மீஞ்சூர் பக்தவச்சலம் என்றழைக்கப்படும் திரு. எம். பக்தவச்சலம் அவர்கள், சென்னை மாகாணத்தில் நசரத்பேட்டை எனும் சிறு கிராமத்தில் 1897-ஆம் ஆண்டு அக்டோபர் 9-ஆம் நாள் திருவாளர். சி. என். கனகசபாபதி முதலியார், திருமதி. மல்லிகா அம்மாள் ஆகியோருக்கு மகனாக பிறந்தார்.
சென்னையிலேயே தனது பள்ளிப் படிப்பைப் பயின்றார். சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றார்.
சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றியவர்.
திரு. பக்தவச்சலம் அவர்கள் 1922-ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். 1926-ஆம் ஆண்டில் காங்கிரஸ் காரிய கமிட்டியில் இணைந்தார்.
வேதாரண்யத்தில் நடைபெற்ற உப்பு சத்தியாகிரகத்தின் பொழுது காயமுற்றார். 1932-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய சுதந்திர தின கொண்டாட்டத்தின் பொழுது ஆங்கில அரசால் கைது செய்யபட்டு 6 மாத காலம் சிறை சென்றார்.
1936-ஆம் ஆண்டு நடைபெற்ற நகராட்சி தேர்தலில், சென்னை மாநகராட்சியின் துணை மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பாக பணியாற்றினார்.
1962-ஆம் ஆண்டு, இந்திய தேசிய காங்கிரஸ் சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்றது.
1963-ஆம் ஆண்டு அக்டோபர் 2-ஆம் நாள், காந்தி ஜெயந்தி நாளில், திரு.பக்தவத்சலம் அவர்கள் தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
காங்கிரஸ் ஆட்சியின் பொழுது பதவியில் இருந்த கடைசி முதலமைச்சர் திரு. பக்தவச்சலம் மட்டுமே ஆவார்.
திரு. பக்தவச்சலம் அவர்களுக்கு, திருமதி. ஞானசவுந்திரம்பாள் என்ற மனைவியும், சரோஜினி என்ற பெண் பிள்ளையும் உள்ளனர்.
1987-ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 31-ஆம் நாள் தமது 89-வது வயதில் காலமானார்.