளை கோவை வட்டார கழகத்தாரிடம் இலவசமாக ஒப்படைத்தார்.

பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரிகள், பல தொழிற்சாலைகளைத் தொடங்கினார். தமிழக தொழிற்கல்வி நிறுவனங்களின் தந்தை எனப் போற்றப்பட்டார்.

கண்டுபிடிப்புகள்

நுணுக்கமாக அளவிடும் கருவி.

இரும்பு சட்டத்தில் உள்ள நசுக்கல்களையும், வெடிப்புகளையும் கண்டறியும் கருவி (magno flux testing unit).

விநோத உருவம் காட்டும் கண்ணாடி பிளேட்டுகள்.

மோட்டாரின் அதிர்வை சோதிக்கும் இயந்திரம் (auto vibrator testing machine).

காசை போட்டதும் பாடும் தானியங்கி இயந்திரம் (slot singing machine).

ஆரஞ்சு பழம் பிழியும் கருவி.

மண்ணென்னையில் ஓடும் மின் விசிறி.

1952-ல் 70 ரூபாய்க்கு ரேடியோ.

கேமரா லென்ஸ் டிஸ்டன்ஸ் அட்ஜஸ்டர்.

எடிசன் செய்து பார்க்க முயன்ற ஒரு கருவி வோட் ரெக்கார்டிங் மெசின் அப்படி ஒரு கருவியை நாயுடு உருவாக்கிக் காட்டினார்.

ஒரு அங்குலத்தில் இருநூறில் ஒரு பாகம் (1/200) அளவுள்ள மெல்லிய பிளேடு. இதற்கு நார்வே நாட்டு உருக்கு பயன்படுத்தப்பட்டது. இதை கொண்டு ஓர் ஆண்டிற்கு சேவ் செய்து கொள்ளலாம். ஆனால் அரசு அனுமதி தரவில்லை.

கையடக்க எலெக்ட்ரிக் ரேஸர்

தனது கண்டுபிடிப்புகள் நாட்டு மக்களுக்கு பயன்பட வேண்டும் என்பதாலேயே, அவற்றை பதிவு செய்யாமல் வைத்திருந்தார். இவர் மேல் திணிக்கப்பட்ட அதிகபட்ச வரி காரணமாக, இவரது பல கண்டுபிடிப்புகள் நாட்டுக்குப் பயன்படாமல் போய்விட்டன.

அதிகப் படிப்பு படிக்காமலேயே, பல அரிய காரியங்களை ஆற்றி அதிசய மனிதர் என்று பெயர் பெற்றார். இவருக்கு சித்த வைத்தியத்தில் மிகுந்த ஆர்வம் உண்டு. சித்த வைத்திய ஆராய்ச்சியும் செய்து வந்தார். நீரிழிவு, ஆஸ்துமா உள்ளிட்ட பல நோய்களுக்கு மருந்து தயாரித்தார்.

1973-ஆம் ஆண்டின் இறுதியில் 80 வயது ஆனபோது ஜி.டி.நாயுடுவுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இரத்தக் கொதிப்பினாலும், வாத நோயினாலும் அவதிப்பட்டார்.

வேலூர் மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒரு மாத காலம் சிகிச்சை பெற்றார். அதன் பிறகு கோவைக்கு திரும்பி வீட்டில் இருந்தவாரே சிகிச்சை பெற்றார்.

சாதாரண கிராமத்தில் பிறந்து தனது திறமையால் சாதனைகள் பல கண்ட திரு. ஜி.டி.நாயுடு அவர்கள், 1974-ஆம் ஆண்டு தமது 81-வது வயதில் காலமானார்.

கோவை அவிநாசி சாலையில் இவரது கண்டுபிடிப்புகளுடன் கூடிய கண்காட்சி, அருங்காட்சியகம் அவரது அறிவாற்றலை இன்றும் பறைசாற்றுகிறது.



Follow Us on